Advertisement

'டவுட்' தனபாலு

மின் துறை அமைச்சர்தங்கமணி: மத்தியில், காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை. கடந்த தேர்தலில், 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். தற்போது, 100ஐ எட்டாத சூழல் தான் அக்கட்சிக்கு உள்ளது.


டவுட் தனபாலு: காங்கிரசை இப்படி விமர்சிக்குறீங்களே... 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்தமுறை, 100ஐ தொடும்கறது வளர்ச்சி தானே... கடந்தமுறை, 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க., இந்த முறை, வெறும், 20 தொகுதிகளில் தானே போட்டியே போடுறீங்க... இதை எப்படிப் பார்ப்பது என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்க...!



தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தமிழக மக்கள் செய்த தவறால், தவறான மனிதர்கள் ஆட்சியில் உள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும், மக்களைப் பற்றி கவலைப்படாத அக்கிரம ஆட்சி நடக்கிறது.


டவுட் தனபாலு: நீங்க இப்படிச் சொல்றீங்க... மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாத அக்கிரம ஆட்சி நடத்தியதால் தான், தி.மு.க.,வால், இரண்டாவது முறையும் தோல்வியைச் சந்தித்ததுன்னு, எதிர்க்கட்சிகள் சொல்றாங்க... இதுல, எதை எடுத்துக்கறது... மக்கள் மீது பழியைப் போடுவதை எப்போ நிறுத்தப் போறீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'


மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, யாரும் ஊக்குவிக்க வேண்டாம். பணம் கொடுத்து, தமிழர்களை கையேந்தும் நிலைக்கு தள்ள வேண்டாம்.


டவுட் தனபாலு: ஓட்டுக்குப் பணம் கொடுப்போர் யாராக இருந்தாலும், அவர்களை, பா.ஜ.,வினர் தடுத்து நிறுத்தி, அவர்களை, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்னு, ஒரு வார்த்தை சொல்லுங்களேன்... நீங்க தயங்குவது, பல, 'டவுட்'களை கிளப்புதே...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement