Advertisement

துக்ளக் தர்பார்...

யாருக்கு ஒட்டுப் போடவேண்டும் என்று மீண்டும் வந்து சொல்கிறார்‛சோ'..
டி.வி.வரதராஜனின் ‛துக்ளக் தர்பாரில்' சுவராசியம்
இன்றைய அரசியலை நையாண்டி செய்யும் அரசியல் நாடகம் என்ற அறிவிப்புடன் அரங்கேற்றமாகி உள்ளது டி.வி.வரதராஜனின் துக்ளக் தர்பார் நாடகம்.


நாடகத்தின் கதாநாயகன் என்றால் நாடகாசிரியரான துக்ளக் சத்யாவைத்தான் சொல்லவேண்டும் காட்சிக்கு காட்சி அவர் எழுதிய வசனங்கள் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.


மேலோகத்தில் மறைந்த பத்திரிகையாளர் சோவும்,நாரதரும், துக்ளக்கும்,அவரது உதவியாளர் பதுாதாவும் சந்தித்துக் கொள்கிறார்கள்.


பூலோகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கப்போகிறது இதில் ஊழல் செய்பவர்கள் யாரும் வெற்றி பெற்றுவிடக்கூடாது நல்லவர்களாக நாற்பது பேர் தேர்வாக வேண்டும், அதைச் செய்துதர எங்களை பூலோகத்திற்கு கொஞ்ச நாள் அனுப்பவேண்டும் என்ற கோரிக்கை ஏற்க்கப்பட்டதால் துக்ளக் தனது உதவியாளருடன் பூலோகத்திற்கு வருகிறார்.


அவர்கள் நேராக சென்னை கடற்கரையில் உள்ள சமாதிக்கு சென்று தியானம் செய்கிறார்கள் போலீசால் விரட்டியடிக்கப்படுகின்றனர்,நல்லது நடக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் முதல்வர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து அவமானப்படுகிறார்கள்.


துக்ளக்கிற்கு கிடைக்கும் அபூர்வ சக்தியாலும்,பிரேக் நியூஸ் நிருபர் ஆலோசனையாலும் எம்எல்ஏ.,க்களை கடத்த ஆரம்பித்து துக்ளக் கட கடவென முதல்வராகிவிடுகிறார்.


முதல்வரான பிறகு அவரால் நினைத்ததை எல்லாம் நடத்த முடிந்ததா?இல்லையா? என்பதுதான் நாடகத்தின் மீதமுள்ள கதை.
நாடகம் முழுவதும் சோ வருவது போல ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு உள்ளது.சோவை அப்படியே அச்சு அசலாக நகல் எடுத்தது போன்ற நடிப்பு, பாடி லாங்வேஜ் பேச்சு கூட அப்படியே.நாடகத்தின் முடிவி்ல் இன்றைய சூழ்நிலையில் யாருக்கு ஒட்டுப்போட வேண்டும் என்று அவர் சொல்வதுடன் நாடகம் நிறைவு பெறுகிறது.
டி.வி.வரதராஜன் தான் துக்ளக்.துக்ளக்கின் அந்த நடையுடன் ஆரம்பிக்கிறது அவரது அமர்களநடிப்பு. தலைமைச் செயலாளருடன் நடத்தும் உரையாடல் படு சி(ரி)றப்பு.
தெலுங்கில் பேசும் தமிழின தலைவி,மிகத் தெளிவாக குழப்பமாக பேசும் நடிகர் சங்கர் ,டிஆர்பி ரேட்டிங்கிற்காக அலையும் நிருபர் ,முதல்வர் கூடவே இருந்து காலை வாரும் பொதுச்செயலாளர் உள்ளீட்ட அனைத்து கேரக்டர்களுமே சிரிப்புக்கு வஞ்சம் வைக்கவில்லை.
கூவாத்துாரில் ஆரம்பித்து இன்றைய கூட்டணி பேரம் வரையிலான நடைமுறை அரசியலை கிழித்து தொங்கவிடும் இந்த துக்ளக் தர்பார் நாடகம் மீண்டும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (24/03/2019) சென்னை திநகர் வாணிமகாலில் மாலை 6 மணி்க்கு நடைபெறுகிறது.
-எல்.முருகராஜ்murugarajdinamalar.in


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement