Advertisement

'மைனஸ்' குறைகிறது ரயில்வே துறையில்...

மத்திய அரசின் கீழ் செயல்படும், மிக பிரமாண்டமான ரயில்வே துறை, ஐந்து ஆண்டுகளாக, பல்வேறு சீர்திருத்தங்களை கண்டு வருகிறது. நம் தமிழகத்தில், பல புதிய, வசதி மிக்க பயணியர் ரயில்கள் விடப்பட்டிருப்பதும், நீண்ட நாளாக ஏங்கிக் கிடந்த, சென்னை - மதுரை இடையிலான, இரட்டை ரயில் பாதை செயல்படத் துவங்கி இருப்பதும், நமக்கு நம்பிக்கை தருபவை.

அதே சமயம், முற்றிலும், 'ஏசி' வசதி கொண்ட, மதுரைக்கான, 'தேஜஸ்' பயணியர் ரயில், நமக்கு எதற்கு? சாதாரண பெட்டிகள் போதுமே என்றால், அதற்கும் பதிலாக, செங்கோட்டை வரை செல்லும், 'அந்தியோதயா' ரயில் வசதி இருக்கிறது. அடுத்ததாக சமீபத்தில், தாம்பரம் - நாகர்கோவில் சர்வீசும் துவங்கியிருக்கிறது. பொதுவாக, பிரதமர் மோடி, அப்பதவிக்கு புதியவர் என்பதை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, எல்லாரும் அறிவர். அதை, அவரும் ஒப்புக் கொண்டது, அவரது பெருந்தன்மை. ஆனால், இன்று உலகம் முழுவதும் அறிந்த தலைவர். அதேபோல, மத்திய அமைச்சரவையில் உள்ள, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலும் புதுமுகம்.

ஆனால், தமிழக கூட்டணி பேச்சில் அவர் பங்கேற்ற விதம், நிதியமைச்சர் ஜெட்லி உடல்நலம் குன்றியிருந்தபோது, பட்ஜெட்டை சிறப்பாக கையாண்ட விதம், அவரை அடுத்த, பா.ஜ., ஆட்சிக்கு, ஒரு முக்கிய அமைச்சராக காட்டும்.கணக்கு தணிக்கையாளரான அவர், ரயில்வே பொறுப்பை ஏற்றதும், மிகப் பிரமாண்டமான இப்பொதுத் துறை, சிறிது, சிறிதாக பல்வேறு பிரச்னைகளுடன், வளர்ச்சி மற்றும் நிதிப் பற்றாக்குறையுடன் இருப்பதை அறிவித்திருக்கிறார்.

இதற்கு முன், மம்தா, லாலு உட்பட பலர், இப்பதவியில் இருந்த போதும், ரயில்வே துறை சீர்திருத்தப் பாதையில் இத்தடவை செல்வதை, பாரபட்சமின்றி செயல்படுவோர் அங்கீகரிப்பர். உடனே, மத்திய பட்ஜெட்டில், ரயில்வே பட்ஜெட்டை சேர்த்ததால், அதிக நிதி கிடைக்கவில்லை என்பது, சரியான வாதம் அன்று.ஆனால், ரயில்வே டிவிஷன்களில் உள்ள தலைமை அதிகாரிகள், கட்டுக்கோப்புடன், கண்டிப்பாக வளர்ச்சியை நோக்கி செயல்படும் நிர்வாகத்தை படிப்படியாக தந்த முறை, ரயில்வே மாற்றத்தை நோக்கி, முதல் அடி எடுத்திருக்கிறது எனலாம்.

ஏனெனில், நம் தெற்கு ரயில்வே, தம் ஐந்து ஆண்டு கால தகவல் தொகுப்பு வெளியிட்டிருப்பதில், சில தகவல்கள் உள்ளன. கடற்கரை, தாம்பரம், திருவள்ளூர் போன்ற இடங்களில், ரயில் சர்வீசை பயன்படுத்துவோர் அதிகம். பொதுவாக, லோக்கல் சர்வீஸ்களில், பஸ் கட்டணத்தை விட, ரயில் கட்டணம் குறைவு என்பதும், இதற்கு காரணம்.அதிலும், தத்கல் முறையில், கடைசி நேர டிக்கெட் வசதி, அடுத்தடுத்த வசதிக்கான எளிய முறை மற்றும் அதிவேக சர்வீஸ், ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கையில் உள்ள பட்டியலில் காணப்படும், 'காலி பெர்த்' குறையும். அதைத் தவிர, முதியோர் கட்டணத்தில் சலுகையுடன், அவர்களுக்கு கீழ் படுக்கை வசதி அதிகம்.

தெற்கு ரயில்வே வெளியிட்ட ஐந்து ஆண்டு கால பட்டியலில், பயணியர் டிக்கெட் கட்டண வசூல், முதலில் இருந்த, 36 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 42 ஆயிரத்து, 500 கோடியாக அதிகரித்திருக்கிறது. அதே சமயம், 'ஏசி' வசதி பெட்டிகள் அதிகரிப்பால், சாதாரண படுக்கை வசதி சீட், முக்கிய ரயில்களில் இல்லை என்றோ அல்லது விசேஷமாக விடப்படும் ரயில்களில், அதிக கட்டணம் இருப்பதால், அவற்றில், 20 முதல், 30 சதவீத சீட் காலியாக இருப்பதாக புகார் கூறலாம்.

அதே சமயம், மிகவும் குறைந்த கட்டண டிக்கெட்டுகளை பெற்ற பலர், புறநகர் ரயில்களில் சர்வ சாதாரணமாக, முதல் வகுப்பு சீட்டில் அமர்ந்து பயணிப்பதை, இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. அதைத் தடுப்பது, அவ்வளவு எளிதல்ல.நகரும் படிக்கட்டு வசதியை, முறையாக பயன்படுத்தத் தெரியாத அளவில், 20 சதவீத பயணியர் இருப்பது பரிதாபம். காரணம், வாழ்க்கையில் புதிய உணவு வகைகள், புதிய ஆடை அணிகலன்களை அறிந்தவர்கள், பொதுத்துறை போக்குவரத்தை அதிக வசதிகளுடன் முறையாக பயன்படுத்தப் பழக்கப்படாததற்கு, இத்தனை நாளாக, ரயில்வே போர்டு செயல்பட்ட குறைகளுக்கு அடையாளம்.

தவிரவும், இந்த ஐந்து ஆண்டுகளில், பெரிய ரயில் நிலையங்களில் காணப்படும் சுற்றுப்புற சுத்தம், ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடக்கும் என, எதிர்பார்த்திருக்க முடியாது.ரயில்வே துறையில் பணியாற்றுவோர், யூனியன் நடைமுறையில் இருந்தாலும், அவரவர், தங்கள் பணியைக் கையாள வேண்டிய காலம் வந்திருப்பதையும், புதிதாக பல்வேறு பணிகளுக்கு, உரிய இளைஞர்களை தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதும், ரயில்வே புதிய போக்குவரத்து வசதியாக மாறுவதின் அடையாளம். புறநகர் சர்வீஸ், மற்ற முக்கிய நகரங்களுடன் இணைப்பு போக்குவரத்து வசதிகளை, மாநில அரசுடன் சேர்ந்து, அதிவிரைவாக அமலாக்கம் செய்வது, இப்போதைய முக்கியத்துவம் ஆகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement