Advertisement

நடிகர்களின், எம்.பி., கனவை தகர்த்த, பா.ஜ., மேலிடம்!

''ஆளுங்கட்சிக்கு ஆப்பு வச்சிடுவாரோன்னு பயப்படுதாவ வே...'' என, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.

''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''தேர்தலுக்காக, அதிகாரிகளை எல்லாம் மாத்தினாங்கல்லா... அப்ப, தாம்பரம் நகராட்சி சுகாதார அதிகாரியை, தேனிக்கும், தேனியில இருந்தவரை, தாம்பரத்துக்கும் மாத்தினாவ வே... ''தாம்பரம் வந்த அதிகாரி, தென் மாவட்ட அமைச்சர் ஒருத்தரை பிடிச்சு, ஒரே வாரத்துல, தேனி மாவட்டம், சின்னமனுார் நகராட்சிக்கு போயிட்டாரு... இப்ப, தாம்பரத்துக்கு, அரக்கோணத்துல இருக்கிறவரை, புதுசா போட்டிருக்காவ வே... ''இவர், இதுக்கு முன்னாடி, தாம்பரத்துல, பணியில இருந்தவர் தான்... அப்ப, அந்தப் பகுதி, அ.தி.மு.க., புள்ளிகள், உள்ளாட்சி தேர்தல்ல ஜெயிக்க, முழு ஆதரவா இருந்திருக்காரு வே... ''அந்த புள்ளிகள் எல்லாம், இப்ப, தினகரனின், அ.ம.மு.க.,வுல இருக்காவளாம்... பழைய பாசத்துல, அவங்களுக்கு அதிகாரி உதவ ஆரம்பிச்சா, ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில வர்ற தாம்பரம் சட்டசபை தொகுதியில, ஆளுங்கட்சிக்கு அடி விழுந்துடுமோன்னு, அ.தி.மு.க.,வினர் பயப்படுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''மொய்தீன் நாளைக்கு பார்க்கலாம்...'' என, நண்பருக்கு விடை தந்தபடியே வந்த அன்வர்பாய், ''தன் ஆதரவாளருங்கிறதால, பதவி குடுத்திருக்காரு பா...'' என, அடுத்த தகவலுக்குள் நுழைந்தார்.

''யாருக்கு, யாருங்ணா பதவி குடுத்தது...'' என, விசாரித்தார் கோவை, கோவாலு.

''மதுரை புறநகர் மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.,வுமான, ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலரான இவர், முதல்வர், இ.பி.எஸ்.,சின் தீவிர ஆதரவாளர்... இவர், செயலர் பதவிக்கு ஆசைப்படுறாரு பா... ''ஆனா, செயலர் பதவியில இருக்கிறவர், துணை முதல்வரின் ஆதரவாளர்... அவரை மாத்திட்டு, இவரை போட முடியாதுங்கிறதால, ராஜ் சத்யனை, விளையாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினரா, முதல்வர் நியமிச்சிருக்காரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''சட்டசபை தேர்தல்ல பார்த்துக்கலாம்னு, பக்குவமா சொல்லிட்டாளாம் ஓய்...'' என, கடைசி விஷயத்தை கையில் எடுத்தார், குப்பண்ணா.

''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''நடிகர்கள், எஸ்.வி.சேகரும், நெப்போலியனும், பா.ஜ.,வுல இருக்கற இடம் தெரியாம இருந்தாலும், அவாளுக்கும், எம்.பி., ஆசை வந்துடுத்து... இதுல, நெப்போலியன், ஏற்கனவே, எம்.பி., மத்திய அமைச்சர் பதவிகள்ல இருந்திருக்கார் ஓய்... ''எஸ்.வி.சேகருக்கு, தென்சென்னை மேல ஒரு கண்ணாம்... இது போக, இவா கூட்டணியில இருக்கற, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர், தேவநாதன் யாதவ், 'சிவகங்கையில, 'சீட்' தந்தே ஆகணும்'னு, பியுஷ் கோயல் மூலமா துாது அனுப்பிச்சிருக்கார் ஓய்... ''பா.ஜ., மேலிடமோ, 'கிடைச்ச அஞ்சு, 'சீட்'டுக்கே, அடிதடியா இருக்கு... இவாளுக்கெல்லாம், சட்டசபை தேர்தல்ல கண்டிப்பா சீட் குடுத்துடலாம்'னு சொல்லிடுத்தாம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • A R J U N - ,இந்தியா

    ஆளும் கட்சி துணை இருந்தால் எந்த அப்பாவையோ கஷ்ட்டப்படவேண்டிய நிலைமை..ஆளும் கட்சி செல்வாக்கு..அப்படி

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நெப்போலியனுக்கும் சேகரிக்கும் இன்னும் எதுக்கு பதவி ஆசை

" "
Advertisement