Advertisement

என் போனை அதிகாரிகள் எடுப்பதில்லை: தி.மு.க., - எம்.எல்.ஏ., பேச்சால் கலகலப்பு

செங்குன்றம்:தி.மு.க., சார்பில், மாதவரம் தொகுதியில் நடக்கும், கிராமசபை கூட்டங்களில், எம்.எல்.ஏ.,வை, பொதுமக்கள் கலாய்ப்பதால், கூட்டம், கலகலப்பாக அரங்கேறி வருகிறது.சென்னை, மாதவரம் தொகுதியில் உள்ள ஊராட்சிகளில், தி.மு.க., சார்பில், கிராம சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன. தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம் பங்கேற்று, மக்கள் குறைகளை கேட்டறிகிறார்.கிராம சபை கூட்டங்களில் பங்கேற்கும் அவர், ஆரம்பத்தில், அங்கு வருவோருக்கு, பரிசாக, 'சோன்பப்டி' இனிப்பு பாக்கெட்டுகளை வழங்குகிறார்.அதன் பின், பெண்கள் கூட்டத்தை சேர்க்க, சில ஊராட்சிகளில், இலவச புடவைகள் வழங்குகிறார்.தற்போது, புதிய வாக்காளர்களான, இளைஞர்களை கவரும் வகையில், கிராமங்களில் உள்ள விளையாட்டு குழுக்களுக்கு, கிரிக்கெட் மட்டை, கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை, நினைவு பரிசாக வழங்குகிறார்.பெரும்பாலான கூட்டங்களில், பொதுமக்களை விட, தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களே கலந்து கொள்கின்றனர். ஒரு சில ஊராட்சிகளில், எம்.எல்.ஏ., இரவு, 7:00 மணிக்கு மேல், கிராம சபை கூட்டங்களில் பங்கேற்கிறார்.அப்போது, அங்குள்ளவர்கள், 'தலைவர் ஸ்டாலின், கிராம சபை கூட்டத்தை காலையில் நடத்தி முடிக்கிறார்; இவர், அவரையும் மிஞ்சி, இரவில் நடத்துகிறாரே' என, கிண்டலடிப்பதும் தொடர்கிறது.கூட்டத்தில் பங்கேற்பவர்களிடம், 'உங்கள் பகுதியில் என்ன பிரச்னை?' என, கேட்கிறார். அவர்களும், கழிவுநீர், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தெரிவிக்கின்றனர்.அப்போது, 'அ.தி.மு.க., ஆட்சியில் எந்த வேலையும் நடப்பதில்லை. இன்னும், மூன்று மாதத்தில், எம்.பி., தேர்தல் வருகிறது. 'அப்போது, உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். தி.மு.க., உங்கள் பிரச்னையை தீர்த்து வைக்கும்' என, 'கூலாக' பேசுகிறார்.அங்குள்ளவர்கள், 'அதுவரை, எங்கள் பகுதி பிரச்னை தீராது என்கிறீர்களா?' என, அவரை எதிர் கேள்வியில் மடக்கினால், 'சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்' என்கிறார்.'அதிகாரிகளிடம் புகார் செய்தும், பிரச்னை தீரவில்லை என்று தான், எம்.எல்.ஏ.,வான உங்களிடம் சொல்கிறோம். 'நீங்கள், மீண்டும் அதிகாரிகளை பாருங்கள், எம்.பி., தேர்தலில், தி.மு.க., வுக்கு, ஓட்டு போடுங்கள் என்றால் எப்படி? இந்த தொகுதி, எம்.எல்.ஏ., நீங்கள் தானே?' என, கலாய்க்கின்றனர்.அப்போது, 'நான் போன் செய்தால், அதிகாரிகள் எடுப்பதில்லை' என, 'காமெடி' செய்து, கூட்டத்தினரை சிரிக்க வைக்கிறார்.இப்படி, மாதவரம் தொகுதியில் நடக்கும், தி.மு.க., கிராம சபை கூட்டம், 'காமெடி டைம்' ஆக, கலகலப்பாகவே முடிகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement