Advertisement

மக்கள் வரிப்பணம் மீண்டும் பாழ்! பொங்கல் பரிசை தொடர்ந்து அடுத்த அதிரடி

சென்னை: மக்கள் வரிப்பணம் மீண்டும் பாழாகிறது. பொங்கல் பரிசை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 'இனாம்' வழங்க, 1,200 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. லோக்சபா தேர்தலும், 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நெருங்குவதால், 'ஐஸ்' வைக்கும் விதமாக, 60 லட்சம் குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் இலவசம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தவிக்கும், தமிழக அரசுக்கு, இது, மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தப் போவது உறுதி. ஆனாலும், இலவசமாக கொடுக்கப்படும் துட்டு, வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவான ஓட்டாக மாறும் என, அரசு எதிர்பார்க்கிறது.

லோக்சபா தேர்தல், விரைவில் வர உள்ள நிலையில், மத்திய அரசு, பிப்., 1ல், இடைக்கால பட்ஜெட்டை அறிவித்தது. பட்ஜெட்டில், சிறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்குவது உட்பட, மக்களை கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

எதிர்பார்ப்பு:அதைத் தொடர்ந்து, தமிழக பட்ஜெட்டிலும், லோக்சபா தேர்தலை ஒட்டி, மக்களை கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பிப்., 8ல், துணை முதல்வர், பன்னீர்செல்வம், 2019 - 20ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, தாக்கல் செய்தார். அதில், மக்களை கவரும் வகையில், முக்கிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. துறை ரீதியான திட்டங்கள் மட்டுமே இருந்தன.

ஏற்கனவே, பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு பொருட்களுடன், தலா, 1,000 ரூபாய் இனாம் வழங்கப்பட்டது. இதற்கு, 2,250 கோடி ரூபாய், வரிப்பணம்செலவிடப்பட்டு விட்டது. எனவே, கடும் நிதிச் சுமை காரணமாக, பட்ஜெட் அறிவிப்பில் அடக்கி வாசிக்கப்பட்டதாக, அரசு தரப்பில் தகவல் வெளியானது. இந்தச் சூழ்நிலையில், 'வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, ஏழை குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இந்த துட்டு, ஓட்டாக மாறுமா என்பது தெரியவில்லை. எனினும், மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மக்கள் வரிப்பணம் மீண்டும் பாழாக்கப்பட உள்ளது. அரசின் கடன், 3.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பால், மேலும் கடன் சுமை கூடும்.


கூடியது சபை:பட்ஜெட் தாக்கலுக்கு பின், தமிழக சட்டசபை, நேற்று மீண்டும் கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர், இ.பி.எஸ்., சபை விதி, 110ன் கீழ், வெளியிட்ட அறிவிப்பு:பல மாவட்டங்களில், 'கஜா' புயல் தாக்கத்தாலும், பருவ மழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியாலும், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, அனைத்து ஏழை குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு, தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக, தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும்.

60 லட்சம் குடும்பங்கள்:இதனால், விவசாயம், கட்டுமானம், சலவை, மீன் பிடி, நெசவு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள, ஏழை தொழிலாளர்கள் பயன் பெறுவர். கிராமங்களில் வாழும், 35 லட்சம் ஏழை குடும்பங்கள்; நகர பகுதிகளில் வாழும், 25 லட்சம் ஏழை குடும்பங்கள் என, மொத்தம், 60 லட்சம் குடும்பத்தினர், தலா, 2,000 ரூபாய், சிறப்பு நிதியுதவி பெறுவர். இதற்கான செலவுக்கு, 1,200 கோடி ரூபாய், அரசின் துணை மானிய கோரிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (90)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இந்தப்பணம் கண்டிப்பாக ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியே. மற்றப்படி இப்படி செய்வது மிக தவறான முன்னுதாரணம். நீதிமன்றங்களே முன் வந்து தடுக்க வேண்டும்.இந்த பணம் சாலைகள் அமைக்கவும்.போக்குவரத்து வாகனங்களை வாங்கவும் சுகாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் விவசாயாக்கடன் ,சிறு தொழில் துடைக்க உதவி என்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் பயன் படுத்தலாம்.மற்றப்படி இது இருபது ரூபாய் டெக்னீக் மாத்திரமே .

 • Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா

  மிக தவறான முடிவு. உண்மையான ஏழைகள் சற்றும் ஆரவாரம் இல்லாமல் தங்கள் கடமையை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த பணம் முழுவதும் திரும்ப போகும் டாஸ்மாக் வழியாக.

 • Kumar - Abu Dhabi,இந்தியா

  இது சரி தானா என்று மக்கள் தான், தங்கள் ஜனநாயக கடமையாற்றும் போது தெரிவிக்க வேண்டும்...

 • Viswanathan - karaikudi,இந்தியா

  தமிழகத்தை மற்றுமொரு வெனிசுலா ஆக மாற்ற திராவிட கட்சிகள் முயல்கின்றன . இது தமிழனுக்கு புரிய வில்லை . இந்த தமிழக அரசியல் வாதிகள் தமிழனை ஓட்டாண்டி ஆக்கி விட்டு , தாங்கள் கொள்ளை அடித்த பணத்தோடு வெளிநாடுகளில் போய் செட்டில் ஆகி விடுவார்கள் . . பின் ரொட்டி துண்டு கூட கொடுக்க நாதி இல்லாமல் அண்ணா அறிவாலயத்திலும் மெரினாவில் உள்ள திராவிட தலைவர்களின் சமாதியிலும் போய் ஒப்பாரி வைக்க வேண்டி இருக்கும்

 • metturaan - TEMA ,கானா

  கிடைக்கறதை எல்லாம் சரி சரினு வாங்கி போட்டுக்கிட்டு.. கட்டும் போது கவலைப்படப்போறோம்

Advertisement