Advertisement

ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தும் பெண் தாசில்தார்!

''கமிஷன் குடுக்கிறதால, கண்டுக்காம இருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் சங்கமித்தார் குப்பண்ணா.

''எந்தத் துறை விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''பிளாஸ்டிக் பொருட்களுக்கு, அரசு தடை போட்டிருக்கோல்லியோ... 'டாஸ்மாக் பார்'களின் வருமானத்துல, 60 சதவீதம், பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாக்கெட் விற்பனையில தான், கிடைச்சுண்டு இருந்துது ஓய்...''இந்த உத்தரவால, அவாளுக்கு தான் பெரிய அடி... இருந்தாலும், பார்கள்ல, எவர்சில்வர், கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்த ஆரம்பிச்சா ஓய்... இப்ப, அதெல்லாம் சரிப்பட்டு வரலை... ''அதனால, சத்தமே இல்லாம, நிறைய பார்கள்ல, பிளாஸ்டிக் டம்ளர்கள், வாட்டர் பாக்கெட்டுக்கு மாறிண்டிருக்கா... இதை கண்டுக்காம இருக்க, மாவட்ட மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, வழக்கமா தர கமிஷனையும், உசத்திட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், அரசியல் தயவுல, காரியத்தை சாதிச்சு போடுதாங்களாமா...'' என்றார் கோவை, கோவாலு.''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''நீலகிரி மாவட்டத்துல, 'மாஸ்டர் பிளான்' சட்டம், அமல்ல இருக்குங்ணா... ''இப்ப இருக்கிற கலெக்டர் அம்மணி, இன்னசென்ட் திவ்யா, இயற்கை வளத்தை பாதுகாக்கவும், காடுகள் எல்லாம் கட்டடங்களா மாறிட்டு வர்றதை தடுக்கவும், நடவடிக்கை எடுத்துட்டு இருக்காங்களாமா...''ஆனா, வசதி படைச்ச பலர், ஆளுங்கட்சி பெரும் புள்ளிகளை பிடிச்சு, ஊட்டி, கோத்தகிரி, குன்னுார்ல எல்லாம், விதிகளை மீறி, பல கட்டடங்களை கட்டிட்டு இருக்காப்புல... ''இதை தடுக்க, கலெக்டர் நினைச்சாலும், அமைச்சர்கள் மட்டத்துல இருந்து, நெருக்கடி வர்றதால, ஒண்ணும் செய்ய முடியாம தவிக்கிறாங்ணா...'' என்றார் கோவாலு.

''இயற்கைக்கு கோவம் வந்தா, எல்லாத்தையும் சரிச்சிடும் பார்த்துக்கோ...'' என, அண்ணாச்சி, முணுமுணுத்தார். பின், ''சென்னையில, ஐ.டி., நிறுவனங்கள் அதிகமா இருக்கிற பகுதியின், பெண் தாசில்தார் கதையை கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''இங்கே, நிறைய புறம்போக்கு நிலங்களை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு, பெண் அதிகாரி தாரை வார்த்து குடுத்திருக்காங்க... ''அதோட, சில நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளுக்கும், தாசில்தாரின் ஆசி இருக்கு... இதுக்கு, ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரிகள் சிலரும், உடந்தையா இருந்திருக்காவ வே...

''அரசின் வருவாய்த் துறை முத்திரையை, ஓய்வு பெற்ற சில ஊழியர்கள், முறைகேடா நில விவகாரங்களுக்கு பயன்படுத்திய விவகாரம், சமீபத்துல வெடிச்சிருக்கு... இதை விசாரிச்சப்ப தான், பெண் தாசில்தாரின் முறைகேடுகள், வெளிச்சத்துக்கு வந்திருக்கு வே...''அதோட, பெண் அதிகாரி, தி.நகர்ல, ரியல் எஸ்டேட் நிறுவனமே நடத்திட்டு இருக்கிற தகவலும் தெரிஞ்சிட்டு... அதிர்ச்சியான கலெக்டர், தாசில்தாரை, ஒரு வாரத்துக்கு முன்னாடி, வேற இடத்துக்கு மாத்தினாரு... ''ஆனா, ரெண்டு, மூணு நாள்லயே, அந்த தாசில்தார், அரசியல், உயர் அதிகாரிகள் தயவுல, ஜம்முன்னு பழைய இடத்துலயே வந்து உட்கார்ந்துட்டாங்க வே...'' என்றார் அண்ணாச்சி.

''சரி... சோழிங்கநல்லுார் வரை போய், என் சிஸ்டர் நிர்மலாவை பார்த்துட்டு வந்துடறேன் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • A R J U N - ,இந்தியா

  ......வருவாய்த் துறை முத்திரையை, தாசில்தார் அம்மணிக்கு எந்த .... இல்ல. இல்ல மந்திரி. RECOMEND பண்றார்..

 • Kalyanaraman -

  முறைகேடு ,லஞ்சம்,ஊழல் செய்பவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது அல்லது பணியிடை நீக்கம் செய்வது இதெல்லாம் ஒரு தண்டனையா? தனது செல்வாக்கால் மீண்டும் பணிக்கு அதே இடத்திற்கு வந்து முன்பைவிட புத்திசாலித்தனமா ஊழல் செய்யப் போறாங்க. விஷயம் உண்மைன்னு தெரிஞ்சா கைது பண்ணி சிறையிலே போட்டுட்டு அவர் மற்றும் குடும்பத்தினர் சொத்துக்களை பறிமுதல் பண்ணுங்க. எவனாவது சிபாரிசுக்கு வந்தா அவனை அடுத்த செல்லுல போடுங்க. தானா எல்லாரும் திருந்துவான்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இந்த தாசில்தாரின் பயோ டேட்டா வெளியிடக்கூடாதோ?

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நிர்மலா குடும்பத்துடன் ஷேமமா வாழனும் பகவான் அருள்மழை பொழியனும்

Advertisement