Advertisement

பாரபட்சம்! தொழில் நிறுவனங்களுக்கு பட்டா வழங்குவதில்.முடங்கும் அபாயத்தில் கிண்டி தொழிற்பேட்டை

சென்னை:கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, தொழில் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களுக்கு, பட்டா வழங்காததால், வங்கி கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தொழில் நடத்த முடியாமல், நிறுவனங்களை வேறு இடத்திற்கு மாற்ற, உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் முதல் முறையாக, கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டை, 1958ல் உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு, 404 ஏக்கர். மொத்தம், 250 உற்பத்தி தொழில் நிறுவனங்களுடன், இந்த தொழிற்பேட்டை துவங்கப்பட்டது.தற்போது, 600க்கும் மேற்பட்ட உற்பத்தி மற்றும் சேவைத்துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.துவக்கத்தில், தொழிலுக்கு ஏற்ப, 240 சதுர அடி முதல், 0.5 ஏக்கர் வரை, நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கு, அரசு குறைந்த வாடகை வசூலித்தது.தொழில்கள் நலிவடைந்த போது, வங்கி கடன் வசதிக்காக, 1982ல், அவரவர் இடங்களை விலை நிர்ணயம் செய்து, அரசு வழங்கியது. இதையடுத்து, தொழில்கள் வளர்ச்சி அடைந்தன.தற்போது, வங்கிகள், தொழில் கடன் வழங்க, அதிக நிபந்தனைகள் விதித்துள்ளன. குறிப்பாக, இடம் தொடர்பான பட்டா, சிட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்கள் கேட்பதால், கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இடத்தை, 1982ல், அரசு விலை நிர்ணயம் செய்து கொடுத்த போது, பட்டா வழங்கவில்லை. ஐந்து ஆண்டுகளில், அதிகாரத்தை பயன்படுத்தி, 46 பெரிய நிறுவனங்கள் மட்டும், பட்டா வாங்கி உள்ளன. இதற்காக, அரசு தனி உத்தரவு பிறப்பித்துள்ளது.பங்குதாரர் சேர்க்கைஆனால், சிறு, குறு தொழில் நடத்துவோர், பட்டா கிடைக்காமல், தொழிலை மேம்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால், வேலைவாய்ப்பும் குறைய வாய்ப்புள்ளது.பட்டா இல்லாததால், வங்கி கடன், பங்குதாரர் சேர்க்கை என, பல்வேறு பிரச்னைகளை, தொழில் நிறுவனங்கள் சந்திக்கின்றன.பலர், தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். இதனால், தொழில் நிறுவனங்கள் இல்லாத, கிண்டி தொழிற்பேட்டையாக மாற வாய்ப்புள்ளது.அரசு, விலையாதாரமாக கொடுத்த இடத்திற்கு, பட்டா வழங்க, வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழில் நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.இது குறித்து, பட்டா கேட்டு காத்திருப்போர் கூறியதாவது:தொழில் முன்னேற்றம் சார்ந்த திட்டங்களுக்கு, பல கூட்டங்களை அரசு நடத்துகிறது; திட்டங்கள் போடுகிறது. ஏற்கனவே, நாங்கள் நடத்தும் தொழிலுக்கு, எந்தவித ஊக்கமும் அளிப்பதில்லை.நடவடிக்கை இல்லைஎங்களின் பிரதான கோரிக்கை, பட்டா தான். மொத்தம், 264 பேர், பட்டா கேட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளோம். நான்கு ஆண்டுகள் ஆகியும், நடவடிக்கை இல்லை.அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை என, அதிகாரிகள் கூறுகின்றனர். இதில், 46 பெரிய நிறுவங்களுக்கு, பட்டா வழங்கி உள்ளனர். சிறிய நிறுவனங்களான எங்களை, முன்னுரிமை அடிப்படையில் அரசு ஊக்குவிக்க வேண்டும்.சிட்கோ நிர்வாகமும், முறையாக அழுத்தம் கொடுப்பதில்லை. அமைச்சர்கள், நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கனிவாக பேசுகின்றனர்; நடவடிக்கை தான் இல்லை.கடன் கிடைக்காமல், தொழில் நடத்த முடியாமல், சில நிறுவனங்கள் வேறு இடத்திற்கு மாறி வருகின்றன. இப்படியே நீடித்தால், மொத்த தொழில் நிறுவனங்களும், வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.இங்குள்ள, வேலை வாய்ப்புகள் குறையும். நிலைமையை உணர்ந்து, அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இது குறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:மனு கொடுத்த அனைவரும், பட்டா பெற தகுதியானவர்கள் தான். இங்கு, 1982ல், இடத்தை விலை நிர்ணயம் செய்து வழங்கும்போது, வருவாய் ஆவணத்தில், இடத்தின் வகைப்பாடு மாற்றம் செய்யப்படவில்லை. அரசு, தனி உத்தரவு பிறப்பித்தால் தான், பட்டா வழங்க முடியும். உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement