Advertisement

கலப்பட கூட்டணி! காங்கிரசை காய்ச்சியெடுத்த மோடி

திருப்பூர்: தமிழகத்துக்கான பல்வேறு திட்டங்கள் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா, திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுாரில் நேற்று நடந்தது. திருப்பூரில், 100 படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனை, சென்னை மற்றும் திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னை, கே.கே. நகரில், 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனை மருத்துவ கல்லுாரி, சென்னை துறைமுகம் முதல் மணலி சுத்திகரிப்பு நிலையம் வரையிலான புதிய கச்சா எண்ணெய் குழாய் பதிப்பு திட்டங்களையும், சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்பின் அரசு விழா மேடைக்கு, 50 மீ., தொலைவில் நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி, காங்., கட்சியையும், அதன் தலைவர்களையும் விளாசித்தள்ளினார். 'பேமிலி பேக்கேஜ்'ஜாக ஜாமின் கேட்டு அலைகிறார்கள்' என, காங்., மூத்த தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா கணவர் வாத்ரா, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திசிதம்பரம் ஆகியோரையும், 'ரி கவுன்டிங் மினிஸ்டர்' என, சிதம்பரத்தையும் வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். அதுமட்டுமின்றி, 'ஆழி முதல் ஆகாயம் வரை ஊழல் செய்தது காங்கிரஸ்' என்றும் கடுமையாக சாடினார்.

திருப்பூர், பெருமாநல்லுாரில் நேற்று நடந்த பா.ஜ.,பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: நொய்யல், காவிரி, அமராவதி ஆறுகள் பாயும் இந்த பூமிக்கு நான் வந்துள்ளது மிகப்பெரிய புண்ணியம். திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை போன்றோர் வாழ்ந்த மண் இது. இவர்களின் தைரியம், துணிச்சல் நாட்டு மக்களுக்கு வெற்றியை வழங்கி வருகிறது. தொழில் முனைவோர் மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுள்ளவர்கள் வாழும் பகுதி இந்த கொங்கு மண்டலம்; இங்குள்ள மக்கள், நாட்டுக்கே உதாரணமாக உள்ளனர்.
திருப்பூரிலுள்ள தொழில் முனைவோர் குறித்து பேசும் போது, ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். கடந்த இரண்டு வாரங்களாக 'மீண்டும் நமோ' என்ற 'டி-ஷர்ட், 'குல்லா' ஆகியவற்றை இளைஞர்கள் பலரும் விரும்பி அணிக்கின்றனர்; அவை, இந்த திருப்பூர் மண்ணில் இருந்துதான் தயாராகிறது.

முன்னேற்ற திட்டங்கள்:இங்குநான் பல முன்னேற்ற திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன். திருச்சி விமான நிலையத்தில் அதிகபட்ச போக்குவரத்து நெரிசலின் போது, 500 பேர் தான் சென்று வர முடியும். அங்கு, ஒருங்கிணைந்த கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கட்டடம் கட்டி முடிக்கப்படும் போது, 3,000 பேர் ஒரே நேரத்தில் வந்து செல்ல முடியும். நாட்டு மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
திருப்பூரில், லட்சக்கணக்கான தொழிலாளர் பயன்பெறும் வகையில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திருச்சியில் ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டடம், சென்னை விமான நிலையத்தில் புதிய வசதிகள், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை - மணலி இடையே, புதிதாக கச்சா எண்ணெய் குழாய் பொருத்தும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும்.

ஆழி முதல் ஆகாயம் வரை...பா.ஜ., அரசின் செயல்பாடு, முந்தைய அரசின் செயல்பாடுகளை விட முற்றிலும் மாறுபட்டது. முந்தைய காங்கிரஸ் அரசு, இடைத்தரகர்களின் நலன் கருதி செயல்பட்டு வந்தது. ஆழி முதல் ஆகாயம் வரை அனைத்து துறைகளிலும் ஊழல் இருந்தது. ஊழலுக்கு இடைத்தரகர்களாக செயல்படுபவர்கள், தலைவர்களுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர்.
மத்திய அரசின் தேச பாதுகாப்பு அணுகுமுறை, வித்தியாசமானது. ராணுவ தளவாட துறையில் தன்னிறைவு பெற விரும்புகிறோம். பாதுகாப்பு துறை சார்ந்து, இரண்டு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதில் ஒன்று, தமிழகத்தில் அமைய உள்ளது. இதன் மூலம், தமிழக இளைஞர்கள் அதிகளவில் வேலை வாய்ப்பு பெறுவர்.

அனைவருக்கும் வீடு:'ஆயுஷ்மான்' காப்பீடு திட்டத்தில், 11 லட்சம் பேர் குறுகிய காலத்தில் பயன் பெற்றுள்ளனர். மின்சாரம் இல்லாத, 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வரும், 2022க்குள், அனைவருக்கும் வீடு ஏற்படுத்தி கொடுக்கப்படும். கடந்த நான்காண்டில், 1.30 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் வளர்ச்சியை, உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. நம் முன்னேற்றம், 130 கோடி மக்களின் வலிமை, திறமையால் சாத்தியமாகி உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வரி செலுத்துவதால்தான், முன்னேற்றம் அடைய முடிகிறது. பட்ஜெட்டில், நடுத்தர மக்கள் நலன் சார்ந்த திட்டம் இடம் பெற்றுள்ளது. ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த வளர்ச்சி:தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஒவ்வொரு இந்தியனுக்குமான அரசு. நாட்டின் எதிர்காலத்தை உறுதிபடுத்தும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது. எதிர்காலத்தை உறுதிபடுத்துவது என்பது, ஒட்டுமொத்த தேச வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாகும்.
'சாகர் மாலா' திட்டத்தின் கீழ், சாலைகளை மேம்படுத்தும் திட்டம், இரு மடங்கு அதிகரித்துள்ளது. கடைகோடி பகுதிகள் கூட, சாலைகளால் இணைக்கப்படுகின்றன. துறைமுகங்கள், பலப்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக, சென்னையில், மெட்ரோ ரயில் திட்டத்தை துவுக்கியுள்ளோம்.

'உலக அறிவாளி... ரீ கவுன்டிங் மினிஸ்டர்'தமிழகத்தை சேர்ந்த ஒரு 'ரீ-கவுன்டிங்' முன்னாள் அமைச்சர், உலகில் தான் மட்டுமே அறிவாளி என்ற நினைப்பில் உள்ளார். ஐஸ் கிரீம், மினரல் வாட்டர் ஆகியவற்றை நடுத்தர மக்கள் வாங்கி, 'பேக்கேஜ்' ஆக பயன்படுத்துகின்றனர், என ஏளனமாக பேசுகிறார். ஆனால், நிலைமை என்னவென்றால், ஒட்டு மொத்த குடும்பமே 'ஜாமின் பேக்கேஜ்' வாங்க, முயற்சித்து வருகின்றனர். இது நாங்கள் ஏற்படுத்திய மாற்றம்.
காங்., கட்சியினரின் இதுபோன்ற ஏளன பேச்சால்தான், மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளனர். மீண்டும் மீண்டும் புறக்கணிப்பர். இந்த ஆட்சியில், பலர் தங்களின் சந்தோஷத்தை தொலைத்துள்ளனர். குறிப்பாக, தி.மு.க., - காங்., கட்சியினர், குடும்ப அரசியல் செய்ய விரும்புகின்றனர். மத்திய அரசின் சிறப்பான செயல்பாட்டால், அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்; அந்த வருத்தம், விரக்தியாக மாறி, நம் மீது வசைமாறி பொழிகின்றனர்.

எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி:விவசாயிகளை, எதிர்கட்சியினர் தவறாக வழிநடத்துகின்றனர். விவசாய கடன் தள்ளுபடியால், விவசாயிகளுக்கு நன்மை கிடைக்காது; அவர்களின் கடன் சுமை குறையாது. எனவே, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டம் வகுத்துள்ளோம். பிரதமரின் விவசாய நலன் நிதி திட்டத்தில், 5 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் பெற முடியும். இது, விவசாயிகளுக்கு கூடுதல் பலன் அளிக்கும்.

நமது திட்டத்தால், விவசாயிகள் ஏழ்மையில் இருந்து விடுபடுவார்கள். அவ்வாறு, அவர்கள் ஏழ்மை ஒழிந்தால், அவர்களை தவறான திசையில் வழிநடத்த முடியாது என எதிர்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீனவ ஆண், பெண்கள் நலன் கருதி, தனி கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது; அவர்களுக்கென, தனி இலாகா ஏற்படுத்தப்படும் என, தெரிவித்துள்ளோம். அரசின் நலத்திட்டம், அவர்களது வீட்டு வாசலுக்கே சென்று சேரும். இதுகுறித்து, இதுவரை எதிர்க்கட்சியினர் ஏன் சிந்திக்கவில்லை?
அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது நமது குறிக்கோள். அதனால் தான், பொதுப்பிரிவில் உள்ள, ஏழை மக்களுக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே பட்டியலில் உள்ள பழங்குடி, மழைவாழ், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு எந்த வகையிலும் பாதிக்காது. நாட்டின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த எடுக்கப்படும் முயற்சியை கைவிட மாட்டோம். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

மொத்தம், 43 நிமிடம் பேசிய பிரதமர், ''தமிழ் சகோதர, சகோதரிகளே... என, தமிழில் பேசி, ஆங்கிலத்தில் பேச்சை துவக்கினார்.

நடராஜர் சிலை பரிசு:ஆந்திராவிலிருந்து தனி விமானத்தில், கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து ெஹலிகாப்டரில் திருப்பூருக்கு வந்த பிரதமர் மோடியை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக சபாநாயகர் தனபால் உட்பட பலர் வரவேற்றனர். அரசு திட்டங்கள் துவக்க விழாவில் பிரதமருக்கு சால்வை அணிவித்த முதல்வர் பழனிசாமி, நடராஜர் சிலையை பரிசாக வழங்கினார்.
திருப்பூர் எம்.பி., சத்யபாமா, எம்.எல்.ஏ., விஜயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழா மேடைக்கு, மாலை, 3:10 மணிக்கு வந்த பிரதமர், திட்டங்களை, காணொளி மூலம் துவக்கி வைத்தும், அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சி, 10 நிமிடங்களில் முடிந்தது. அதன்பின், அருகில், 50 மீ., தொலைவில் அமைக்கப்பட்டிருந்த பா.ஜ., பொதுக்கூட்ட மேடைக்கு மோடி காரில் சென்றார்.
* திருப்பூர் குமரன் சிலை அருகே ம.தி.மு.க., சார்பில், மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டினர். இதில் வைகோ பங்கேற்றார்.
காமராஜர் விரும்பிய ஆட்சி: பா.ஜ., ஆட்சியில், ஊழல் ஒழிந்துள்ளது; போலி கம்பெனிகள் மூடப்பட்டுள்ளன. போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். இடைத்தரகர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊழல், தவறான செயல்களுக்கு இந்த ஆட்சி, பூட்டு போட்டு வருகிறது. இதுபோன்ற ஆட்சியை தான், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் விரும்பினார். எதிர்கட்சியினர், மோடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை; தோற்றுவிட்டது எனக்கூறி வருகின்றனர். அப்படியானால், ஏன், மெகா கூட்டணி அமைக்க முயற்சிக்கிறீர்கள். மாறாக, எதிர்கட்சியினருக்கு செயல் திட்டம், கொள்கை கிடையாது. என்னை தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணம். இது, மிகப்பெரிய கலப்பட கூட்டணி. தமிழக மக்கள், புத்திசாலிகள்; இவர்களின் விளையாட்டை ஏற்கனவே பார்த்து விட்டார். இந்த கூட்டணியை துாக்கி எறிவார்கள். இது, பணக்காரர்கள் சேர்ந்துள்ள குழுமம். அவர்களின் குறிக்கோள் குடும்ப, வாரிசு அரசியல் மட்டுமே.
ராணுவ புரட்சி நடக்காது: முன்னாள் ராணுவத்தினர், 'ஒரே பதவி, ஒரே பென்ஷன்' என்ற கோரிக்கையை, கடந்த, 40 ஆண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர்; அக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ராணுவத்தை இழிவுப்படுத்த, சிறுமைப்படுத்த, எதிர்கட்சியினர் மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். 'சர்ஜிகல் ஆபரேஷன்' திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர், 'ராணுவம் புரட்சி'யில் ஈடுபட முயன்றது என்கிறார். நம் ராணுவத்தினர் எந்தவொரு காலத்திலும் அத்தகைய செயலில் ஈடுபட மாட்டார்கள்.
தொழிலாளர் நலனில் அக்கறை: திருப்பூர், சிறு, குறு மற்றும் முறைசாரா தொழில்கள் அதிகம் உள்ள பகுதி; சமீபத்திய பட்ஜெட்டில் சிறு, குறு தொழிற்சாலைகள், பண்ணை, மில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன் காக்க, தொழிலாளர் நல திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாதம், 15 ஆயிரம் ரூபாய்க்குள் வருமானம் பெறும் தொழிலாளர்கள், 60 வயது நிறைவு பெற்றவுடன், அவர்களுக்கு, மாதம், 3,000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும்.
'பேமிலி பேக்கேஜ்': விவசாயம், சிறு, குறு தொழில் என, எது சார்ந்த பிரச்னையை முன்னிறுத்தினாலும் எதிர்க்கட்சியினர் மோடியின் பெயரை தான் சொல்கின்றனர். என்னை வசைபாடினால், 'டிவி' பெட்டிகளில் வேண்டுமானால், இடம் கிடைக்கும்; தேர்தலில் வெற்றி பெற்று, மக்கள் மனதில் இடம் பெற முடியாது. நாடு குறித்த கண்ணோட்டம் தான், வெற்றியை கணிக்கிறது. மாறாக, எதிர்கட்சியினர், குடும்ப பேக்கேஜ் முறையில், வழக்கில் சிக்கி சிறை செல்லாமல் இருக்க, பெயில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  பல மனிதர்கள் தங்களின் கீழ் ஆட்சி அமையும் போது திமிருடன் இருப்பார்கள் காரணம் மரணம் இருப்பதை மறந்து .. சில மனிதர்கள் பதவியில் பணிவாக அமைதியாக இருப்பார்கள் தனக்கு எந்நேரமும் மரணம் வருமென்று .. அறியாமையில் இருப்பர்வர்களோ அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடித்து தானே அறிவாளி என்று தனக்குள்ளேய புகழ்ந்து மகிழ்வார்கள் புதைபடுவதை மறந்து .. ரொம்ப பேசுவது தரித்திரியம் என்பதும் நிரூபணமாகும் நாள் விரைவில் பார்க்கலாமே?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கிட்டத்தட்ட அனைத்து பாஜக வாசகர்கள் கருத்துக்களிலும் "மதம்" பிரதானப்படுத்தப் படுவது துரதிருஷ்டவசமானது. வட இந்தியாவில் எப்படி தெரியவில்லை. தென்னிந்திய மாநிலங்களில் மதவாதம் நிச்சயமாக எடுபடாது. இதை இன்னும் அவர்கள் உணரவில்லை என்றால் கஷ்டம் தான். எங்கள் குடியிருப்பு தொகுப்பில் மட்டுமல்ல பெரும்பாலான தொகுப்பு களில், பொங்கல், ரமலான், க்றிஸ்துமஸ், பண்டிகைகளை ரெஸிடன்ஸ் அஸோஸியேஷன்கள் நடத்த அனைத்து மதத்தினரும் கான்ட்ரிப்யூஷன் பணமும் தந்து விருப்பத்துடன் பங்கேற்று கொண்டாடுகிறார்கள்.

 • sugumaran - chennai,இந்தியா

  இங்கயே பாருங்கள் மோடிக்கு எதிராக ஹிந்து பெயர்களில் வெளிநாட்டில் உள்ள போலிகள்.

 • Nallavan Nallavan - Dhanbad,இந்தியா

  தேர்தலுக்குள்ற தமிழகத்துக்கு இன்னும் நாலு விசிட்டாவது அடிப்பாரு மோதி ஜி .....

 • venkat - chennai,இந்தியா

  பிரதமர் செயல் வீரர் மோடி அவர்களின் கீழ்கண்ட “ஏழைகள் எல்லோருக்கும் எல்லாம்” மற்றும் குறை கூறுவோரையும் உள்ளடக்கிய மாபெரும் வளர்ச்சித் திட்டங்களை தெரிந்து புரிந்து வரவேற்பது நம் எல்லோருக்கும் நல்லதே. பிரதமர் மோடியின் சில கனவு நனவாக்கும் திட்டங்கள் >> இந்தியாவில் எல்லா குடும்பங்களுக்கும், முக்கியமாக எல்லா ஏழைகளுக்கும் இலவச மானிய குறைந்த வட்டி வீடுகள், இலவச மானிய கழிப்பிடம், எல்லா ஏழை குடும்பங்களுக்கும் சௌபாக்கிய திட்டத்தில் மின்னிணைப்பு, ஏழைப்பெண்டிருக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு, 30 கோடி பேருக்கு மேல் எளியோருக்கு சன தன் கணக்கு மூலம் இலவச உயிர் (ரூ 30000 ) விபத்து (ரூ 200000 ) கடன் (ரூ 10000 ) பாதுகாப்பு, ஏழைக் குடும்பங்களுக்கு ( ஏறத்தாழ 50 கோடி இந்திய மக்களுக்கு) வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு, முத்ரா திட்டத்தில் 12 கோடி இளைஞர் மகளிருக்கு மானிய தொழில் கடனுதவி, வளர்ச்சித் திட்டங்களில் எல்லா கிராமங்களுக்கும் மின் வசதி, 2 .5 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு இணைய வசதி, நதி நீர் இணைப்பு, நதி நீர் போக்கு வரத்து, (வாரணாசியில் தற்போது கப்பல் வந்து செல்கிறது), நீர் விமானப் போக்குவரத்து, கடலோர சுற்றுலா பொருள் கப்பல் போக்குவரத்து, பல லட்சம் கோடி நழ்டத்தில் இருந்த மாநில மின் வாரியங்களை மீட்டு லாபத்தில் கொணர்ந்தது, மின் திருட்டை கட்டுப் படுத்த ஸ்மார்ட் மீட்டர், மின் சேமிப்புக்கு குறைந்த விலைக்கு LED விளக்கு, குறைந்த கொள்முதல் விலையில் தனியாரிடம் இருந்து அளவற்ற சூரிய காற்றாலை மின் உற்பத்தி கொள்முதல், நீண்ட கால இறக்குமதி பிரச்சினையான உயர் விலை பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக உள்நாட்டு CNG , மெத்தனால், மின்னூர்தி ஊக்குவிப்பு, உள்ளூரில் ஹைட்ரொ கார்பன் உற்பத்தி, உயர் மதிப்பு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் எல்லா கருப்பு பணத்தையும் வங்கி வரவாக்கி, அவர்களையும் வரி சேர்த்து வரிகட்டுவோர் எண்ணிக்கையை 70 சதவிகிதம் உயர்த்தியது, ரூ 5 லட்சம் வரை வருமானவரி விலக்கும் பல வரி சேமிப்பு சலுகைகளும் அளித்தது, காங்கிரஸ் GST ஐ ஒரு வருடத்திற்குள் செயல்முறை சீர் செய்து, பல வரிகளை ஒன்றாக்கி பல பொருட்களுக்கு வரி குறைத்து வியாபாரம் செய்வதை கணினி மயமாக்கியது (35 பொருட்களுக்கு மட்டுமே தற்போது 28 சதவிகிதம் வரி) , தமிழகத்தில் சேலம், தஞ்சாவூர், வேளூர், நெய்வேலி, ஓசூர் உட்பட இந்தியாவில் பல குறு நகரங்களுக்கு குறைந்த கட்டண உதான் திட்ட விமான வசதி, சென்னை உட்பட எல்லா பெருநகரங்களுக்குள்ளும் விரைந்து செல்ல தூய்மையான உலகத்தரம் வாய்ந்த மெட்ரோ ரயில், பெருநகரங்களை இணைக்க புல்லேட் ரயில் திட்டம், 160 கி மீ வேகத்தில் நகரங்களுக்கு இடையே சென்று வர சென்னை ICF உருவாக்க Train 18 மின் தொடர் வண்டி, டெல்லி மும்பை, டெல்லி கொல்கத்தா தனி விரைவு சரக்கு தனி ரயில் பாதை, (பின்னர் கொல்கத்தா, விசாகபட்டணம், சென்னைக்கு விரிவு), மாம்பழம் , விவசாய தொழில் விளை, உற்பத்திப்பொருள் போக்குவரத்து, ஏற்றுமதி பெருக்கத்திற்கு எல்லா மாவட்ட தலைநகரங்களையும், கடலோர நகரங்களையும், துறைமுகங்களை இணைக்க பாரத் மாலா, சாகர் மாலா (சிக்னல் இல்லா) விரைவு வழிப் பாதைகள், இறக்குமதியை நம்பி இருந்த காங்கிரஸ் கொள்கையை மாற்றி உள்நாட்டில் தனியார், பொதுத்துறை பாங்கோடு ராணுவ தளவாட உற்பத்தி, பத்து பங்கு குறைந்த நீர் உபயோத்தில், 10 பங்கு அதிக உற்பத்தி தரும் இஸ்ரேல் தொழில் நுட்பம் எல்லா மாநிலங்களிலும் அறிமுகம், ஆதார் மூலம் ரூ 80000 கோடிக்கு மேல் மானிய விரயம் மக்கள் வரிப் பண மிச்சம், இன்னும் பல பல திட்டங்கள். மோடியின் டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி மூலம் தினம் ரூ 5 க்கு 1 GB மேல் இணைய வசதியும் இலவச தொலை பேசி வசதியும் இன்று எல்லா மக்களுக்கும் இந்தியாவில் கிடைக்கிறது . வேலையற்றோர் வீட்டில் இருந்தே அரசு இணையத்தில் தகவல் பதிவு ( data entry) செய்து சம்பாதிக்கலாம். பி ஜெ பி தொலை நோக்கு பார்வை தீர்வில் உள்ளது. குழப்பத்தில், குழப்புவதில் இல்லை. தற்போது நமது மீனவர் ஸ்ரீலங்கா கடற் படையால் சிறை செய்தி, பாக்கிஸ்தான் எல்லைக்கோடு குண்டுபோடும் செய்தி தினம் வருவதில்லை. கர்நாடக காவேரி பிரச்சினை காவேரி ஆணையத்திற்கு சென்று விட்டது. நீண்டகாலத் தீர்வாக, பி ஜெ பி nda அமைச்சர் கட்கரி ரூ 100000 கோடி செலவில், 90 சதவிகிதம் மத்திய அரசு பங்களிப்புடன் கோதாவரி கிருஷ்ணா பெண்ணாறு காவேரி நதிகள் இணைப்புக்கு ஆந்திராவின் சம்மதம் பெற்று, தெலுங்கானா சம்மதத்திற்கு காத்திருக்கிறார். டெல்லி சென்ற நமது விவசாயத் தலைவர்கள், அரசியல் தலைகள், ஹைதெராபாத் சென்று விண்ணப்பிக்கலாம். குறைந்தது 100TMC வருடத்திற்கு நமக்கு கிடைக்கும். நீர் பிரச்சினை நிரந்திரமாகத் தீரும். இதுபோல திறன் வீரர் பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்ட செயல் விவரம் அளவற்று பட்டியல் உள்ளது <<< அறியாத சில கருத்துக் கண்ணாயிரங்கள் தவிர, மேற்படி செயல் வீரர் ஏழைப் பங்காளர் பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்ட விவரங்கள் உண்மையற்றவை என்று எந்த எதிர் கட்சிகளும் கூட சொன்னதில்லை.

Advertisement