Advertisement

வசூல் ராஜாவாக வலம் வரும் மதுவிலக்கு அதிகாரி!

''திடீர்னு டில்லிக்கு போய், பா.ஜ., தலைவர்களை பார்த்துட்டு வந்திருக்காருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.

''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''மோடியையும், பா.ஜ., அரசையும் கடுமையா விமர்சனம் செய்யற, வைகோ, சமீபத்துல, திடீர்னு டில்லிக்கு போயிருக்கார்... அங்கே, மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், ஹர்ஷவர்தன், சுரேஷ்பிரபுவை எல்லாம் பார்த்து பேசிட்டு வந்திருக்காருங்க... ''சந்திப்பை முடிச்சு, மதுரைக்கு வந்த வைகோ, மத்திய அமைச்சர்கள், தனக்கு நல்ல மரியாதை குடுத்ததா, கட்சியினரிடம் சொல்லியிருக்கார்...

பார்லிமென்ட்ல மோடி பேசிட்டிருந்தப்ப கூட, தகவல் சொன்னதும், நிர்மலா சீதாராமன், உடனே வெளியில வந்து என்னை பார்த்தாங்க... ''கலிங்கப்பட்டி நண்பர் ஒருத்தரின் சிகிச்சைக்காக, அவர்ட்ட ராணுவ ஹெலிகாப்டர் கேட்டதும், உடனே ஏற்பாடு செஞ்சு குடுத்தாங்கன்னு வைகோ பெருமையா சொல்லியிருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''அய்யய்யோ...'' எனக் கூறி, நெடும் சிந்தனையில் ஆழ்ந்தார் அன்வர்பாய்.

''உடனுக்கு உடனே, குடுத்து அனுப்பிட்டாவ வே...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்த, பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''மதுரை அரசு மருத்துவமனை, 115வது வார்டுல, சமீபத்துல தீ விபத்து நடந்துச்சுல்லா... இங்கே இருந்த, 14 நோயாளிகளை, வேற வார்டுக்கு, அவசர அவசரமா மாத்துனாவ... இதுல, ஓய்வு பெற்ற, வி.ஏ.ஓ., தனிக்கொடி, மாரடைப்புல இறந்து போயிட்டாரு வே...

''தீ விபத்துல, அவர் மூச்சு திணறி இறந்துட்டதா தகவல் பரவிட்டு... உடனே, டீன் வனிதா வந்து, தனிக்கொடியின் உறவினர்களிடம் பேசி சமாதானப்படுத்தினாங்க... அவங்களும், உடலை வாங்கிட்டு போக சம்மதிச்சாவ வே... ''உடனே, பத்தே நிமிஷத்துல, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் தயார் பண்ணி குடுத்து, உடலை ஒப்படைச்சுட்டாவ...

''வழக்கமா, இறப்பு சான்றிதழ் தர இழுத்தடிக்கிற அரசு மருத்துவமனையில, அன்னைக்கு மின்னல் வேகத்துல எல்லாத்தையும் முடிச்சு குடுத்து, பிரச்னை பெரிசாகாம பார்த்துக்கிட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''வசூல் ராஜாவா வலம் வராருங்களாமா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் கோவை, கோவாலு.

''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''திருப்பூர் மாவட்ட, மதுவிலக்கு போலீஸ்ல இருக்கிற, அதிகாரியை தான் சொல்றேன்... சில மாசங்களுக்கு முன்னாடி, சென்னை பெண் ஒருத்தருக்கு போனைப் போட்டு, காதல் ரசம் சொட்ட சொட்ட பேசின பேச்சு, 'வாட்ஸ் ஆப்'ல வந்துச்சே... அந்த அதிகாரிதானுங்ணா...'' என்ற கோவாலுவே தொடர்ந்தார்... ''சூதாட்டம் நடத்துற கிளப்கள்ல, தவறாம ஆஜராகி, 'சன்மானம்' வாங்கிப் போடுதாருங்ணா... சிட்டிக்குள்ள இருக்கிற ஏராளமான பார்கள்ல, மாசா மாசம் இவ்வளவு தொகைன்னு, 'கல்லா' கட்டுதாருங்களாமா... வசூலுக்கு, தனக்கு கீழே வேலை பார்க்குற ஏட்டை தான் அனுப்பி வைக்குறாப்புல...

''இவர் மேல, உயர் அதிகாரிகளுக்கு நிறைய புகார்கள் போனாலும், நடவடிக்கை எடுக்க முடியாம, தவிக்கிறாங்களாமா... ஏன்னா, அதிகாரி, 'எனக்கு முதல்வரை தெரியும்... அந்த அமைச்சரை தெரியும்... இந்த மந்திரியை தெரியும்'னு சொல்லியே, அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை குடுக்கிறாராக்கும்...'' என, முடித்தார் கோவாலு.

''குணசேகரன் வாரும்... இங்கன உக்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே, அண்ணாச்சி எழ, மற்றவர்களும் புறப்பட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    வைகோ டெல்லிச்சென்று அமைச்சர்களை சந்தித்தாரா அவருடைய raasi அந்த அமைச்சர்களை காவு வாங்கிவிடப்போகிறது அடுத்தமுறை அமைச்சராகிவிடமுடியாமல் ஆகிவிடப்போகிறார்கள்

  • A R J U N - PHOENIX ....ARIZONA..,யூ.எஸ்.ஏ

    ..பெண்ணிடம் தான் வழிந்தார் என்றால்..பணத்துலயும் வழிகிறாரோ .

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பிராடு செய்பவர்களெல்லாம் ‘அமைச்சர், எம் எல் ஏ, போலீஸ் கமிஷனர் எல்லார் பெயரையும் தான் சொல்வார்கள் ஆனால் இவர்கள் மாட்டிக்கொண்டால் அந்த பிரபலங்கள், சொந்த சகோதரனானாலும் ‘இவரை நான் பார்த்ததேயில்லை’ என்று சத்தியம் செய்வார்கள் அவர்களது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே

Advertisement