dinamalar telegram
Advertisement

டில்லி உஷ்...

Share

பிரியங்காவுக்கு தனி கோஷ்டி?


அனைத்து கட்சிகளிலும் கோஷ்டிகள் இருந்தாலும், காங்கிரசில் இது சற்று அதிகம். தற்போது, பிரியங்கா தீவிர அரசியலில் இறங்கிஉள்ளதால், இந்த கோஷ்டி இன்னும் அதிகமாகும் என சொல்லப்படுகிறது.'பிரியங்காவை எப்படி அணுகுவது; அவருக்கு நெருக்கமானவர் யார்' என, காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விசாரித்து வருகின்றனர்.காங்கிரசின் பொதுச் செயலராக, பிரியங்கா நியமிக்கப்பட்ட பின், முதலில் யாரிடம் பேசினார் என கண்டுபிடித்துள்ளனர்.


அப்போது, அமெரிக்காவில் இருந்த பிரியங்கா, முதலில், ராகினி நாயக் என்கிற, காங்., தலைவரிடம் பேசியுள்ளாராம். இவருக்கு மட்டுமே போன் செய்துள்ளார், பிரியங்கா. 36 வயதாகும் ராகினி, இளைஞர் காங்கிரசில் சேர்ந்த பின், காங்., செய்தி தொடர்பாளராகவும் இருந்துள்ளார். 'டிவி' விவாதங்களில், காங்., சார்பாக பங்கேற்றுள்ளார்.'முதலில் ராகினியைப் பிடிப்போம்; அவர் மூலம், பிரியங்கா தலைமையில் ஒன்று சேர்வோம்' என, காங்கிரஸ் தொண்டர்கள் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.


'இருக்கிற கோஷ்டி போதாது என, புதிய கோஷ்டி ஆரம்பித்து விடுமே; இது ராகுலுக்கு பிரச்னையை ஏற்படுத்துமோ...' என, சில சீனியர், காங்., தலைவர்கள் கவலைப்பட்டாலும், குடும்ப விவகாரம் என்பதால், வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க.,விற்கு மீண்டும் கிடைக்குமா?

பார்லிமென்டில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அறை கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, கட்சி, எம்.பி.,க்கள் அமர்ந்து அவர்களுடைய வேலைகளைப் பார்க்கலாம். கட்சிக்கு எத்தனை, எம்.பி.,க்கள் என்பதைப் பொறுத்து அறை ஒதுக்கப்படும். இரண்டு அல்லது மூன்று அறைகள் வைத்துள்ள கட்சி, மிகப் பெரிய கட்சி என மார் தட்டிக் கொள்ளும்.தற்போது, அ.தி.மு.க.,விற்கு, லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டையும் சேர்த்து, 50 எம்.பி.,க்கள் உள்ளனர். இதனால் மிகப் பெரிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு பெரிய அறைகள் மற்றும் ஒரு ஹால் என, மூன்று அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தவிர, அ.தி.மு.க., பார்லி அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது.


தி.மு.க.,விற்கு லோக்சபாவில், எம்.பி.,க் கள் ஒருவர் கூட கிடையாது. ராஜ்யசபாவில், நான்கு, எம்.பி.,க்கள் உள்ளனர். இதனால், இவர்களுக்கு தனி அறை கிடையாது. பார்லி.,யின் மூன்றாவது மாடியில், ஒரு பொது இடத்தில் இவர்கள் அமர்ந்து கொள்ளலாம். இங்கு பிற சிறிய கட்சிகளின், எம்.பி.,க்களும் அமர்ந்திருப்பர்.வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு இத்தனை, எம்.பி.,க்கள் வெற்றி பெறுவரா, மீண்டும் இவ்வளவு பெரிய அறைகள் கிடைக்குமா, என்பது சந்தேகமே.


தமிழகத்தில் உள்ள அனைத்து, எம்.பி., தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாதனை படைத்தார்.தற்போது, அவர் இல்லை; இத்தனை பெரிய வெற்றி மீண்டும் கிடைக்கவா போகிறது என, கவலையுடன் சொல்கின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள். 2019 தேர்தல் முடிவுகளுக்கு பின், தி.மு.க.,வைப் போல், மூன்றாம் மாடியில் பொது இடத்தில் உட்கார வேண்டிய நிலை வருமோ என அஞ்சுகின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்.


ஆனால், தி.மு.க.,வினரோ, உற்சாகத்தில் உள்ளனர்; 'தேர்தலில், தி.மு.க., சார்பில், 30 எம்.பி.,க்கள் தேர்வு பெறுவர். 'எனவே, அ.தி.மு.க., அலுவலக இடம், இனி எங்களுக்குத் தான்' என இவர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ, வரும் பார்லி தேர்தல், தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

ராகுலை காக்க வைத்த தலைவர்'சிட் பண்ட்' ஊழல் வழக்கில், கோல்கட்டா போலீஸ் கமிஷனரை விசாரிக்க, சி.பி.ஐ., சென்றபோது, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தர்ணாவில் அமர்ந்தார். இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரியளவில் பேசப்பட்டது.மம்தாவிற்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள், கோல்கட்டா வந்து போராட்டத்தில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடியை கண்டபடி பேசினர். சில தலைவர்கள், போன் மூலம் ஆதரவு தெரிவித்தனர்.


போராட்ட மேடையில், மம்தா இருந்தபோது, அவருடைய உதவியாளர், 'மேடம்; போனில் ராகுல் இருக்கிறார்; உங்களோடு பேச விரும்புகிறார்' என, மொபைல் போனை நீட்டினார். மம்தா கையை நீட்டி போனை வாங்கிய சமயத்தில், இன்னொரு உதவியாளர், 'மாயாவதி போன் செய்துள்ளார்' என, மற்றொரு போனை நீட்டினார்.உடனே மம்தா, 'ராகுல் போனை காத்திருப்பில் வையுங்கள்' என சொல்லி, மாயாவதியுடன் பேசினார். இரண்டு நிமிடம் வரை அவருடன் பேசி முடித்தபின், ராகுலுடன் பேசினார்.


'மாயாவதி தான் எங்கள் தலைவிக்கு முக்கியம்; அதனால், ராகுலைக் காக்க வைத்தார்' என, பார்லி சென்ட்ரல் ஹாலில் திரிணமுல் கட்சி, எம்.பி.,க்கள் சொல்லி வருகின்றனர்.'லோக்சபா தேர்தலில், பா.ஜ.,விற்கு மெஜாரிடி கிடைக்காது; காங்கிரசுக்கும் அதிக சீட் கிடைக்க வாய்ப்பில்லை; இந்நிலையில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும்; மம்தாவோ அல்லது மாயாவதியோ பிரதமர் ஆகலாம்' என, இந்த இரண்டு பெண் தலைவர்களின் கட்சியினர் நினைக்கின்றனர்.


'உ.பி.,யில், 80 தொகுதிகளில் எப்படியும், 35ஐ பிடித்து விடலாம்' என எண்ணுகிறாராம், மாயாவதி. 'மே.வங்கத்தில் உள்ள, 42 தொகுதிகளில், 35ஐ பிடித்து விடுவோம்' என்கிறாராம் மம்தா. 'இதனால் இந்த இரண்டு பெண்களில் ஒருவர் பிரதமராகலாம்' என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.'மோடியை எதிர்க்க, தான் சரியான நபர் என போராட்டத்தின் மூலம் உறுதிபடுத்தி விட்டார், மம்தா' என, அவரது கட்சி, எம்.பி.,க்கள் சந்தோஷத்தில் உள்ளனர். மூன்றாவது அணியில், பலர் பிரதமர் கனவில் உள்ளனர்.

நொந்து போன, தி.மு.க.,தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சியை ஒழித்துக் கட்ட தீவிர திட்டம் போட்டு, களத்தில் இறங்க தயாராக உள்ளன. பா.ஜ.,விற்குள் குழப்பத்தை ஏற்படுத்த, காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.'பா.ஜ.,விற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மோடியை பிரதமராக்க கூட்டணி கட்சிகள் ஒத்துக் கொள்ளாது; நிதின் கட்கரி போல யாராவது ஒருவர், பிரதமர் பதவிக்கு வரக் கூடும்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


இதனால், 'கட்கரி நல்லவர், வல்லவர்' என காங்கிரஸ் தலைவர், ராகுல் உட்பட, பலர் பேசி வருகின்றனர். சமீபத்தில், பா.ஜ., கூட்டணி அரசின் சாதனைகள் குறித்து, பார்லியில் பிரதமர் மோடி பேசினார்.அப்போது, 'தினமும், 20 கி.மீ., துாரம் சாலைகளை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அமைத்து வருகிறது; அமைச்சர், நிதின் கட்கரி சிறப்பாக செயல்படுகிறார். ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசில், குறைவான, கி.மீ., சாலையே போடப்பட்டது' என்றார் மோடி.


உடனே, சபையில் அமர்ந்திருந்த சோனியா உட்பட அனைத்து, காங்., எம்.பி.,க்களும் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.இது, பா.ஜ.,விற்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சபையில் அமர்ந்திருந்த கட்கரியும் என்ன செய்வது எனத் தெரியாமல் நெளிந்தார். இது, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


காங்., கூட்டணி அரசில், தி.மு.க.,வின், டி.ஆர். பாலு போக்குவரத் துறை அமைச்சராக இருந்தார்; 'கட்கரியை பாராட்டுவதன் மூலம், எங்கள் பாலு சரியாக வேலை செய்யவில்லை என சோனியா சொல்கிறாரா; இது சரியில்லை' என, ஒரு தி.மு.க., - எம்.பி., வருத்தப்பட்டார். 'இதனால், தி.மு.க., - - காங்., கூட்டணியில் மனக்கசப்பு ஏற்படும்' என, அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement