Advertisement

தமிழக, மணிகளால் குழப்பம்

தமிழக, 'மணி'களால் குழப்பம்

தமிழக அமைச்சர்கள், டில்லி வரும் போது, தமிழக, பா.ஜ., பொறுப்பாளரான, பியுஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்திக்க தவறுவதில்லை. ஆனால், சமீப காலமாக, இந்த சந்திப்பு தவிர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. 'ஏன் இந்த திடீர் மாற்றம்' என, டில்லி, பா.ஜ., தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழக அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி ஆகியோர், அடிக்கடி, டில்லி வந்து, பியுஷ் கோயலை சந்தித்து வந்தனர். இந்த இரண்டு, 'மணி'களும், கோயலுக்கு படு நெருக்கம்.ஆனால், சமீப காலமாக, இந்த சந்திப்பு நடப்பதில்லையாம்.இதுகுறித்து, தனக்கு நெருக்கமானோரிடம், பியுஷ் கோயல் கூறுகையில், 'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க.,வினர் தயக்கம் காட்டுகின்றனர். காங்., - பா.ஜ., இல்லாத கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிகிறது; தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ் அமைக்கவுள்ள கூட்டணியிலும், அ.தி.மு.க., சேர வாய்ப்புஉள்ளது' என்றாராம்.இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், அதிக இடங்களில், தி.மு.க., வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது; இதனால், ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை, அ.தி.மு.க., தலைவர்கள், டில்லி, பா.ஜ., தலைவர்களிடம் கூறியுள்ளனராம்.இதனால், பா.ஜ., பக்கம் வர, அ.தி.மு.க., அமைச்சர்கள் தயங்குகின்றனராம். மேலும், 'அ.தி.மு.க.,வில் உள்ள சில கோஷ்டிகள், பா.ஜ.,விற்கு எதிராக உள்ளன' என்கிறாராம், கோயல். இதனால் தான், இவருடைய சமீபத்திய தமிழக பயணம், கடைசி நேரத்தில் ரத்து ஆனதாம்.

பிரியங்கா அரசியல் பிரவேசம் ஏன்?
காங்., தலைவர் ராகுலின் தங்கை, பிரியங்காவின் திடீர் அரசியல் பிரவேசம், டில்லி அரசியலை படு சூடாக்கியுள்ளது. ராகுல், சோனியா போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்து வந்த பிரியங்கா, தற்போது, கிழக்கு உத்தர பிரதேசத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த திடீர் அறிவிப்பிற்கு, பல காரணங்கள் உள்ளதாக, காங்கிரஸ் கட்சிக்குள் அலசப்படுகிறது. சோனியா, ராகுல் ஆகியோர் மீது, காங்., பத்திரிகையான, 'நேஷனல் ஹெரால்ட்' தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.இது தொடர்பாக, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணையில், இந்த தலைவர்கள் சிக்கியுள்ளனர். இன்னொரு பக்கம், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இங்கும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.இப்படி குடும்பமே வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், எந்த வழக்கிலும் சம்பந்தப்படாமல் இருப்பவர் பிரியங்கா. அதனால், 'அவர் இப்போது அரசியலுக்கு வருவது தான் சரி' என சோனியா, ராகுல் முடிவெடுத்தனராம்.தொடக்கத்தில், பிரியங்கா அரசியலுக்கு வருவதில் சோனியாவிற்கு விருப்பமில்லை; அவரால், ராகுலின் எதிர்காலம் பாதிக்கப்படும் என, சோனியா பயந்தாராம்.ஆனால், தற்போதுள்ள நிலையில், மோடியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த, பிரியங்கா அரசியலுக்கு வருவதே சரியாக இருக்கும் என்பதால், தன் முடிவை மாற்றி, பிரியங்காவின் அரசியல் பிரவேசத்துக்கு பச்சை கொடி காட்டினாராம், சோனியா.பிரியங்கா வருகையால், காங்., உட்கட்சி சண்டை வெட்ட வெளிச்சமாகியுள்ளதை, காங்கிரசாரே ஏற்றுக் கொள்கின்றனர். ராகுல் தலைவரான பின், சோனியாவிற்கு நெருக்கமான, அஹமது பட்டேல் ஓரங்கட்டப்பட்டு, குலாம் நபி ஆசாத் முன்னேறினார்.இப்போது நிலைமை மாறிவிட்டது. உ.பி., பொறுப்பாளராக இருந்த, குலாம் நபி ஆசாத், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, சிறிய மாநிலமான, ஹரியானாவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.லோக்சபா தேர்தலில், உ.பி.,யில் காங்., தோற்றாலும், பிரியங்காவை குறை சொல்ல முடியாது. காரணம், உ.பி.,யில் ஒரு சிறு பகுதிக்கு மட்டுமே அவர் பொறுப்பாளாராக உள்ளார். இப்படி, பல காரணங்களால், பிரியங்கா தீவிர அரசியலுக்கு வந்துள்ளார் என, காங்கிரசார் கூறுகின்றனர்.

காங்.,கில் வருண் இணைவாரா?


மறைந்த முன்னாள் பிரதமரும், காங்., தலைவருமான, ராஜிவ் சகோதரரான, சஞ்சயின் மகன், வருண். இவரது தாய், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், மேனகா.பா.ஜ., - எம்.பி.,யாக உள்ள வருணுக்கும், சோனியாவிற்கும் ஆகாது.சமீப காலமாக, வருணை, பா.ஜ., ஓரம் கட்டி வருகிறது. காரணம், 'காங்., குடும்பத்துடன், வருண் நெருங்கி வருகிறார்; எந்த நேரமும், பா.ஜ.,விலிருந்து விலகி, காங்., பக்கம் போவார்' என, பா.ஜ., கருதுகிறது.வருணும், பிரியங்காவும் தொடர்பில் உள்ளனர். வருணை அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பிரியங்கா, அவருக்கு ஆலோசனைகளை கூறி வருகிறாராம்.அதேபோல், தனக்கு ஏதாவது பிரச்னை என்றாலும், முதலில், வருணை அழைத்து உதவி கேட்கிறாராம், பிரியங்கா.ஒருமுறை, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா, குடித்துவிட்டு வீட்டில் கலாட்டா செய்தாராம். அப்போது, பிரியங்கா அழைத்ததை அடுத்து, அங்கு வந்த வருண், வாத்ராவை மிரட்டி பிரச்னையை தீர்த்து வைத்தாராம்.இருப்பினும், ராகுலுக்கு கீழ் வேலை செய்ய, வருணுக்கு விருப்பம் இல்லையாம். தற்போது, பிரியங்கா தீவிர அரசியலுக்கு வந்துள்ள நிலையில், 'காங்கிரசில் சேர இதுவே சரியான தருணம்' என, வருண் நினைப்பதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    ஆஹா .....

Advertisement