Advertisement

நரேந்திர மோடியின் அதிரடி திட்டம்

ஏப்ரல், மே மாதம் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தங்களை, அனைத்து கட்சிகளும் துவங்கிவிட்டன. உத்தர பிரதேசத்தில், அகிலேஷின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், இப்போதே கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடும் நடத்தி விட்டன.'இதில் காங்கிரசுக்கு இடமில்லை' எனவும் அறிவித்துவிட்டது, இந்த கூட்டணி.

இதற்கிடையே, வாக்காளர்களைக் கவரும் திட்டங்களை அறிவித்து வருகிறது, பா.ஜ., அரசு. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள உயர் ஜாதிக்காரர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் கல்லுாரியில் சேர்வதற்காக, 10 சதவீத இட ஒதுக்கீடும் இந்த வகையில் சேரும்.மறு பக்கம், அதிரடி திட்டம் ஒன்றை தயாராக வைத்துள்ளாராம், பிரதமர் நரேந்திர மோடி. வட மாநிலங்களில் ராமர் பெயரைச் சொல்லி வாக்கு வாங்குவது, பா.ஜ.,வின் வழக்கம். 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்' என சில, பா.ஜ., தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும் பேசி வருகின்றனர்.இது சம்பந்தமான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன், அந்த வழக்கு விசாரணை முடிய வாய்ப்பில்லை. 'தீர்ப்பு வரும் வரை காத்திருக்கக் கூடாது; தேர்தலுக்கு முன்,கோவில் கட்டும் அறிவிப்பை, பா.ஜ., அரசு வெளியிட வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.பார்லி.,யில், பட்ஜெட் கூட்டத் தொடர், பிப்ரவரி மாதம் மத்தியில் நிறைவு பெறும். அது முடிந்ததும், பார்லிமென்ட் அவசர கூட்டத்தைக் கூட்டி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற, அதிரடி திட்டம் தயாரித்துள்ளாராம், மோடி.இதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கும்; அப்போது, 'ராமர் கோவிலுக்கு எதிராக, காங்., உட்பட பல கட்சிகள் உள்ளன' என தேர்தல் பிரசாரம் செய்யுமாம், பா.ஜ.,அதேசமயம், 'வளர்ச்சி திட்டங்களை வைத்து ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும்; அதை விடுத்து, மக்களின் உணர்ச்சிகளைத் துாண்டக் கூடிய ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுப்பது சரியா?' என சில, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.

இளைஞர்கள் அணியில் ஸ்டாலினா?மோடிக்கு எதிராக அணி திரட்டுவதில், காங்கிரசை விட, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் இருக்கிறார். 45 வயதாகும் இவர், ஏற்கனவே உத்தர பிரதேச முதல்வராக பணியாற்றி உள்ளார். இவரும், மாயாவதியும் சேர்ந்து, இப்போது மோடிக்கு எதிராக கை கோர்த்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள இளைய தலைவர்களை ஒன்று சேர்ப்பதில், தீவிரம் காட்டி வருகிறார் அகிலேஷ். எதிர்க்கட்சிகளில், 50 வயதுக்கு குறைவான தலைவர்களை ஒரு அணியில் திரட்டுவது, இவரது திட்டம். பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு எதிராக அணி திரட்டி, மத்தியில் ஆட்சியை பிடிக்க, இப்போதே முயற்சி செய்து வருகிறார், அகிலேஷ்.தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான, சந்திரசேகர ராவின் மகன், கே.டி.ராமாராவ்; இவருக்கு வயது, 42. இவரையும், தன் அணியில் சேர்க்க முயற்சித்து வருகிறார், அகிலேஷ்.அடுத்ததாக, தேவிலாலின் பேரனும், அஜித் சிங்கின் மகனுமான, ஜெயந்த் சவுத்ரியையும், தன்னுடன் இணைக்க ஆசைப்படுகிறார்.தமிழகத்திலிருந்து யாரைச் சேர்ப்பது என, யோசித்தாராம். 'தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வயது, 60க்கு மேல்; எனவே, இளைஞர் என சொல்லி, அவரை இந்த அணியில் சேர்க்க முடியாது' என மற்ற இளைய தலைவர்கள் சொல்லி விட்டனராம்.'அப்படியானால் உதயநிதி ஸ்டாலின் இந்த அணியில் சேர்வாரா?' என, அகிலேஷுக்கு நெருக்கமானோர் கேட்கின்றனர். ஆனால், காங்கிரசின் பின், தி.மு.க., செல்லும் நிலையில், இப்படி ஒரு முடிவை ஸ்டாலின் எடுப்பாரா என்பது,கேள்விக்குறியே.

தமிழக தலைவர் விரைவில் கைது?அந்த தமிழக அரசியல் தலைவருக்கு எதிராக, சட்ட விரோத பண பரிமாற்றம் உட்பட, பல அதிரடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.பல வழக்குகள் இருந்தாலும், இதுவரை அவரை கைது செய்ய முடியவில்லை. ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் கைது செய்ய தடை உத்தரவை வாங்கி, கைதிலிருந்து தப்பித்து வருகிறார் அந்த தலைவர்.'இதே வழக்குகள் ஒரு சாதாரண ஆள் மீது பாய்ந்திருந்தால், இந்நேரம் அவர் சிறையில் இருந்திருப்பார். ஆனால், இவர் அரசியல் தலைவர் என்பதால் தப்பித்து வருகிறார்' என்கின்றனர், இவருடைய கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள். அவர்களுக்கும், இவர் உள்ளே போனால் மகிழ்ச்சிதானாம்; ஆனால் நடக்கவில்லையே என, நொந்து போயுள்ளனர். இந்த நிலையில் ஒரு அதிரடி திட்டம் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இப்போது பதிவு செய்துள்ள வழக்குகளில் தான் கைதாக தடை வாங்கியுள்ளார். புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்ய, சம்பந்தப்பட்ட அமைப்பு தயாராகி விட்டதாம்.அது என்ன வழக்கு என்பதை, மிக ரகசியமாக வைத்துள்ளனர். வழக்கை பதிவு செய்துவிட்டு, உடனே கைது செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். நீதிமன்றம் போவதற்கு முன், அவரை கைது செய்து, ஒரு நாளாவது அந்த தலைவரை,'உள்ளே' உட்கார வைக்க, மேலிடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். 'அந்த நபர் ஆட்சியில் இருந்த போது, பா.ஜ.,விற்கு எதிராக செய்த அட்டகாசங்களை எப்படி மறக்க முடியும்; தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாத இந்த தலைவர், உள்ளே போவது தான் சரி' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement