Advertisement

வாழும் வள்ளுவம் : இன்று திருவள்ளுவர் தினம்

'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி' இது வரலாற்றுப் பதிவு. இச்சிறப்புப் பெற்ற தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் பெட்டகமாகத் திகழ்வது தமிழகம் தந்த வள்ளுவனால் தரணிக்குச் சொன்ன திருக்குறள். அச்சுக் கூடங்கள் அறவே இல்லை, எழுது பொருட்கள் தாளும் இல்லை, காகிதங்களை கண்டவர்கள் யாரும் இல்லை. இப்படிப்பட்ட காலத்தில் பனைஓலை துணை கொண்டு எழுத்தாணி கைக்கொண்டு எக்காலமும் போற்றும் முப்பாலாம் திருக்குறளை இம்மண்ணிற்கு வழங்கிச் சென்றான் வள்ளுவன். அறத்தை சொல்லி கொடுத்து பொருளை அள்ளிக் கொடுத்து, இன்பத்தோடு வாழ வழிகாட்டிய நுால் திருக்குறள். உலக மக்களின் நல்வாழ்விற்கு ஊன்றுகோலாக இருந்து தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. மழலை தொடங்கி நாட்டை ஆளும் மன்னன் வரைக்கும் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது என்று பாதை காட்டிய பண்பாட்டு நுால். ஒரு தனிமனிதன் அவனது வாழ்க்கையில் ஒரு முறையாவது திருக்குறளை முழுமையாகப் படித்து அதன் வழி வாழ்வானேயானால் நிச்சயமாக குற்றங்களும், வன்மங்களும் இல்லாத சமூதாயம் சாத்தியமாகும்.
கடல்கடந்தும் வாழ்கிறது : ஒட்டு மொத்த உலக அளவிலான வாழ்வியலை பார்ப்போமேயானால் வன்மம் மட்டுமே தன் பாதையை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. அறம் சார்ந்த வாழ்வியல் தடம் அழிந்து போய்க் கொண்டிருக்கிறது. இது தான் எதார்த்தம்.பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவன் எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடந்துவிடக்கூடாது என்பதனை கணித்து எச்சரிக்கை செய்தான். குறளில் பல இடங்களில் தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்திச் சென்றிருக்கிறான். சமூகத்தின் வாழ்வியல் நெறிமுறைகளை கட்டமைத்துக் காட்டி இருக்கிறான். அரசியலை அலசி ஆராய்ந்திருக்கிறான். இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய இலக்கணம் கற்பித்து சென்று இருக்கிறான். வள்ளுவத்தின் வாழ்வியல் தத்துவங்கள் இன்றளவும் கடல் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
குடும்ப வாழ்க்கை : வள்ளுவன் வாழ்வியலின் ஒவ்வொரு கூறுகளையும் அலசி ஆராய்ந்து பண்பாட்டை கட்டிக்காத்த பண்பட்ட புலவன். வாழும் வாழ்க்கை அறத்தை முழுமையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அன்றே பதிவிட்டுச் சென்றான். ஆனால் இன்றைய வாழ்க்கையில் அறம் அரிதாகிப்போய் விட்டது. கணவன் மனைவிக்குள் உண்மையும் இல்லை ஒற்றுமையும் இல்லை, விட்டுக் கொடுத்துப் போகாமல் வீதிக்கு வருகிறது குடும்ப ரகசியங்கள். அன்பை அடி நாதமாகக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை முற்றிலும் மறைந்து இன்றைக்கு பணமா குணமா என்று பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு குடும்ப வாழ்க்கை மாறிப்போய் விட்டது. பண்பாட்டுச் சிதைவுகள் பட்டி தொட்டி எங்கும் பரவிவிட்டது. பணமே பிரதானம் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். அது அத்தியாவசித் தேவையாக இருந்தாலும் அடிப்படையான அன்பும் அறமும் இல்லாத வாழ்க்கை வன்மம் சூழ்ந்த வாழ்க்கையாகத் தான் இருக்க முடியும்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'அற வாழ்க்கையின் அடிச்சுவட்டை அழுத்தமாக பதிவுசெய்த குறள் இது.
வாய்மை : உண்மையும் நேர்மையும் என்ன விலை என்று கேட்கும் அளவிற்குத்தான் இன்றைய வாழ்வியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. நம்பினார் கெடுவதில்லை என்கிறது நம் பழமொழி. ஆனால் நம்பிக் கெட்டவர்கள் நம்மில் பலபேர். பொய்யும் புரட்டும் சமூகத்தில் வேர் விட்டு படர்ந்து போய்க் கிடக்கிறது. அரிச்சந்திரன் என்ற மன்னன் நம் பாரத தேசத்தில் வாழ்ந்த வரலாறு பல பேருக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். வாய்மை தவறாத ஒரு மனிதனாக வாழ வேண்டும் என்பது தான் அவனது ஆசை. இதற்காக எதையும் செய்யத் தயராக இருந்தான். தான் ஆண்ட நாட்டை இழந்தான், கட்டிய மனைவியை இழந்தான்; பெற்ற பிள்ளையை பிரிந்தான். கடைசியில் சுடுகாட்டில் பிணம் எரித்தான். எந்த நிலை வந்தாலும் ஏற்றுக் கொண்டாடேன தவிர அதற்காக அவன் பொய் சொல்லி வாழ்ந்து சுகபோகம் அனுபவிக்கவில்லை.ஆனால் இன்றைய வாழ்க்கை சுகபோகம் மட்டும் கிடைத்தால் போதும். அதற்காக எந்தப் பொய்யையும் சொல்லத் தயார் என்றுதான் பல பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வாய்மை தவறிய வாழ்க்கையை வாழாதீர்கள் என்று வழிகாட்டிச் சென்றவன் வள்ளுவன்.மது, மாது, சூது இல்லாத வாழ்க்கையை வள்ளுவன் வழிமொழிகிறான். ஜாதி, மதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று எந்த இடத்திலும் வள்ளுவன் சுட்டிக்காட்டிச் செல்லவில்லை. மனிதனை மனிதனாக மட்டும் பாவித்துச் சென்றவன் வள்ளுவன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றுதான் சொன்னானே தவிர பிறப்பால் வேறுபாட்டை சுட்டிக்காட்டாத சமத்துவ நாயகன் வள்ளுவன். ஆனால் இன்று ஜாதியால் மதத்தால், பணத்தால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று கோடுபோட்டு பிரித்துக்காட்டும் கேடுகெட்ட சமூகமாக மாறிப்போய்விட்டது.
தமிழ்ச்சான்றோர் : நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனையை நாம் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால் வள்ளுவனின் பனைஓலை எழுத்துக்கள் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏவுகணையை விட வேகமாக கடலும் கண்டமும் கடந்து தமிழையும் தமிழனையும் அடையாளப்படுத்தியது.'அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகட்டி குறுகத் தறித்த குறள்' என்று குன்றின் மேலிட்ட விளக்காக வள்ளுவத்தை புகழ்ந்து சென்றாள் அவ்வை பிராட்டி. 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாரதி தன் பங்கிற்கு வாழ்த்திச் சென்றான்.'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' எனப் பாரதிதாசனும் வள்ளுவத்தை வாழ்த்தி பதிவிட்டுச் சென்றான். வாழும் குறளையும் வாழ்ந்து மறைந்த வள்ளுவனையும் நம் தமிழ்ச் சான்றோர் வாழ்த்தி வணங்கிச் சென்றிருப்பது வள்ளுவம் எனும் வாழ்வியல் நுாலுக்கு கிடைத்த பெருமை.வந்தோரை வரவேற்று வயிற்றுக்கு உணவிட்டு முகம் மலர கண்டு களித்து கொண்டாடுவது தமிழரின் விருந்தோம்பல் பண்பாடு. இதற்கும் இலக்கணம் சொன்னான்.'மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என்று உலக அரங்கில் தமிழரின் விருந்தோம்பலை பல நுாற்றாண்டுகளுக்கு முன்பாகவே பறைசாற்றிச் சென்றவன்.'தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்றும் ஏழு வார்த்தைகளில் வாழ்க்கையின் வெற்றிக்கான சூட்சுமத்தை விதைத்துச் சென்றவன். ஒவ்வொரு குறளிலும் உள்ள ஏழு வார்த்தைகளும் ஏழு கடலையும் தாண்டி இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வள்ளுவத்தின் வார்த்தைகளின் வலிமையும், வாழ்வியலும் உலக அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தர்மத்தின் வாழ்வினை ஒரு தமிழனால் உலகத்திற்கு உரக்கச் சொல்லிய, தமிழர்களின் தல வரலாறு சொல்லும், தமிழ்ப்பெட்டகம் தான் திருக்குறள். வள்ளுவத்தைபடிப்போம்... அதன் வழியில் பயணிப்போம்.
-மு.ஜெயமணி
உதவிப்பேராசிரியர்இராமசாமி தமிழ்க்கல்லுாரிகாரைக்குடி84899 85231

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement