Advertisement

நம்மாழ்வார் வழிகாட்டிய நெல் சாகுபடி!

திருவள்ளூர் மாவட்டம், அத்திமாஞ்சேரி கிராமத்தில், பண்ணை வைத்துள்ள சித்தம்மா: கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள, சிவகங்காவை சேர்ந்தவள் நான். சிறு வயதில் கரடி தாக்கியதால், சிகிச்சைக்காக அடிக்கடி தமிழகம் வருவேன். அப்போது, இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார், விவசாய பிரசாரம் செய்து வந்தார். இயற்கை விவசாயம் மேலான ஈடுபாட்டால், அவரது கூட்டங்களுக்கு போய் பேச்சை கேட்டேன்.ரசாயன உரங்களைப் போட்டு, விவசாயம் செய்து கடனாளி ஆன அப்பா, தற்கொலை வரை போனதால், விவசாயமே வேண்டாம் என்ற முடிவில் இருந்தோம். ஆனால், நம்மாழ்வார் பேச்சு, இயற்கை விவசாயம் மேலான நம்பிக்கையை கொடுத்தது. கடந்த, 2005-ல், இந்த இடத்தை, 1 ஏக்கர், 1.15 லட்சம் ரூபாய் என, 13 ஏக்கர் வாங்கினோம். மலைகளுக்கு இடையே இருப்பதால், வாங்கும்போது, 10 ஏக்கர் ரொம்பக் கரடு முரடாக இருந்தது. நம்மாழ்வார் யோசனைப்படி, நவதானியம் விதைத்து, வரப்புகளில் மரங்களை நட்டு வைத்தேன் . நேரம் கிடைக்கும் போது, பண்ணைக்கு வந்த நம்மாழ்வார், எதை எங்கெங்கே சாகுபடி செய்ய வேண்டும் என, வடிவமைத்து கொடுத்தார். அவர் சொன்னபடி, மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை, சிறுதானியம், பயறு வகை சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். தொடர்ந்து உழவு ஓட்டியதால், வயலில் கோரைப்புல் முளைப்பது குறைந்தது. அதன்பின் ஒரு நாள், நம்மாழ்வார் வந்து, 'ஒற்றை நாற்று நடவு முறையில், நெல் நடவு செய்...' என, சீரகச்சம்பா விதை நெல்லையும் கொடுத்தார். அவர் கூறியபடி நடவு செய்ததில், 1 ஏக்கருக்கு, 2.5 கிலோ நெல் போதுமானதாக இருந்தது. வழக்கமான நடவு எனில், 25 கிலோ விதை நெல் தேவைப்படும். அதில் இருந்து, ஒற்றை நாற்று முறையில் தான், நெல் சாகுபடி செய்கிறோம். மரங்களில் இருந்து கிடைக்கும் இலை, தழைகளை, வயல் மூடும்படி போடுவோம். வளர்த்து வரும், 10 நாட்டு மாடுகளில் இருந்து கிடைக்கும், பால், சாணம், கோமியத்தை பயன்படுத்தி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா என, இடுபொருள்களை தயாரிக்கிறோம். இப்படி இயற்கை இடுபொருட்கள், தொழுஉரம், இலைதழைகளை பயன்படுத்துவதால், மண் வளமாகி, 1 ஏக்கருக்கு, 75 கிலோ அடங்கிய, 30 மூட்டை நெல் கிடைக்கிறது. அதிகபட்சமாக, 40 மூட்டை மகசூலும் கிடைத்துள்ளது.நெல்லாக விற்காமல், அரிசியாகவே அரைத்து, விற்பனை செய்கிறேன். ஒரு போகத்துக்கு, 5 ஏக்கர், வெள்ளை பொன்னி நெல் சாகுபடி மூலமாக, இதர செலவுகள் போக, 3.75 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. நிறைய பேருக்கு ஒற்றை நாற்று நடவு மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகிறேன்.
தொடர்புக்கு: 9884080048.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement