Advertisement

நடவடிக்கை இல்லையே: திறந்த வெளியில் விற்கப்படும் உணவு பொருட்கள்

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டத்தில் விற்கப்படும் திறந்த வெளி உணவுப்பொருட்களால் பொது மக்களின் சுகாதார நலன் பாதிக்கப்பட்டு வருகிறது. கண்காணிக்க வேண்டிய துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் பலரும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
பொது மக்களின் சுகாதார நலன் கருதி உணவுபாதுகாப்பு துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. இத்துறை அலுவலர்கள் உணவு தயாரிக்கும் இடங்கள், விற்பனை இடங்களில் சோதனை மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு கலப்படம் இன்றி விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்வார்கள்.
கலப்படம் உள்ள பொருட்களை கண்டறிந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்விற்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைப்பதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பர். இதன் மூலம் உணவின் தரம் தொடர்ந்து பராமரிக்கப்படும். ஆனால் இதையெல்லாம் செய்ய வேண்டிய உணவு பாதுகாப்பு துறையின் பணியானது தற்போது கேள்விக்குறியாக உள்ளது. அனைத்து இடங்களிலும் திறந்த வெளிகளில் வைத்திருக்கும் பண்டங்களால் தொற்று நோய்களும் பரவுகிறது. குறிப்பாக பள்ளிகள் முன், சாக்கடை கால்வாய் மேல், துாசுகள் பறக்கும் நடைபாதை, டாஸ்மாக் பார் என பல்வேறு பகுதிகளிலும் இவை தொடர்கிறது.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்று பகுதி, மெயின் ரோடு, முடங்கியாறு ரோடு, சத்திரப்பட்டி ரோடு, சங்கரன் கோயில் முக்கு உள்ளிட்ட பகுதி பெரிய ஓட்டல்களிலும் ரோட்டில் தெரியும் படி உணவு தயாரித்து சுட சுட வழங்கி வருகின்றனர். மாலை முதல் நள்ளிரவு வரை செயல்படும் ரோட்டோர கடைகளில் விற்கப்படும் பழைய இறைச்சியும் அவற்றை வெளியே வைத்து விற்பதும் தொடர்கிறது. இது கண்கூடாக தெரிந்தும் அதிகாரிகள் பாராமுகமாக இருந்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் தடையோடு இவற்றையும் முறைப்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு பாதிப்பு
உணவு பொருட்களின் பாதுகாப்பில் மெத்தன போக்கு பல்வேறு நோய் தொற்றுக்கு வழி வகுக்கும் .குறிப்பாக பள்ளிகள் முன்பு பாதுகாப்பற்று திறந்த வெளி உணவு பொருட்களால் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. ரோட்டோர கடை முதல் பெரிய கடைகளில் விற்பனை செய்யப்படும் முறைகள் அனைத்தையும் தொடர் ஆய்வு மூலம் சரி செய்வதை நகராட்சி சுகாதார துறை, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும். முத்து கிருஷ்ண குமார், சமூக ஆர்வலர், ராஜபாளையம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Siva - Aruvankadu,இந்தியா

    இதெல்லாம் ஒரு செய்தி... இது தமிழகத்தில் முழுதும் உள்ளது... .... மனசாட்சி அற்ற ஊழியர்கள்.. மக்கள் வரி பணத்தில் வாழ்வதை மறந்த நன்றி கெட்டவர்கள்...

  • Bhaskaran - Chennai,இந்தியா

    சுகாதார அதிகாரிகளுக்கு மாதாமாதம் மாமூல் சென்றுவிடுவதால் அவர்கள் கண்களுக்கு இதெல்லாம் தெரியாது இது தமிழ்நாடுமுழுவதும் உள்ளஅவலநிலை

Advertisement