Advertisement

'ஆவின்' பெட்டிகளை அகற்ற... மனசு வைக்கணும்! கெஞ்சுகிறது நெடுஞ்சாலைத்துறை!

கோவை : உக்கடம் மேம்பாலப் பணிக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்களையும், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள, 'ஆவின்' பெட்டிகளையும் அகற்றித்தர, மாநில நெடுஞ்சாலைத்துறை கோரியுள்ளது; போக்குவரத்து நெருக்கடியை பற்றி கவலை கொள்ளாமல், மாநகராட்சி நிர்வாகமோ, மவுனம் சாதிக்கிறது.


கோவை, உக்கடம்-கரும்புக்கடை வரை மேம்பாலம் கட்டும் பணி படுவேகமாக நடந்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட துாண்கள் கட்டப்பட்டு விட்டன. பஸ் ஸ்டாண்ட் முன், துளையிடும் பணி நடந்து வருகிறது.அப்பகுதியில், போக்குவரத்தை திருப்பி விடுவதற்காக, பஸ் ஸ்டாண்ட் சுற்றுச்சுவர் சிறிதளவு இடிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சுவரை ஒட்டி, 'ஆவின்' பெயரில் டீக்கடைகள் நடத்தப்படுகின்றன. மொத்தம், 11 கடைகள் இருக்கின்றன. அவற்றை அகற்றி, சுற்றுச்சுவரை இடித்தால், அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணலாம்; மேம்பாலப்பணி இன்னும் வேகமெடுக்கும்.


நெருக்கடியால் அவதிகடைகளை அகற்றி தரக்கோரி, மாநகராட்சி கமிஷனருக்கும், மத்திய மண்டல உதவி கமிஷனருக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறை கடிதம் கொடுத்துள்ளது. அக்கடைகளில் வசூலிக்கும் சொற்ப வாடகையை விட்டுக்கொடுக்க மாநகராட்சி முன்வராமல், தாமதித்து வருகிறது. அதனால், பஸ் ஸ்டாண்ட் முன், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாகனங்கள் முட்டி மோதிக் கொள்கின்றன. பஸ் ஸ்டாண்ட் முன் துாண்களுக்கு துளையிடும் வேலை தாமதமாகி வருகிறது.


இதேபோல், பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆத்துப்பாலம் செல்லும் வழியில், ஆறு மின் கம்பங்கள் இடையூறாக உள்ளன. அவற்றை இடம் மாற்றித் தரவும், மின் வாரியத்துக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை கடிதம் கொடுத்துள்ளது. அவ்வேலையும் நிலுவையில் இருப்பதால், பாலம் பணியின் வேகம் குறைந்திருக்கிறது.


உக்கடத்தில் இருந்து செல்வபுரம் செல்லும் பைபாஸில், 'டோபிகானா'வை இடமாற்றம் செய்ய வேண்டும். மாநகராட்சிக்கு கடிதம் கொடுத்து, ஓராண்டாகி விட்டது. குடிசை மாற்று வாரியம், வீடு கட்டிக் கொடுக்கப் போகிறது என காரணம் சொல்லி, 'டோபிகானா'வை மாற்றிக்கொடுக்காமல், அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.மாநில நெடுஞ்சாலைத்துறை, தமிழக முதல்வர் பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரது இந்த கனவு திட்டத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பதால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மத்தியில், அதிருப்தி எழுந்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement