Advertisement

ஆடைகளை அனுப்புவதில் நிறுவனங்கள் மும்முரம்! பொங்கல் விடுமுறை என்பதால் தீவிரம்

திருப்பூர் : பொங்கல் விடுமுறை துவங்குவதால், தயாரித்த ஆடைகளை அனுப்புவதில், திருப்பூர் ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன.


திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில், மதுரை, தேனி, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.பண்டிகைக்காக, நாளை முதல் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. வெளிமாநில தொழிலாளர்கள், விடுமுறை முடிந்து ஓரிரு நாட்களில் திரும்பிவிடுவர். தமிழக தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு சென்று, பொங்கல் விழா கொண்டாட்டங்கள் முடிந்து, ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்கு பின்னரே, திரும்புவர்.


தீபாவளிக்கு பின், உள்நாட்டு, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, அதிகளவு ஆர்டர்கள் கிடைக்கத்துவங்கின. பொங்கல் விடுமுறையை கணக்கிட்டு, ஆடை தயாரிப்பை பூர்த்தி செய்வதில், நிறுவனங்கள் வேகம் காட்டிவந்தன. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும், சில ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கின.


கடந்த 8, 9ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை பொருட்படுத்தாமல், ஆடை தயாரிப்பு தடையின்றி நடந்தது. அவசர கால ஆடை தயாரிப்பை நிறுவனங்கள் நிறைவு செய்துவிட்டன. நேற்று முன்தினம் முதல், தயாரித்த ஆடைகளை, துறைமுகம் வாயிலாக வெளிநாடுகளுக்கும்; லாரிகளில் ஏற்றி, வெளிமாநிலம் அனுப்பும் பணிகள் நடந்துவருகின்றன.


இரவு பகலாக கன்டெய்னர்களில், பின்னலாடை சரக்குகளை அனுப்புகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள், இன்று சம்பளம் வழங்கி, நாளை முதல் பொங்கல் விடுமுறை அளிக்கின்றன. ஆடை தயாரிப்பை நிறைவு செய்யாத சில நிறுவனங்கள் மட்டும், நாளையும் இயங்குகின்றன; தயாரிப்பு முடித்து, 14ம் தேதி துறைமுகங்களுக்கு பின்னலாடைகளை அனுப்பிவிட்டு, விடுமுறை அளிக்கின்றன.


கூடுதல் பணி நேரத்துக்கு, கூடுதல் சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படுவதால், பண்டிகை கால செலவினங்களை கருத்தில்கொண்டு, தொழிலாளர்களும், தயக்கமின்றி, ஆர்வத்துடன் பணிபுரிகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement