Advertisement

'கணக்கில் வராத' கணக்குகள்: இம்ரானுக்கு சிக்கல்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கட்சிக்கு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 'கணக்கில் வராத' 18 கணக்குகள் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இம்ரான்கான் கட்சிக்கு பல்வேறு வங்கிகளில் கணக்குகள் உள்ளதாகவும், முறைகேடாக பணம் வசூலிக்கவும், ஊழல் பணத்தை செலுத்தவும் இந்த கணக்குகள் பயன்படுத்தப்படுவதாகவும் தேர்தல் ஆணையத்தில் அதே கட்சியின் மூத்த உறுப்பினர் அக்பர் பாபர் புகார் செய்தார்.


இதையடுத்து பாகிஸ்தானில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பெயர்களில் உள்ள கணக்கு விபரங்களை பெற்று வழங்குமாறு அந்நாட்டின் ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.மேலும் பல்வேறு வங்கிகளில் இருந்தும் கணக்கு விபரங்களை பெற்ற ஸ்டேட் வங்கி அதன் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது.


தேர்தல் ஆணையம் இந்த கணக்குகளையும், தேர்தல் ஆணைய ஆவணங்களில் கட்சிகள் தெரிவித்துள்ள கணக்குகளையும் ஒப்பிட்டுப்பார்த்தது.தேர்தல் ஆணையத்தில் இம்ரான்கான் தாக்கல் செய்திருந்த பட்டியலில் கட்சிக்கு நாடு முழுவதும் 8 கணக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால் ஸ்டேட் வங்கி அளித்த பட்டியலில் 26 கணக்குகள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் மூலம் 18 கணக்குகள் கணக்கில் காட்டப்படவில்லை.இது குறித்து நேற்று ஆஜராகி விளக்கமளிக்குமாறு இம்ரான்கானின் தெரிக்--இ-இன்சாப் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.


நேற்று தேர்தல் ஆணைய பிரதிநிதிகள், புகார் அளித்த அக்பர் பாபர் உள்ளிட்டோர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் இம்ரான் கட்சி பிரதிநிதிகள் வரவில்லை.இதுகுறித்து அக்பர் பாபர் கூறுகையில், குறுகிய காலத்தில் இம்ரான் கட்சி முறைகேடுகளின் மொத்த உருவமாக மாறிவிட்டது. போலி கணக்குகள் மூலம் ஊழல் பணத்தை சேர்த்து வருகின்றனர், என்றார்.ஆனால் இதை தெரிக்--இ-இன்சாப் கட்சியின் நிதிப்பிரிவு செயலாளர் அசார் தாரிக் மறுத்துள்ளார்.


அவர் கூறுகையில், கட்சியின் பல்வேறு நகர கிளைகளில் நிதி வசூலுக்காக கணக்குகள் துவங்கியிருக்கலாம். அவற்றில் ஆங்காங்கே உள்ள கட்சி நிர்வாகிகள் தான் பரிமாற்றம் செய்கின்றனர். அதற்கும் கட்சி தலைமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சி தலைமையகத்தால் கையாளப்படும் கணக்குகள் விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தோம், என்றார்.


தேர்தல் பிரசாரத்தின்போது பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் ஊழல் செய்து வெளிநாடுகளில் சேர்த்துள்ள சொத்துகளை மீட்போம், அதை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவோம், எந்த நிலையிலும் ஊழல் இல்லாத அரசாங்கத்தை அமைப்போம், என இம்ரான்கான் வாக்குறுதியளித்திருந்தார்.தற்போது போலி வங்கி கணக்குகள் மூலம் கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது இம்ரானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இந்த கணக்குகளை கையாளும் பலரும் இம்ரானின் அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களாக உள்ளனர்.இதனால் இம்ரானின் அரசுக்கே பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement