Advertisement

அ.தி.மு.க., அணியில் ஐக்கியமாகும் பா.ம.க.,

''வங்கி வாடிக்கையாளர்களுக்கு இன்னும் டைரி வரலைங்க...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.


''எந்த வங்கியில, வாடிக்கையாளர்களுக்கு டைரி எல்லாம் குடுக்குறாங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.


''சென்னை பாரிமுனையில, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி இருக்கு... இதுக்கு, சென்னை முழுக்க, 47 கிளைகள் இருக்கு... இங்க கணக்கு வச்சிருக்கிறவங்களுக்கு, வருஷா வருஷம், டிசம்பர் மாசமே டைரி, காலண்டர் குடுத்துடுவாங்க... ''இந்த வருஷம், காலண்டர் குடுத்தவங்க, டைரி தரலை... இப்ப, வங்கியின் நிர்வாக இயக்குனரா இருக்கிற அந்தோணி ஜான்பீட்டரை சீக்கிரம் மாத்திட்டு, ராஜேந்திரன்னு ஒருத்தரை, நியமிக்க இருக்காங்களாம்... 'அவர் பொறுப்பேற்றதும், அவர் படத்தை போடுறதுக்காக, டைரி தயாரிப்பை நிறுத்தி வச்சிருக்காங்க'ன்னு, வங்கி ஊழியர்கள் சொல்றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.


''சொந்த சோகத்தைக் கூட மறந்து, கரெக்டா கூட்டத்துக்கு வந்துட்டாருங்ணா...'' என, அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தார் கோவை, கோவாலு.


''யாரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.


''மதுரையில, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம், போன வாரம், ராத்திரி, 8:00 மணிக்கு துவங்குச்சு... இதுல, சிறப்பு அழைப்பாளரா, போலீஸ் கமிஷனர், டேவிட்சன் தேவாசீர்வாதம் கலந்துக்கிறதா அறிவிச்சிருந்தாங்ணா... ''ஆனா, அன்னைக்கு துாத்துக்குடியில, கமிஷனரின் சகோதரர், உடம்பு சரியில்லாம இறந்து போயிட்டார்... கமிஷனர், அதுக்கு போயிட்டதால, கூட்டத்துக்கு வரமாட்டார்னு நினைச்சாங்க... ஆனா, சகோதரர் இறுதிச்சடங்குல கலந்துக்கிட்டு, ராத்திரியில நடந்த கூட்டத்துக்கும், கரெக்டா கமிஷனர் வந்துட்டாருங்ணா...'' என, முடித்தார் கோவாலு.


''அ.தி.மு.க.,வோட முதல் கட்ட பேச்சு முடிஞ்சுட்டு வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.


''கூட்டணி விவகாரமா... சீக்கிரம் சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''அ.தி.மு.க., கூட்டணியில சேர, பா.ம.க., தயாராயிட்டு... சமீபத்துல, சட்டசபையில, கவர்னர் உரையை மற்ற எதிர்க்கட்சிகள் குறை சொன்னப்ப, பா.ம.க., மட்டும், பாராட்டு தெரிவிச்சது வே... ''சமீபத்துல, பா.ம.க., பொதுக்குழு கோவையில கூடுச்சே... அப்ப, கோவையில ஒரு ஓட்டல்ல தங்கியிருந்த ராமதாசை, அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசன் ராத்திரி நேரம் சந்திச்சு, கூட்டணி பத்தி, ரொம்ப நேரம் பேசியிருக்காரு வே...


''அப்ப, அங்க இருந்தே போன்ல, அமைச்சர் வேலுமணிகிட்டயும், ராமதாஸ் பேசியிருக்காரு... முதல் கட்ட பேச்சு திருப்தியா முடிஞ்சிட்டு... அடுத்தடுத்து பேசி, அ.தி.மு.க., கூட்டணியை, பா.ம.க., உறுதிப்படுத்தும்னு சொல்லுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி. விவாதம் முடிய, அனைவரும் கிளம்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா

    Appo PMK avlo thaana? Aiyo aiyo.

  • Vasanth Kumar - Chennai,இந்தியா

    பாவம் அதிமுக நிலைமை

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    நேர்மையான கடமை தவறாத சிறந்த கமிஷனர்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    காங்கிரஸ் திமுக கூட்டணியில் பெர்த் கிடைக்கவில்லையென்பதால் அதிமுக வண்டியில் ராமதாஸ் ஏறிதானே ஆகணும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement