Advertisement

ஸ்டாலின் மீது மம்தா கோபம்

ஸ்டாலின் மீது மம்தா கோபம்

'பா.ஜ., எதிர்ப்பு கூட்டணி சார்பாக ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியது, கூட்டணிக் கட்சிகளிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜி, ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் உள்ளதாக, அவர் கட்சி சீனியர்கள் தெரிவிக்கின்றனர்.'இப்படி சொல்ல, ஸ்டாலினுக்கு என்ன அவசரம்?' என கோபத்தில் கொந்தளித்தாராம், மம்தா.'ராகுல் பெயரைச் சொன்னால் ஓட்டு கிடைக்குமா' என கேள்வி எழுப்பும் மம்தா, 'மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, ஒரு பிரஷர் குரூப் உருவாக்க வேண்டும் என நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்; ஸ்டாலின் இதை ஏன் கெடுக்கிறார்' என்கிறாராம்.'எப்படியும் காங்கிரஸ் தனியாக ஆட்சி அமைக்க முடியாது; மாநில கட்சிகளின் உதவி அவசியம்; அப்படியிருக்க, எதற்கு காங்கிரஸ் பிரதமர்; கூட்டணிக் கட்சிகளிலிருந்து யாராவது ஒருவர் பிரதமர் ஆகலாமே' என்பது மம்தாவின் எண்ணம். இவருக்கும் பிரதமர் ஆசை இருப்பதாக சொல்லப்படுகிறது.
திருமணத்தில் அசத்தல்!

முகேஷ் அம்பானி மகள் திருமணம் படு விமரிசையாக நடந்து முடிந்தது. மும்பை, சென்னை நடிகர்களோடு, வெளிநாட்டு பிரமுகர்கள், முதல்வர்கள், அரசியல்வாதிகள் என பெரிய கூட்டம் இந்த திருமணத்தில் கலந்து கொண்டது.தமிழகத்திலிருந்து, 40 முக்கிய பிரமுகர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர். டில்லியில் உள்ள தமிழர் ஒருவர் தான், தமிழக பிரமுகர்களை நன்றாக கவனித்துக் கொண்டார்.திருபாய் அம்பானியிடம் நெருக்கமாக இருந்த அந்த தமிழர், இப்போது முகேஷுக்கும் நெருக்கமாம். அவர் தான் தமிழக அரசியல்வாதிகளையும், முக்கியமானவர்களையும் கல்யாணத்தில் கவனித்துக் கொண்டவர்.தமிழகத்திலிருந்து வந்த பிரமுகர்களில் சிலர் தனியாகவும், சிலர், தத்தம் மனைவியுடன் வந்திருந்தனர். ஆனால் ஒரு முக்கிய பிரமுகர், ஏழு பேரோடு வந்திருந்தாராம். தன் குடும்பம் முழுவதையுமே அழைத்து வந்திருந்தார். இதைப் பார்த்து பலர் ஆச்சர்யப்பட்டனர்; சிலர் விமர்சனமும் செய்தனர்.'ஏதோ சொந்தக்காரங்க கல்யாணத்திற்கு வருகிற மாதிரி முழு பட்டாளத்தையுமே அழைத்து வந்துவிட்டாரே' என, கிண்டலடித்தனராம். ஆனால், இதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த பிரமுகர், புது மண தம்பதியை வாழ்த்தி போட்டோவும் எடுத்துக் கொண்டாராம்.
ஆரம்பமே சரியில்லை!

ஒரு வழியாக, ராஜஸ்தான் முதல்வர் யார் என்பதை, ராகுல் அறிவித்துவிட்டார். அசோக் கெலாட் முதல்வரா அல்லது சச்சின் பைலட் முதல்வரா என்ற சண்டை, சினிமா கிளைமேக்ஸ் போல நீடித்து, 67 வயதான கெலாட் முதல்வரானார். 41 வயதான சச்சின் பைலட், நம்ம ஊர் பன்னீர் போல் துணை முதல்வராகி விட்டார்.ஆனால், அங்கு நிலைமை சரியில்லை என்கின்றனர், காங்கிரசார். 'சச்சின் பைலட்டின் அதிருப்தி நீடிக்கிறது; கடும் கோபத்தில் அவர் உள்ளார்' என்கின்றனர், அவருடைய ஆதரவாளர்கள்.'பைலட்டின் கடின உழைப்பால் தான் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது; ஆனால், அவரை முதல்வராக்கவில்லை' என அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர். இளைஞர்கள் முக்கிய பதவிகளுக்கு வர வேண்டும் என்று சொல்லும் ராகுல், ஏன் பைலட்டை முதல்வராக்கவில்லை? ராகுலுக்கு, சச்சின் பைலட் தான் பிடிக்கும். ஆனால், அசோக் கெலாட், சோனியாவுடன் நெருக்கம்; அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.எனவே, சோனியா தான், 'கெலாட் முதல்வராகட்டும்; பைலட், துணை முதல்வராக பதவியேற்கட்டும்' என சொல்லிவிட்டாராம்.முதல்வரும், துணை முதல்வரும் மட்டுமே பதவி ஏற்றனர். இப்போது, அமைச்சர்கள் லிஸ்ட் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதிலும், கெலாட்டிற்கும், பைலட்டிற்கும் பிரச்னை. தான் முதல்வராக இருந்த போது யார் அமைச்சர்களாக இருந்தனரோ அவர்களுக்கு மீண்டும் பதவி என்கிறார், கெலாட்.'அவர்கள் வயதானவர்கள்; இளைஞர்களுக்கு பதவி கொடுங்கள்' என்கிறார் பைலட். காங்கிரஸ் என்றாலே, கோஷ்டி பிரச்னை தான்!
குழப்பத்தில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
'மேகதாது அணையை கர்நாடகா கட்ட அனுமதிக்கக் கூடாது' என, தினமும் பார்லிமென்டில் கோஷமிட்டு, சபை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள். மேலும், தினமும் பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், பதாகைகளுடன், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நின்று, ஆர்ப்பாட்டமும் நடத்தி வந்தனர்.ஆனால், திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நின்று போனது; தவிர, லோக்சபாவிலும், மையத்திற்கு வராமல் உட்கார்ந்த இடத்திலேயே அதிக சத்தமில்லாமல் கோஷமிட்டனர்.இதற்குக் காரணம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை என்கின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்.உடல்நிலை சரியில்லாமல், ஊரில் இருந்த தம்பிதுரை டில்லி வந்துவிட்டார். 'எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்; லோக்சபாவில், உட்கார்ந்த இடத்திலேயே பதாகைகளைக் காட்டுங்கள்' என தம்பிதுரை, 'அட்வைஸ்' தந்ததாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கூறியுள்ளனர்.'என்னாச்சு? ஏன் சபை ஒத்தி வைக்கப்படவில்லை? மேகதாது பிரச்னையை ஏன் எழுப்பவில்லை?' என சென்னையிலிருந்து கேள்விகள்; அதன் பின், சபையில் மீண்டும் கோஷங்கள்.ஆனால், அதற்குள் சபை நடவடிக்கைகள் நடந்தேறி விட்டன. இனி, 27ம் தேதி தான் பார்லி., நடக்கவுள்ளது. அப்போது அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகின்றனர் என பார்க்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • venkat Iyer - nagai,இந்தியா

    இனிமேல் ஸ்டாலின் சொன்னதை மாற்றலாம் போகின்றார்கள்.

Advertisement