Advertisement

மத்திய அரசு மீது குறை கூறாதீர்!

எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்தியில் ஆளும், பா.ஜ., ஆட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் பல்வேறு புகார்களை கூறுகின்றன. குறிப்பாக, காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து எகிறி வருவதாக குற்றம் சாட்டுகின்றன. இந்தாண்டில், ஜனவரி முதல், நவம்பர் வரை, காஸ் சிலிண்டரின் விலை, 11.68 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது.


படுத்து கொண்டே போர்த்தினாலும், போர்த்திக் கொண்டே படுத்தாலும் இரண்டும் ஒன்று தான் என்பர். அது போல், காஸ் சிலிண்டர் விவகாரத்தில், பிரதமராக, மன்மோகன் இருந்த காலத்தில் படுத்துக் கொண்டே, மக்கள் போர்த்தி கொண்டனர். இன்று, மோடி ஆட்சி காலத்தில், போர்த்திக் கொண்டே, மக்கள் படுத்து இருக்கின்றனர்; அவ்வளவு தான் வித்தியாசம்!


மன்மோகன் சிங் காலத்தில், காஸ் சிலிண்டருக்கு, மானிய தொகையை கழித்து, நிகர விலையை மக்கள் கொடுத்தனர். இன்று, மோடி ஆட்சியில், சிலிண்டர் விலையை கொடுத்து, மானியத்தை வங்கிக் கணக்கில் மக்கள் வரவு வைக்கின்றனர். வங்கியில் மானியத்தை வரவு வைக்கும் புதிய முறையால், முறைகேடாக, காஸ் இணைப்பு பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு அரசு வழங்கிக் கொண்டிருந்த மானியமும் கண்டறியப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.


டீசல், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 100 ரூபாயை தொட்டு விடும் என, மக்கள் அஞ்சினர். தற்போது, 80 ரூபாய்க்கு கீழ் விலை உள்ளது. எரிபொருள் தேவை அதிகரிப்பால், விலை எகிறி வருகிறது. வீட்டில் இருந்து, 100 மீட்டரில் உள்ள கடைக்கு செல்வதென்றால் கூட, டூ -வீலரில் செல்லும் பழக்கம், பலரிடம் உள்ளது. குடும்பத்துடன் செல்லும் போது, காரை பயன்படுத்தலாம். தனியாகவோ இருவராகவோ சென்றால், டூ வீலரை பயன்படுத்தலாம். அதை யாரும் செய்வதில்லை.


கொஞ்சமாவது தங்களை மக்கள் திருத்தி கொண்டால் தான், அரசு நடவடிக்கைகளும், விலைவாசிகளை குறைக்கும். மின்சார ரயில்கள், மாநகர பஸ்களை மக்கள் பயன்படுத்த துவங்கினால், டீசல், பெட்ரோல் தேவை குறையும். ஆனால், வீட்டிற்கு, இரண்டு டூ - -வீலர்கள், கார் என இருந்து, பயன்பாடு அதிகரித்தால், அரசை குறை கூறுவதில், அர்த்தம் இல்லையே!


---


பரிமாற்ற திட்டம் பள்ளிகளில் செயல்படுகிறதா?

வீ.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழக பள்ளி கல்வி துறை , 2016 - 17 கல்வியாண்டு முதல், பள்ளி பரிமாற்ற திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கூறுகிறது. நடப்புக் கல்வி ஆண்டில், 2018 - 19க்கு மாநிலம் முழுவதும், 285 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாம்!


இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம், அரசு. அரசு உதவிப் பெறும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், ௮ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியரில், பின் தங்கிய, நடுத்தர, மேம்பட்ட என, மூன்று ரகங்களுள், 20 பேர் தேர்வு செய்யப்படுவர். கிராம பள்ளியைச் சேர்ந்தவர்கள், நகர் பகுதி பள்ளிகளுக்கும், நகர் பகுதி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கிராமப்பகுதி பள்ளிக்கு, தலா ஆறு நாட்கள் வீதம் வந்து செல்ல வேண்டும்.


போக்குவரத்து, சாப்பாடு செலவுக்காக, ஒவ்வொரு மாணவனுக்கும், தினமும், 250 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதற்காக, ஒரு பள்ளிக்கு, 30 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. கிராம, நகர்ப்புற மாணவ - மாணவியர், இந்த நாட்களில், கலந்து பழக வாய்ப்பு கிடைக்கிறது. அறிவுசார் விவாதங்கள், மேலாண்மை பண்புகள், கலாசார பண்புகள் வரை, வழி பிறக்கிறது. முதல் ஐந்து நாட்களுக்கு, தமிழ் முதல் சமூக அறிவியல் வரை, ஐந்து பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. கடைசி நாட்களில் மாணவர்களின் படைப்பாற்றலை வைத்து, கண்காட்சியும், தகவல் தொழில்நுட்ப உதவியுடன், பாடங்களும் நடத்தப்படும்.


மாணவர்கள் குறிப்பிட்ட அந்த ஆறு நாட்களிலும், காலையில் வந்து, மாலையில் அவர்கள் ஊர் திரும்ப வேண்டும். 2019, பிப்ரவரி வரை, இது நடைபெறும். மாணவர்களை அலைய விடாமல் பரிமாற்றம் செய்யப்பட்டால், பள்ளிகளில் தங்க நேரிடும். அப்போது, மாணவ - மாணவியருக்கு அலைச்சல் குறையும். இரவில், அந்த ஊர் மக்களுடன் கலந்து பழக வாய்ப்பு ஏற்படும். அப்பகுதிகளில் இரவில், மாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம். மாணவியருக்கு, பள்ளி நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.


பள்ளி பரிமாற்றத் திட்டம், சரியாக நடக்கிறதா என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம். அப்படி சரியாக நடந்தால், கூடுதல் அம்சங்களையும் சேர்க்கலாம். இத்திட்டத்தில், வரும் ஆண்டுகளில், ௬ முதல் 10ம் வகுப்பு வரை மாணவ -மாணவியருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்!


---


அரசியல் களத்தில் இறங்கி ஆடாமல் ஆருடம் கூறாதீர்!

கே.வி.பி.சியாமளநாதன், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ரஜினி - பா.ஜ., கூட்டணி அமைந்தால்...' என்ற தலைப்பில், இதே பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். அப்படி அமைந்தால், 'தி.மு.க., கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்' என குறிப்பிட்டு இருந்தார்.


ரஜினி அரசியலுக்கு வருவாரா, எப்போது வருவார் என, வாசகர் தெளிவுப்படுத்த வேண்டும். 'நான், அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது' என, நடிகர் ரஜினி கூறி, பல ஆண்டுகளாகி விட்டன. முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மறைவிற்கு பின், திடீரென, 'தமிழகத்தில் சிஸ்டம் கெட்டு விட்டது' என்றார். ஜெயலலிதாவை எதிர்த்த காலத்தில், 'இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என கூறியவர். ஒரு கூட்டத்தில், 'சிறந்த தலைவர் கருணாநிதி; அவருக்கு இணையான தலைவரே இல்லை' என்றார்; இப்படி முன்னுக்கு பின் முரணாக உள்ளார், ரஜினி!


கருணாநிதி மறைவின் போது, 'அண்ணாதுரை சமாதி அருகே, அவருக்கு இடம் தரவில்லை என்றால், நானே களத்தில் இறங்கிப் போராடியிருப்பேன்' என்றார். தற்போது, 'நாட்டுக்கு நல்லது செய்யவே மோடி பாடு படுகிறார்' என்கிறார். நாளொரு பேச்சும் பொழுதொரு கட்சிக்கு ஆதரவாக அவர் பேசினால், அவர் எப்போது தான் கட்சி ஆரம்பிப்பார். அரசியலுக்கு வர மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட, நடிகர் கமல், ஒரு கட்சியை துவக்கி, ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்கிறார். பல ஆண்டுகளாக, 'அரசியலுக்கு வருவேன்' எனக் கூறும், நடிகர் ரஜினி இன்னும் வரவில்லையே! அவர் வந்த பின், தி.மு.க., கூட்டணிக்கு பின்னடைவா அல்லது அவருக்கே பின்னடைவா என்பதை பார்ப்போம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • LAX - Trichy,இந்தியா

    'ஆழம் பார்த்து காலை விடு' என்பார்களே.. அதுபோல, தானே (ரசினி) எதிர்பாராத விதமாக திடீரென களத்தில் இறங்கியுள்ள கமலின் காலை வைத்து ஆழத்தை அறிய முற்பட்டுக் கொண்டிருக்கிறார் ரசினி.. அதனால், தலைமைப் பாடகர் வரும்வரை பக்கவாத்தியங்களை இசைக்க விட்டுக்கொண்டே நேரத்தைக் கடத்தும் இசைக்கலைஞர்கள் போல நாட்கள்/வாரங்கள்/மாதங்களைக் கடத்திக்கொண்டிருக்கிறார் ரசினி.. அதற்குள் ஏதாவது தேர்தல் வந்துவிடாதா..? கமல் தேர்தல் களம் கண்டு, தனக்கு சிக்னல் கொடுக்க மாட்டாரா என்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.. அதனால்தான் வரிசையாக வரும் படங்களை எல்லாம் ஒப்புக்கொண்டு, கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement