Advertisement

தயார் நிலையில் கட்சிகள்

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், 11ம் தேதி வெளியாகும். ஆனால், 'டிவி'க்களில் வெளியான கருத்து கணிப்புகள், பா.ஜ.,விற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன் குழப்பத்தையும் உண்டாக்கியுள்ளன.சில கணிப்புகள், 'சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில், பா.ஜ., மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது' என, சொல்கின்றன. சில கணிப்புகள், 'ஐந்து மாநிலங்களில் ஒன்றில் கூட, பா.ஜ., வெற்றி பெறாது' என, சொல்கின்றன.ஒரு வேளை, பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றால் என்ன செய்யலாம் என, பா.ஜ., மேலிடம், திட்டங்களை தயார் செய்து உள்ளதாம். பெரும்பான்மை கிடைக்காவிட்டால், சுயேச்சையாக வெற்றி பெறும், எம்.எல்.ஏ.,க்களை எப்படி வளைக்கலாம்; அந்த சுயேச்சைகள் யார், என, பா.ஜ., கணக்கெடுத்துள்ளதாம்.எந்த சூழ்நிலையையும் சந்திக்க, காங்கிரசும் தயாராக உள்ளது. இப்படிப்பட்ட விஷயங்களில் நிபுணரான அகமது படேல், களத்தில் இறங்கியுள்ளார். இனிமேல் எல்லாம் பணம் மட்டுமே பேசும்.இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத், ஒரு பேட்டியில், 'ராஜஸ்தானில், பா.ஜ., வெற்றி பெறுவது கஷ்டம்' என, மறைமுகமாக சொல்லியிருந்தார். இதனால் கட்சியில் பிரச்னை. 'நான் அப்படி சொல்லவில்லை; சில பிரச்னைகள் இருந்தன; ஆனால், முதல்வர் வசுந்தரா அவற்றை சமாளித்துவிட்டார்' என, பின்னர் சொல்லி சமாளித்தார், ராஜ்நாத்சிங். நிதி அமைச்சர், அருண் ஜெட்லியோ, 'இந்த கருத்து கணிப்புகள் எப்போதும் உண்மை சொல்வதில்லை' என, ஒரு போடு போட்டார். 'எது எப்படியோ, ஐந்தில் ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றால் போதும்; 2019ல் நாங்கள் ஆட்சியைப் பிடிப்பது உறுதி' என்கின்றனர் காங்கிரசார்.

காலண்டரால் பிரச்னை!புத்தாண்டு பிறந்த உடன், மத்திய அரசு அலுவலகங்களுக்கு புதிய காலண்டரை, மத்திய அரசு வழங்கும். இதில் அரசு விடுமுறை மற்றும் இதர விஷயங்களும் இருக்கும். இந்த காலண்டரில் அரசின் திட்டங்களை விளக்கும் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெறும்.கடந்த நான்கு ஆண்டுகளாக, மோடி அரசு வெளியிட்ட அரசு காலண்டரில், 12 மாத நாட்காட்டியில் ஒவ்வொரு பக்கத்திலும், மோடியின் படம் தான்.மாணவர்களோடு மோடி, ராணுவ வீரர்களோடு மோடி என, பக்கத்துக்கு பக்கம் மோடி தான்.புதிதாக, 2019ம் ஆண்டு காலண்டரும் தயாராகி விட்டது. இதிலும் வழக்கம் போல பிரதமரின் படம் தான், 12 பக்கங்களிலும் உள்ளதாம்.'அடுத்த வருடம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதற்கு மோடி படம்... யார் வெற்றி பெறுவார்கள் என தெரியாத நிலையில், மோடி படம் காலண்டரில் இருக்கக் கூடாது' என, எதிர்க்கட்சிகள், ஜனாதிபதியிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாம்.ஆனால், இந்த புகார் குழுவில், காங்கிரஸ் இடம் பெறவில்லை என்பது, ஆச்சர்யம்.

காங்.,கிற்கு உதவிய சி.பி.ஐ.,ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், இடைத்தரகன் கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ., விசாரணையில் இருக்கிறான். இந்திய அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது; இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்கிற விபரங்கள், இந்த இடைத்தரகனுக்கு தெரியுமாம்.'இந்த ஊழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட, பலர் சம்பந்தப்பட்டுள்ளனர்' என, பா.ஜ., சொல்லி வந்தது. இந்நிலையில், தற்போது, 'மைக்கேல் கைதால் விரைவில் உண்மை வெளி வரும்' என, பிரதமர் மோடி சொல்கிறார். அத்துடன், 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், இந்த ஹெலிகாப்டர் விவகாரத்தை பெரிதாக்க, பா.ஜ., முடிவு செய்து உள்ளதாம். காரணம் கைது செய்யப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தலைவர்கள் பெயர்களைச் சொல்வான் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை வைத்து காங்கிரசை ஒழித்துக் கட்ட முடிவெடுத்துள்ளது, பா.ஜ., 'எங்களுக்கும், இந்த ஊழலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, காங்கிரஸ் சொன்னாலும், அதன் தலைவர்களுக்கு உள்ளுக்குள் அதிர்ச்சி தான். இதற்கிடையே, இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா விடுப்பில் அனுப்பப்பட்ட அந்த விவகாரம், தற்போது, உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.'இரவோடு இரவாக அலோக் வர்மாவை விடுப்பில் அனுப்பியதற்கு, அவர் ஹெலிகாப்டர் விசாரணை தொடர்பான தகவல்களை காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரிவித்தது தான் காரணம்' என்கின்றனர், மூத்த அரசு அதிகாரிகள். 'இப்போது, வர்மா விடுப்பில் அனுப்பப்பட்டதால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், காங்., திண்டாடுகிறது' என, பா.ஜ.,வினர் சொல்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement