Advertisement

தமிழர்களின் மானத்தை பறக்க விடாதீர்!

தமிழர்களின் மானத்தை பறக்க விடாதீர்!

ஆர்.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக விவசாயிகள் படும் தொல்லைகள், கணக்கிலடங்காதது என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கு, அரசு மட்டுமல்ல... தமிழக விவசாயிகளும் தான் காரணம்!விவசாய கூலித் தொழிலாளர்களை, வயலில் இறக்கி வேலை செய்ய விட்டு, வரப்பில், மர நிழலிலோ அல்லது குடை நிழலிலோ ரேடியோ கேட்டு, பத்திரிகைகளை படித்து, மேற்பார்வை செய்யும் குணம் கொண்டோர், விவசாயப் பண்ணையார்கள்! வயலில் வேலை இல்லாத நாட்களில் திண்ணையில் சீட்டாட்டம் நடத்துவர்!
மொத்தத்தில், பெரும்பாலான பண்ணை ஆட்கள் சோம்பேறிகளாக உள்ளனர். முன்பெல்லாம் அதிக நிலம் வைத்திருக்கும் பண்ணையார்கள் தான், 'குடி மராமத்து' என்ற பெயரில், பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை, ஆண்டு தோறும் செப்பனிடுவர்; மற்ற விவசாயிகளையும் ஒருங்கிணைப்பர்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அவர்கள் யாரும், எதற்காகவும், அரசை அண்டி நின்றதில்லை. அரசு தான், அவர்களை நம்பியிருந்தது. இன்று, எதற்கெடுத்தாலும் அரசை நம்பியே இருக்கின்றனர், விவசாயிகள்!டில்லியில், தமிழக விவசாயிகளின் உரிமைகளை கேட்கும் போராட்டம் என்ற பெயரால், அய்யாக்கண்ணு, 'அன்ட் கோ' வினர் நடத்திய செயல்கள் அவமானகரமானவை. சில நாட்களுக்கு முன், அரை நிர்வாண ஓட்டம் ஓடி, தமிழர்களின் மானத்தை, உலக அளவில் பறக்க விட்டனர். மீண்டும் அதே அசிங்கத்தை அரங்கேற்றி வருகின்றனர்.பல மாநில விவசாயிகளும் கூடிய பேரணியில், பண்பாட்டுக்கும், நாகரிகத்திற்கும் உறைவிடமான, தமிழகத்தைச் சேர்ந்த அவர்கள் அடித்த கொட்டம், போராட்டக்காரர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது!
போராட்டத்தை ஆதரித்து, பல மாதர் சங்க பெண்களும், கல்லுாரி மாணவியரும், பிற பெண்களும் பங்கேற்றனர். அதில், அரை மற்றும் முழு நிர்வாண போராட்டம் என்பது, கேடு கெட்ட செயல் என்பதை, அய்யாக்கண்ணு அன்ட் கோ வினர் அறியாதது வருத்தமளிக்கிறது. இதன் மூலம் போராட்டத்தின் போக்கே மாறுவதற்கான வாய்ப்பும் உண்டு!போராட்டக்காரர்களே... உங்கள் நடவடிக்கைகள் அனைத்தையும், தனியார், 'டிவி'க்கள் மூலம் உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, உலகத்தாரை முகம் சுளிக்க வைக்காதீர்கள்! தமிழர்களின் மானத்தை காற்றில் பறக்க விடாதீர்!


கலிகாலத்தில்எல்லாம்தலைகீழாகிடுச்சு!

என்.தொல்காப்பியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தற்போது, மிரட்டல் விடும் போக்கு, தமிழக அரசியல்வாதிகளிடம் அதிகரித்து வருகிறது.'எங்கள் முன் அனுமதி இல்லாமல், மாநிலத்தில், சி.பி.ஐ., நுழைய முடியாது' என்கிறார், தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்வருமான, சந்திரபாபு!'மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக நடந்தால், பிரதமர், மோடியை தமிழகத்தில் நுழைய அனுமதிக்க மாட்டோம்' என்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.'பேரறிவாளன் உட்பட, ஏழு பேர் விடுதலை விஷயத்தில் விரைவில் அனுமதி அளிக்காவிட்டால், கவர்னர் பதவியே தமிழகத்தில் இல்லாமல் செய்து விடுவோம்' என்கின்றனர், விடுதலைப்புலிகளின் விசுவாசிகள்.இந்த போக்கைப் பார்த்தால், இந்திய ஜனாதிபதியே, தமிழகத்திற்கு வர நினைத்தால், ஸ்டாலின், வைகோ, வீரமணி, திருமாவளவன் போன்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டும் போல் தெரிகிறது.அடுத்து, நீதிபதிகள், இப்படி தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என, அரசியல் கட்சி தலைவர்கள் மிரட்டல் விடுத்தாலும் ஆச்சரியமில்லை. 'தொடர் போராட்டங்களை நடத்தி, அரசே நிலைகுலைய செய்வோம்' என்கின்றன, அரசு ஊழியர் சங்கங்கள்.'கஜா புயலால் பாதிக்கப்பட்டோரின் நலன் கருதி, தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி உள்ளோம்' எனக் கூறி, தற்காலிகமாக அடங்கியுள்ளனர்.இன்று, பெற்றோர் சொல்வதை கேட்க மறுக்கின்றனர், குழந்தைகள். கணவரது வருவாய்க்குள் குடும்பம் நடத்த, மனைவி மறுக்கிறார். ஆசிரியருக்கே பாடம் கற்பிக்க மாணவர்கள் நினைக்கின்றனர். மொத்தத்தில், எல்லாமே தலைகீழாக நடக்க ஆரம்பித்து விட்டன.'கலிகாலம் முத்திப் போச்சு' என, நினைத்து ஆறுதல் அடைய வேண்டியது தான் போலும்!


இலவசங்களுக்கு வையுங்கள்


முற்றுப்புள்ளி!ஏ.எம்.ஏ.ராஜேந்திரன், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இலவச திட்டங்களுக்காக, தமிழக அரசை, நீதிமன்றங்கள் மிக கடுமையாக சாடி வருகின்றன. கலெக்டர், எஸ்.பி.,க்களை, நீதிமன்றங்களுக்கு வரவழைத்து அறிவுரை கூறுவதும், தற்போது அதிகரித்துள்ளது.ரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய, இலவச அரிசி திட்டத்தை மிக கடுமையான முறையில் விமர்சனம் செய்துள்ளது, சென்னை உயர் நீதிமன்றம். இந்த கோட்பாட்டை உருவாக்கிய, தி.மு.க., நீதிமன்ற கண்டிப்பை கண்டும்காணாமல் உள்ளது.ஓட்டுக்காக, இலவசங்களை அறிமுகப்படுத்திய பெருமை, தி.மு.க.,வையே சாரும். ஓட்டுக்காக, இலவச திட்டத்தை அறிமுகப்படுத்திய கட்சியே, தி.மு.க., தான்! 1957ல், தமிழக சட்டசபை தேர்தலில், முதன் முதலில் களம் இறங்கிய, தி.மு.க., தம் தேர்தல் அறிக்கையில், 'நிலம் இல்லாத ஏழைகளுக்கு, ஐந்து ஏக்கர் நிலம் தரப்படும். கடல் பாசியில் அல்வா கிண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னிய செலாவனி பணம் திரட்டப்படும்' என அறிவித்தது.அந்த தேர்தலில், 15 தொகுதியில், தி.மு.க., வினர் வெற்றி பெற்றனர். அதில், குளித்தலையில், வெற்றி பெற்ற, கருணாநிதி யும் அடங்குவார். பின், அண்ணாதுரை, 1967ல், '1 ரூபாய்க்கு, மூன்று படி அரிசி' என, வாக்குறுதி அளித்தார்.அன்று, திராவிட ஆட்சியில் துவங்கிய இலவசம், இன்று, மானிய விலையில், மகளிருக்கான, 'ஸ்கூட்டி' வரை போய் நிற்கிறது. தை பொங்கலுக்கு, இலவச கரும்புக்காக, தமிழன் காத்து கிடக்கிறான்.'வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச அரிசி தரலாம்' என்ற யோசனையை கூறி உள்ளது, சென்னை உயர்நீதிமன்றம். வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்போர் குறித்த கணக்கு எடுத்து, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நோக்கம் சரியானது. ஆனால், தமிழக அரசு இந்த தீர்ப்பை எப்படி எடுத்து கொள்ள போகிறது என, தெரியவில்லை. இனி வரக்கூடிய எந்த தமிழக அரசும், இலவச திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்!


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement