Advertisement

மனித உரிமையை காப்போம்

எ ந்த நிலையிலும் எந்த இடத்திலும் மனித உரிமைகள் மீறக்கூடாது என்ற நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் டிச., 10 நாள் சர்வ தேச மனித உரிமை தினமாக கடைபிடிக்கும்படி 1948 டிச., 10ல் அறிவித்தது. இந்திய பார்லிமென்ட் 1993 ஆண்டில் இயற்றிய மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 'மனித உரிமைகள் எனப்படுவது தனிமனிதரின் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம், மாண்பு தொடர்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் பாதுகாப்பளிக்கப்பட்டதும், பன்னாட்டு உடன்படிக்கைகளால் உறுதி செய்யப்பட்டதும் இந்திய நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்தபடக்கூடிய உரிமைகளாகும்,' என விளக்கியது.இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எவர் ஒருவரையும் ஆண், பெண் என்றோ, ஜாதி, மதம், இனத்தின் காரணத்தாலோ பாகுபாடு செய்ய கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், சமமான வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமையாகவுள்ளது.அதே நேரத்தில் சமூகபொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்கி சமத்துவத்தை ஏற்படுத்த பட்டியல் இனம், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதையும் இவ்வுரிமை உறுதி செய்கிறது. ஜாதியின் பெயரால் இழிவாக நடத்துவதை இந்திய அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது. ஆலயங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வாழிடங்களில் எந்தவித தீண்டாமையையோ அல்லது பாகுபாட்டையோ ஒருவர் பின்பற்றினால் கடுமையான தண்டனை அளித்து ஒடுக்கப்பட்டவர்களின் மனி உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளது.வாழ்வுரிமைவாழ்வுரிமை என்பது வெறும் உயிர்வாழும் உரிமையை மட்டும் குறிக்காமல் மனித மாண்புகளுடன் அடிப்படை வசதிகளான சத்துணவு, உடை, உறைவிடம், போக்குவரத்து, கல்வி, மருத்துவசதி மற்றும் மாற்றுக் கருத்து வெளிப்படுத்துதல் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். சமூக பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கும், தேவையான உயர் மருத்துவ சிகிச்சை தர வேண்டியது அரசின் கடமையாகும்.படுக்கைகள் காலியாக இல்லை என்ற காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத நோயாளிகளுக்கு அரசு நஷ்டஈடு தர வேண்டும் என்றும், நவீன மருத்துவ வளர்ச்சிக்கேற்ப மாவட்ட தாலுகா அளவிலுள்ள மருத்துவமனைகள் நவீன உபகரணங்களுடன் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சிறையில் இருப்பவர்களும் மனிதர்களே என்றும், அவர்களை திருத்தவும் நல்ல மனிதர்களாக மாற்றவும் சிறை நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் சிறையில் இருப்பதனால் மட்டுமே அவர்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்கப்பட்டதாக கருத முடியாது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.ஒரு கருத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ பேசுவதும், எழுதுவதும் அடிப்படை மனித உரிமையாகும். பெரும்பான்மையானவர்களுக்கு அக்கருத்தில் உடன்பாடு இல்லை என்றாலும் கூட தன் கருத்தை வெளியிடுவது ஒருவரின் மனித உரிமையாகும். நாடு முழுவதும், விரும்பும் இடத்திற்கு செல்வதும், அங்கே தான் விரும்புகின்ற தொழிலை சட்டப்படி செய்தல், சங்கம் அமைத்து உரிமைகளை பாதுகாக்க இணைந்து செயல்படுவது போன்ற பல்வேறு சுதந்திரம் தொடர்பான உரிமைகள் மனித உரிமைகளாக மக்களை பாதுகாக்கிறது.அரசு தன் குடிமக்களின் மாண்புரிமையை மனித உரிமையாககருதி பாதுகாக்க வேண்டும். சிறை வாசியாக இருந்தால் கூட அவர் கண்ணியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த கூடாது. மாண்பை காப்பாற்றும் வகையில் சட்டங்களை உருவாக்கி அதை நடைமுறைபடுத்துவது அரசின் அடிப்படை கடமையாகும். மாண்பை குலைக்கும் வகையில் செயல்படும் அரசு அலுவலருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கைகளை எவரும் மேற்கொள்ள முடியும்.இழப்பீடு பெறும் உரிமைமனித உரிமைகள் என்பதன் வரையறை ஒவ்வொரு நாளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. மனித உரிமைகளை பாதுகாக்கும் கடமையிலிருந்து அரசு தவறும் போது உரிமைகளை இழந்தவர் உரிய நீதிமன்றங்களினாலும், மனித உரிமை ஆணையங்களின் மூலமும் தவறிழைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன் மட்டுமின்றி பண இழப்பீடு பெறவும் உரிமையுடையவராவார். தற்போது மத்திய மாநில அரசுகள் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு திட்டத்தை உருவாக்கி மாவட்ட சட்டபணிகள்ஆணையத்தின் மூலம் செயல்படுத்தி வருகின்றன. உயிரிழப்பு, பாலியல் வன்முறை, கட்டாய உழைப்பு, கொத்தடிமை, குழந்தை தொழிலாளர், ஆசிட் வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் அந்தந்த மாவட்டநீதிமன்றங்களில் செயல்படும் சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் முறையிட்டு மனு கொடுத்து மூன்று லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெறலாம்.பொது நல வழக்குபாதிக்கப்பட்டவர்கள் தான் நீதிமன்றங்களை அணுக வேண்டியதில்லை. பொது நலனில் அக்கறை கொண்ட குடிமகன் எவரும் நீதி வேண்டி உயர்நீதிமன்றத்தையோ, உச்சநீதிமன்றத்தையோ நேரடியாக அணுகி பொது நலவழக்கு தாக்கல் செய்யலாம். சுற்றுச்சூழல், வனவிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, வன பாதுகாப்பு, அரசு கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் குறித்து பொது நல வழக்குகள் தொடரலாம். அதற்கு முன் அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்து, நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வழக்கு தொடரலாம். வழக்கு தொடர வசதியில்லாத போதும் இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வழக்கு தொடர முடியும். இலவச சட்ட உதவி பெறுவது சலுகை அல்ல. அடிப்படை உரிமையாகும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டிலுள்ள எந்தவொரு குடிமகனும், எதிர்தரப்பினர் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களால் வலிமையாக இருந்தால் தனக்கு நீதி கிடைக்காமல் மறுக்கப்பட்டு விட்டது என்ற மனக்குறைக்கு ஆளாககூடாது என்ற காரணத்தால் தான் இலவச சட்ட உதவி பெறும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.மனித உரிமை ஆணையங்கள்மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993ன் படி மாநில, தேசிய மனித உரிமை ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியின் தலைமையில் அவை செயல்படுகின்றன. தேசிய ஆணையம் 'மானவ் அதிகர்,பவன் பிளாக் சி, ஜி.பி.ஓ., காம்பளக்ஸ், ஐ.என்.ஏ., புதுடில்லி--110 033 முகவரியிலும், மாநில ஆணையம், 143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை--600 028' முகவரியிலும் செயல்படுகின்றன.இந்தியாவில் மனித உரிமையை பாதுகாக்க சட்டங்களும், நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும் இருந்தாலும், குடிமக்களாகிய நாம் அவ்வுரிமைகளை பாதுகாக்க அவற்றை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இன்று தவறு செய்பவர்களும், பொருளாதார குற்றவாளிகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களும் தங்களை பாதுகாக்க நீதிமன்றங்களை அணுகும் நிலையுள்ளது. பாதிக்கப்படுவோர் நீதிக்காக நீதிமன்றங்களை அணுகுவது குறைந்தளவில் உள்ளது. இந்நிலை மாற வேண்டும். மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்கள்சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளை நம்பிக்கையுடன் அணுகி தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கு உரிய நீதியை பெற வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.--முனைவர் ஆர்.அழகுமணிஉயர்நீதிமன்ற வழக்கறிஞர்மதுரை98421 77806

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement