Advertisement

சினிமா கதையா, சீரியஸ் பிரச்னையா? கள்ள ஓட்டு தடுக்குமா 49பி?

சர்கார் படத்தில் கூறப்படும், சட்டப்பிரிவு, '49பி' என்பது, சினிமா கதையா அல்லது சீரியஸ் பிரச்னையா என்ற, விவாதம் எழுந்துள்ளது. 'இந்த சட்டப்பிரிவு, ஓட்டுரிமையை நிலைநாட்டுவது உண்மை. ஆனால், கள்ள ஓட்டை தடுக்காது; தவிர்க்காது' என்கின்றனர், தேர்தல் அதிகாரிகள். அதேநேரத்தில், இந்த பிரிவை, ஏராளமானோர் பயன்படுத்த துவங்கினால், ஓட்டு எண்ணிக்கையில் சச்சரவு உருவாகி, திடீர் குழப்பம் ஏற்படும் என்பதால், கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.


நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள, சர்கார் திரைப்படம், தமிழக அரசியல் வட்டாரத்தில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தின், கதாநாயகனான விஜய், தேர்தலில் ஓட்டு போடுவதற்காக, அமெரிக்காவில் இருந்து, இந்தியா வருகிறார்.

தடுக்காது:அவர் ஓட்டை, ஒருவர் கள்ள ஓட்டாக போட்டு விடுகிறார். நீதிமன்றம் சென்று, தேர்தலை நிறுத்துகிறார், விஜய். பின், தேர்தலில் போட்டியிட்டு, தனக்கு பிடித்தவர்கள் வாயிலாக, ஆட்சி அமைக்கிறார்.படத்தில், நம் ஓட்டை, யாரேனும் கள்ள ஓட்டாக போட்டிருந்தாலும், '49பி' பிரிவின் கீழ், நாம் ஓட்டளிக்க முடியும் என்பதை, எடுத்துக் கூறியுள்ளனர்.படத்தில் கூறியுள்ளது போல, நம் ஓட்டுரிமையை நிலைநாட்ட, '49பி' பிரிவு இருப்பது உண்மை தான். ஆனால், அந்தப் பிரிவு, கள்ள ஓட்டை தடுக்காது. அந்த பிரிவை பயன்படுத்தி போடும் ஓட்டால், எந்த பயனும் கிடையாது என்பதே உண்மை. வாக்காளர், ஓட்டளிக்க செல்லும் போது, அவரது ஓட்டை, ஏற்கனவே பதிவு செய்திருப்பது தெரிய வந்தால், அவர் ஓட்டுச்சாவடி அலுவலரிடம், சட்டப்பிரிவு, '49பி'யின் கீழ் ஓட்டளிக்க விரும்புவதாக கூறலாம்.

'49 என்':ஓட்டுச்சாவடி அலுவலர், அவரது அடையாளம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து விட்டு, அவருக்கு ஓட்டுச்சீட்டு கொடுத்து, ஓட்டுப் போட அனுமதிக்கலாம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்.
இதுபோன்ற ஓட்டுக்களை, தனி கணக்கு வைத்து, தனி உறையில், 'சீல்' வைத்து, ஒப்படைக்க வேண்டும். இந்த வகை ஓட்டுகள், 'பதிவான ஓட்டு' என, அழைக்கப்படுகின்றன.


அதேபோல, மாற்றுத் திறனாளி வாக்காளர், தன் சார்பாக ஓட்டளிக்க, ஒருவரை நியமிக்கலாம். அவரிடம் கையெழுத்து பெற்று, ஓட்டு அளிக்க அனுமதிக்கலாம். ஓட்டு போடும் நபரின் நடுவிரலில், மை வைக்கப்படும். இதை, சட்டப்பிரிவு, '49 என்' அனுமதிக்கிறது.

குழப்பம்:சட்டப்பிரிவு, '49பி'யின் கீழ் ஒருவர், தன் மனதிருப்திக்காக ஓட்டளிக்கலாம். அவரது ஓட்டு, கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. அவருக்கு பதிலாக, மற்றொருவர் போட்ட ஓட்டு, கள்ள ஓட்டாகவும் கருதப்படாது; ஓட்டு எண்ணிக்கையில் சேர்ந்து விடும். அதேநேரத்தில்,
ஏராளமானோர், சட்டப்பிரிவு, '49பி'ன் கீழ், ஓட்டு பதிவு செய்தால், கள்ள ஓட்டுப் பதிவுக்கு எதிராக, திடீர் சிக்கல் எழலாம். இது, ஓட்டு எண்ணிக்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், அரசியல் கட்சிகளிடம், கலக்கம் ஏற்பட்டுள்ளது.


இது குறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: சட்டப்பிரிவு, '49பி' என்பது, 1961ல் கொண்டு வரப்பட்டது. தன் பெயரில், ஏற்கனவே யாரேனும் ஓட்டு பதிவு செய்திருந்தால், இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் கூறி, தன் ஓட்டை பதிவு செய்யலாம். ஆனால், இந்த ஓட்டு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. இது, கள்ள ஓட்டை ஒழிக்கவும் உதவாது.

போலி வாக்காளர்கள்:தற்போது, அனைவருக்கும், 'ஆதார்' அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைத்தால், கள்ள ஓட்டை முற்றிலும் ஒழித்துவிட முடியும். இதற்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கியது. ஆனால், நீதிமன்ற தடை காரணமாக, அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைத்து விட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் இடம்பெற இயலாது. கள்ள ஓட்டு, அறவே இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (54)

 • Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ

  கூடிய சீக்கிரத்தில் கள்ளஉறவை போல கள்ள ஓட்டும் குற்றம் இல்லை என்று 'நீதி அரசர்கள்' சொல்லக்கேட்கலாம்..

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கமிஷனர், சிட்டி போலீஸ், மகாத்மா என்றெல்லாம் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் அரசியலும் ஓபனாக காட்டப்படும். படத்தை படமாக பார்ப்பவர்கள் கேரள ரசிகர்கள். இப்போது வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் காயங்குளம் கொச்சுன்னி என்ற படத்தை பாருங்கள். எத்தனை அப்பட்டமான சரித்திர காட்சிகள் என்று தெரியும். அதிர்ந்து விடுவீர்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஒரு சாதாரண மசாலா படத்துக்கு இந்த அளவுக்கு உணர்ச்சி கொந்தளிப்பு ஏன் என்று தெரியவில்லை.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //தனக்கு பிடித்தவர்கள் வாயிலாக, ஆட்சி அமைக்கிறார்.// இது தவறு. படத்தில் விஜய் ஆட்சி அமைக்கவில்லை. மீண்டும் படத்தை கவனமாக பார்க்கவும்.

 • Gopi - Chennai,இந்தியா

  //ற்போது, அனைவருக்கும், 'ஆதார்' அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைத்தால், கள்ள ஓட்டை முற்றிலும் ஒழித்துவிட முடியும். இதற்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கியது. ஆனால், நீதிமன்ற தடை காரணமாக, அப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைத்து விட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் இடம்பெற இயலாது. கள்ள ஓட்டு, அறவே இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.// இன்டர்நெட் காரன் குழியிலிருந்து ஓடினேன், மாநகராட்சிக்காரன் வெட்டிய குழிலிருந்து ஓடினேன், கடைசியாக நீதிமன்றத்துக்கும் ஓடினேன். பொறுப்பில்லாமல் நீதி உரைத்து ஆக்கபூர்வமான யாரையும் வாழவிடவில்லை . இது நம் இன்றைய தேசத்தின் நிலை . நீதி அரசர்களும் நீதிமன்றமும் பெரும்பான்மையான சமூக நன்மையை நோக்கி நடுநிலை தீர்ப்புகளை வழங்கவேண்டும்

Advertisement