Advertisement

கலாசார கருவூலம் அழிந்தது எப்படி?

திரும்பத் திரும்ப தமிழக கோவில் சிலைகள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்படும் செயல், கடைசியாக சென்னையில், மக்கள் அதிகம் அறிந்த போயஸ் கார்டன் பகுதியை சுட்டிக்காட்டுகிறது. இதில், தமிழகத்தில் இன்று, சி.ஐ.டி., பிரிவின் சார்பில் விசாரிக்கும் உயர் அதிகாரி பொன். மாணிக்கவேல், போயஸ் கார்டனில் உள்ள பெண் தொழிலதிபர் கிரண்ராவ் வீட்டு, தோட்டத்தில் தோண்டி சிலைகளை எடுத்த செயல், அதிர்ச்சி தருவதாகும்.
செப்., 26ம் தேதி, ரன்வீர்ஷா வீட்டில், 86 சிலைகள் மீட்கப்பட்டன என்றால், அதற்கடுத்து மேல்மருவத்துார், ஸ்ரீபெரும்புதுார் என, சென்னையைச் சுற்றி சிலைகள் பதுக்கும் இடமாக மாறியிருக்கிறது. பெண் தொழிலதிபர் கிரண்ராவ் வெளிநாட்டிற்கு தப்பிவிடாமல் இருக்க, 'லுக் அவுட் நோட்டீஸ்' தரப்பட்டிருப்பது வரவேற்க வேண்டியது ஆகும்.
ஆனால், பழமையான சிலைகள் விற்பனை செய்த தீனதயாளு கைது நடவடிக்கைக்குப் பின், தினமும் பிடிபடும் சிலைகள் பட்டியல் நீளுகின்றன. இவர்களுடைய தொழிலை, ஏன் இத்தனை ஆண்டுகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதை ஆராய வேண்டிய கட்டாயம் எழுகிறது.
சோழர் பெருமை பேசும் நாம், அந்த அரசி செம்பியன் மாதேவி சிலையை பிரிட்டிஷ் ஆட்சி இருந்த போதே கடத்திய செயல் மனதை
உறுத்துகிறது.
நமது தொல்லியல் துறை பழம் பெரும் இடங்களை வரலாற்று அடிப்படையில் பாதுகாத்தாலும், தமிழகத்தின் கோவில்கள், அதில் உள்ள கற்சிற்பங்கள், துாண்கள், மற்றும் ஐம்பொன் படிவங்கள், மரகதப் படிவங்கள், இவை மற்ற மாநிலங்களில் அதிகம் காணப்படாத ஒன்றாகும்.
ஆயிரம் ஆண்டுகள், அன்னியர் ஆட்சியில் நாம் இருந்த போதும், கோவில்கள் மேலும் மேலும் கலைநயத்துடன் கூடிய கற்கட்டடங்களாக
உருவெடுத்தன.
ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாலிக்காபூர் படையெடுப்பில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டப்பட்டதை, விஜயநகர மன்னர் குமார கம்பண்ணன், அதிரடி நடவடிக்கையால் திறந்தார். ஆனால், இப்போது தொழிலதிபர் கிரண்ராவ், தான் வாங்கி வைத்திருக்கும் சிலைகளை தொல்லியல் துறையின் அனுமதியுடன் வாங்கியிருப்பதாக, தன் வக்கீல் மூலம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், 1993ம் ஆண்டில் இருந்து சேகரிக்கப்பட்டதாக கூறப்படும் சிலைகளுக்கு, காலம் தாழ்த்தி அனுமதி பெற்றது ஏன்? இச்சிலைகள் எக்கோவிலில் இருந்து களவாடப்பட்டன; அல்லது எடுத்து வர அனுமதித்தது யார்? அல்லது இவைகளுக்கு தொல்லியல் துறை அனுமதி அளித்தது என்றால், அந்த உயர் அதிகாரிக்கு இவை,
'கலாசார பொக்கிஷங்கள்' என அறிந்தே அனுமதித்தாரா? அந்த சமயத்தில் நமது அறநிலையத்துறை என்ன முடிவு எடுத்தது என்ற கேள்விகள் எழுகின்றன.
கிட்டத்தட்ட, 300 சிலைகள் இதுவரை பிடிபட்டிருக்கின்றன. இனி, இவை, கும்பகோணத்தில் இதற்கான வழக்கு நடப்பதால், அங்குள்ள பாதுகாப்பான இடத்தில் சேமிக்கப்படும். அங்கு சிலை சம்பந்தமாக பிடிபட்ட, பத்துக்கும் மேற்பட்டவர்களை கண்டிப்பாக வரவழைத்து விசாரிக்க
வேண்டும்.
'கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்' என்ற நமது மூதாதையர் வாக்கு, 'இன்று கொள்ளை போகாத கோவில் சிலைகள் கிடையாது' என்ற கதிக்கு மாறி விட்டது.
ஆப்கனில் புத்த கலையை அழித்தது போல, எகிப்து, ஈராக் கலாசார தடயங்கள் அழிந்தது போல, இச்சிலைகள் திருடும் கும்பல், தங்கள் பணபலத்தால், செல்வாக்கால், இதை சர்வசாதாரணமாக அரங்கேற்றியிருக்கிறது.
இது, கோவில்களை அறநிலையத்துறை பராமரித்த விதம், 60 ஆண்டுகளாக சீராக இல்லை என்பதைக் காட்டுகிறது.
மேலும் தற்போது கூட, கோவில்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, அங்கு பல்வேறு வசதி களின்மையை சுட்டிக்காட்டும் போது, அதில் கழிப்பறை இல்லை என்று கூறியிருப்பது வியப்பானது. கோவில்களுக்கு செல்வது அதிக துாய்மை நடைமுறை.
அக்குறிப்பிட்ட நேரத்தில் கழிப்பறை எதற்கு? அந்த தேவை உள்ளவர்களுக்கு கோபுர தரிசனம் மட்டுமே போதும் என்பது பழமையான
கருத்தாகும்.
மேலும், சிலைகள் வைத்திருக்கும் எவரேனும் தகவல் தந்து ஒப்படைத்தால், அவர்கள் மீது வழக்கு பாயாது என்பது நல்ல தகவல். இந்த வழக்குகள் ஒரு பக்கம் இருக்க, கண்டுபிடிக்கப்பட்ட இச்சிலைகள், கல்துாண்கள் ஆகியவற்றின் காலத்தை கண்டறிந்து, சிதிலம் அடையாமல் இருப்பவைகளை தமிழகத்தின் மிகப் பெரிய கோவில்களில் உள்ள மண்டபங்களில் வைத்து, அவற்றின் வரலாற்றையும் பொறித்து, சுற்றுலா மையங்களாக, கலாசார கருவூலமாக மாற்ற, தமிழக அரசு மனது வைக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement