Advertisement

'தித்லி' அதிதீவிரம்; எங்கு பாதிப்பு!

சென்னை : வங்கக்கடலில், சென்னைக்கு அருகில் உருவான, 'தித்லி' புயல், ஆந்திரா ஒடிசா இடையே கரையை கடந்தது. அதன் பாய்ச்சலில் இருந்து, தமிழகம் தப்பியது. அதே நேரத்தில், ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளை நோக்கி, அப்புயல் ஆவேச பயணம் மேற்கொண்டதால், அம்மாநிலங்களில் பலத்த மழை பெய்தது.


தென் மேற்கு பருவ மழை, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, பரவலாக கன மழையை கொட்டியுள்ளது. மழை ஓய்ந்த பின், வானிலை ஆய்வாளர்களுக்கு சவால் விடும் வகையில், மீண்டும், தென் மேற்கு பருவக் காற்று வலுப்பெற்றுள்ளது. இதனால், கன்னியாகுமரிக்கு மேற்கில், அரபிக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, படிப்படியாக வலுப்பெற்று, 'லுாபன்' என்ற, அதிதீவிர புயலாகியுள்ளது.


மூன்று நாட்களாக, அரபிக்கடலில் சுழன்று, நேற்று மாலையில், ஓமனில் இருந்து, 400 கி.மீ.,
துாரத்தில் மையம் கொண்டிருந்தது. வரும், 14ம் தேதி, ஓமன் மற்றும் ஏமன் இடையே, கரையை கடக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், வங்கக்கடலில், சென்னைக்கு தென் கிழக்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தித்லி என்ற பெயருடன், அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இது, சென்னை அருகே உருவானாலும், சென்னையின் பக்கம் திரும்பாமல், வட கிழக்கு மாநிலங்களை நோக்கி நகர்ந்ததால், தமிழகம் தப்பியது.


நேற்று மாலை, ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கு
இடையே, 200 கி.மீ., துாரத்தில் புயல் மையம் கொண்டிருந்தது. மணிக்கு, 14 கி.மீ., வேகத்தில் நகர்ந்து, இன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் ஆந்திரா ஒடிசா இடையே கரையை கடந்தது.


புயலை தொடர்ந்து
ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், குர்தா, நயாகார் மற்றும் புரி ஆகிய மாவட்டங்களில், கடும் பாதிப்பு ஏற்படும் என, சிவப்பு அபாய குறியீட்டில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில், நாளை வரை, மீன் பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டது.ஒடிசாவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தள அரசு எடுத்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில், வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. பல ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உ.பி., மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள், வேறு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் நிலவரம் என்ன? தமிழகத்தின் சில இடங்களில், மிதமான மழை பெய்து வருகிறது. வரும், 14ம் தேதி முதல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது, பெரிய அளவிலான வானிலை எச்சரிக்கை ஏதும் இல்லை. கடலோரத்தில் இருந்து, தொலைவில் உள்ள மாவட்டங்களில், வெயில் அதிகரிக்கும். கடலோர பகுதிகளில், தித்லி புயல் கரையை கடக்கும் வரை, மழையின் அளவு குறைவாகவே இருக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Kailash - Chennai,இந்தியா

  அங்கே நல்ல அரசாங்கம் இருப்பதால் கடவுள் புயலை அங்கே தள்ளிவிட்டார். ஏற்கனவே தமிழக மக்கள் மத்தியிலும் மாநிலத்திலும் அராஜக ஆட்சியில் மாட்டிக்கொண்டு புயலில் சிக்கிய மீனவர்கள் போல திண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் எதாவது ஒரு பாதிப்பு தான் இருக்கவேண்டும் என்று நினைத்ததால் போன வருடமும் தமிழகம் தப்பியது இந்தவருடமும் தப்பித்துவிடும்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தப்பியது தம்பிரான் புண்ணியம்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஆளும் அதிமுக பெரிய புயல் வந்தும் கூட சென்னையில் நீர் நிலைகளை சீர் செய்யவே இல்லை... அடுத்து புயல் வந்தால் சென்னைக்கு ஆபத்து...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  அப்ப திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் தேர்தலை நடத்தலாம் அல்லவா? இடைத்தேர்தலுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். ஓட்டிற்கு ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆவலாக இருந்தவர்கள் வாயில் எடப்பாடி மண்ணை அள்ளி போட்டுட்டார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement