Advertisement

டீ கடை பெஞ்ச்

சக ஊழியர்களிடமே, 'கட்டிங்' கேட்கும் கறார் பெண் அதிகாரி!


''ஒரு கண்ணுல வெண்ணெய், இன்னொரு கண்ணுல சுண்ணாம்பான்னு பத்த வச்சுட்டாங்க பா...'' என்றபடியே வந்தார் அன்வர்பாய்.


''பத்த வச்ச பரட்டை யாரு வே...'' என, சிரித்தபடியே கேட்டார் அண்ணாச்சி.


''தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, புதுசா நியமிக்கப்பட்ட, மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், சமீபத்துல, சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்... அப்ப, 'மாஜி' தலைவர் இளங்கோவன் ஆதரவாளர்கள் ஆறு பேர், அவர்ட்ட ஒரு மனு குடுத்திருக்காங்க பா... ''மனுவுல, மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துல நடந்த அடிதடி சம்பவத்துல, ஒருதலைபட்சமா, இளங்கோவன் ஆதரவாளர்கள் ஏழு பேரை நீக்கிட்டாங்க...


''திருநாவுக்கரசர் ஆதரவாளர்களும், அந்த சண்டையில சம்பந்தப்பட்டிருக்காங்க... அவங்களை மட்டும் நீக்கலை... அதனால, இளங்கோவன் ஆட்கள், ஏழு பேர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யணும்னு, கோரிக்கை வைச்சிருக்காங்க... ''சஞ்சய் தத், 'விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்'னு உறுதி குடுத்திருக்காராம் பா...'' என்றார் அன்வர்பாய்.


''படிக்குற பயலுகளை பாழாக்குதானுவ வே...'' என, திடீரென நொந்து கொண்டார் பெரியசாமி அண்ணாச்சி.


''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.


''திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு கொசஸ்தலை ஆத்துல ஒருத்தர், போலீஸ், வருவாய் துறை அதிகாரிகள் ஆதரவோடு மணல் அள்ளி கடத்துதாரு... ''இதுக்காகவே, ஆந்திராவுல இருந்து, குறைஞ்ச விலைக்கு திருட்டு ஆட்டோக்களை வாங்கிட்டு வந்திருக்காரு வே...


''ஆத்துல இருந்து ஆட்டோக்கள்ல மணல் அள்ளி போட, அந்த பகுதி மாணவர்கள், இளைஞர்களை, 500 ரூபாய் கூலி குடுத்து கூப்பிடுதாரு... அவங்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு, இந்த காரியத்தை செய்யிதாவ வே... ''இது பத்தி, கிராம மக்கள், கலெக்டரிடம் மனு குடுத்தும், ஒண்ணும் நடக்கல...'' என்ற அண்ணாச்சியே, ''மணிகண்டன் இப்படி உக்காரும்... சூடா சுக்கு காபி குடிப்போம் வே...'' என, நண்பருக்கு இடம் அளித்து, தள்ளி அமர்ந்தார்.


''பெரம்பலுார் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கற ஒரு பெண் அதிகாரி கதையை கேளுங்கோ...'' என, கடைசி மேட்டரைத் துவக்கிய
குப்பண்ணாவே, தொடர்ந்தார்... ''இவங்க, கூட வேலை பார்க்கற, ஏ.பி.ஆர்.ஓ., டிரைவர், போட்டோகிராபர், ஆப்பரேட்டர்களின், டி.ஏ., பில்லுக்கு, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுஇருக்காங்க ஓய்... ''அவா தராம விட்டதால, அவங்க பைலை பெண்டிங்குல போட்டுட்டாங்க... இதே மாதிரி, பத்திரிகையாளர்களை டூர் கூட்டிண்டு போனதா, மாசா மாசம் பொய் கணக்கு காட்டி, பணத்தை சுருட்டிடறாங்க ஓய்...


''தினமும் ஆபீசுக்கு, 11:30 மணிக்கு தான் வராங்க... வார கடைசியான, வெள்ளி கிழமைகள்ல ஆபீசே வரதில்லை ஓய்... ''அதிகாரி, இதுக்கு முன்னாடி இருந்த அரியலுார்ல, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுல நிறைய காசு பார்த்துட்டாங்களாம்... ''அந்த புகார்ல தான் பக்கத்து மாவட்டத்துக்கு துாக்கி அடிச்சா... இங்கே வந்தும் திருந்தலையேன்னு, சக ஊழியர்கள் புலம்பறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''டீச்சர் ராஜேஸ்வரி, இன்னைக்கு சீக்கிரமா ஸ்கூலுக்கு போற மாதிரி தெரியுதே பா...'' என தெருவை பார்த்து முணுமுணுத்தபடியே அன்வர்பாய் கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement