Advertisement

உயர்நீதிமன்ற கிளை செய்திகள்

நிதி நிறுவன மோசடி: சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவு

மதுரையை சேர்ந்த ஆறுமுகம், ராஜேந்திரன், மகாலிங்கம், நாராயணன், விருதுநகர் செல்வகணேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:மத்திய பிரதேசம் குவாலியரை தலைமையிடமாக கொண்டு பரிவார் டெரர்ஸ் அண்ட் அலைடு நிதி நிறுவனம் செயல்பட்டது. 2007ல் மத்திய அரசின் செபி, எஸ்.பி.ஐ., போன்றவற்றில் உரிமம் பெற்றதாக பொய்யான தகவல்களை பரப்பினர். இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி, பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக, இந்நிறுவன மதுரை வளர்ச்சி அலுவலர் செல்வம் வாக்குறுதி கொடுத்து இரண்டாயிரம் முதலீட்டாளர்களை சேர்த்தார். இந்நிறுவனத்துக்கு 2010ல் தடை விதிக்கப்பட்டது என்பதை மறைத்து 2014 வரை முதலீட்டாளர்களின் முதிர்வு தொகையை தராமல் மோசடி செய்தனர். விருதுநகர் உட்பட மாநிலம் முழுவதும் 12 கிளைகள் 2015 ல் மூடப்பட்டன. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2015ல் வழக்குப்பதிவு செய்தனர். ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்தது விசாரணயில் தெரிந்தது. இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.இம்மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

நிர்மலாதேவி ஜாமின் மனு ஒத்திவைப்பு

கல்லுாரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜ் பல்கலை உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டனர். நிர்மலாதேவி, முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் அவகாசம் கோரியதால் விசாரணை செப்.,24க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆதினம் நிலங்கள் விவசாயத்திற்கு மட்டுமே நெல்லை மாவட்டம் மேலகரத்தை சேர்ந்த ஈஸ்வரன்பிள்ளை தாக்கல் செய்த பொதுநல மனு: திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான 14 ஏக்கர் விவசாய நிலம், குற்றாலம் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ளது. மடத்தின் தென்மண்டல மேலாளர் நிர்வகித்து வருகிறார். விளைநிலத்தை அழித்து வணிக நோக்கத்துக்கு பயன்படுத்த உள்ளார். விளைநில வருவாயை கோயில்களில் நித்திய பூஜைக்கு மட்டுமே பயன்படுத்துவது மரபு. இதை மீறும் வகையில் செயல்படுகிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என். சதீஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விளைநிலத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

ஊசி வலை பிரச்னை : அரசுக்கு உத்தரவு

தனுஷ்கோடி பாரம்பரிய மீனவர் நலச்சங்கச் செயலர் அமுதன் தாக்கல் செய்த பொதுநல மனு: கடல் வளம், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கிறோம். சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட ஊசி வலைகளை பயன்படுத்துவதால் மீன் வளம், அரிய வகை கடல் வாழ் உயிரினம் அழிகிறது; சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது. ஊசி வலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஊசி வலைகளை பயன்படுத்த ஐ.நா., சபையின் தடை ஏற்கனவே அமலில் உள்ளது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசிடம் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்கும்படி வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்.,17 க்கு ஒத்திவைத்தனர்.

சவடு மண் குவாரிக்கு தடை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த சின்னமாரி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மாவட்டம் அனஞ்சியூரில் 1.30 ஏக்கரில் செப்.,15 முதல் சவுடு மண் அள்ள மதுரை சிலைமானை சேர்ந்த பிரபாகரனுக்கு ஆக.,20ல் கலெக்டர் அனுமதி அளித்தார். விதிகளை மீறி 35 அடி ஆழத்திற்கு மேல் ஐந்து இயந்திரங்கள் மூலம் ஒப்பந்ததாரர் மண், மணல் அள்ளி வருகிறார். இதனால் நிலத்தடி நீர் கீழ் மட்டத்துக்கு சென்று விட்டது. விவசாய நிலங்கள் அழிந்து வருகின்றன. அனஞ்சியூரில் சவுடு மண் அள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அனஞ்சியூரில் சவுடு மண் அள்ள இடைக்கால தடை விதித்து விசாரணையை செப்.,20க்கு ஒத்திவைத்தனர்.

திரும்ப ஒப்படைத்த பணியிடம் ஏ.டி..ஜி.பி., உத்தரவு

மதுரை சின்னசொக்கிகுளம் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக உள்துறை அமைச்சகம் 2011ல் சிறைத்துறையில் அரசாணை வெளியிட்டது. அதில் சிறைத்துறையில் காலியாக இருந்த 32 அதிகாரிகள் பணியிடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பிட்டது. 2011 ம் ஆண்டு வரை 96 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடம் இருந்தது.ஆனால் நவம்பர் 2011ல் காலியாக இருந்த 32 சிறைத்தறை அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்பாமல் அரசிடமே திரும்ப ஒப்படைத்து விட்டனர். மீதம் உள்ள 38 அதிகாரிகள் தற்போது பணியில் உள்ளனர். காலியாக உள்ள 26 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடங்களை தற்போது பணியில் உள்ள அதிகாரிகளே கூடுதலாக கவனித்து வருகின்றனர். இதனால் பணிச்சுமை ஏற்படுகிறது. 2011ம் ஆண்டு அரசிடம் ஒப்படைத்த சிறைத்துறை அதிகாரிகளின் பணியிடங்களை மீண்டும் நிரப்ப உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. உள்துறை செயலர் (சிறை), சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement