Advertisement

இது உங்கள் இடம்

தீபாவளிக்கு வாழ்த்து கூறுவாரா ஸ்டாலின்!பொன்.கருணாநிதி, கோட்டூர், பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தி.மு.க.,வின் தலைவராக பொறுப்பேற்ற பின், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வை கடுமையாக தாக்கி பேசினார், ஸ்டாலின். அவரது பேச்சில், மிகவும், 'ஹை லைட்'டாக, 'கடவுளை வழிபடுவோருக்கு எதிர்ப்பாளர்கள் நாங்கள் அல்ல' என்றார்; இது, மிகவும் வரவேற்கத்தக்கது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து கூறும் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைகளான, விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து கூற வேண்டும். இப்படி அவர் செய்தால், தி.மு.க., சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கிறது என அர்த்தமாகி விடும். இந்தாண்டு முதல், வாழ்த்து தெரிவித்தால், ஸ்டாலினின் பெருமையை, மேலும் உயர்த்தும்.

தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 'காம்ரேட்'களின் மூத்த தலைவர்களான, சங்க ரய்யா, நல்லகண்ணு போன்றோரை, இல்லம் தேடிச் சென்று வாழ்த்து பெற்றார். இந்த வரிசையில், குமரி அனந்தன் உள்ளிட்ட, வேறு சிலரையும் அவர் சந்தித்து இருந்தால், மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

'என் காலில் யாரும் விழக் கூடாது; எனக்காக, பெரிய விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது' எனவும், ஸ்டாலின் கூறியுள்ளார். அதை முழுமையாக, அவர் கடைபிடித்தால், அரசியல் கட்சியினருக்கு முன்னோடியாக திகழ்வார். 'எனக்கு சால்வை அணிவிக்க வேண்டாம். அதற்கு பதில் நுால்களை வழங்குங்கள்; அவற்றை நுால் நிலையங்களுக்கு வழங்குவேன்' என்றெல்லாம் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதை பார்க்கும் போது, அவரிடம் வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க அம்சங்கள் இருப்பதாக தெரிகின்றன. இந்த நிலை மாறாமல், அவரது பயணம் தொடர்ந்தால், பிரகாசமான எதிர்காலம் அவரை தேடி வரும்!

---

நாட்டை காப்பாற்ற போவது யார்?ஆர்.பிரேம் சுதாகர், பெரியகுளம், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: அரசு பணிகளை டெண்டர் எடுக்கும் போது, அந்த தொகையில், 9 சதவீதம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., மற்றும் ஆளும் கட்சி மாவட்ட செயலர்களுக்கு, கமிஷனாக தருகிறோம்; இது, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 3 சதவீதம் துவங்கி, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 9 சதவீதமாக வளர்ந்துள்ளது. கமிஷன் கலாசாரத்தை துவக்கி வைத்த பெருமை, தி.மு.க.,வையே சாரும்.

இது மட்டுமின்றி, எதிர்க்கட்சி தரப்பினருக்கும், டெண்டர் பில்லை பாஸ் செய்து தரும் அதிகாரிகளுக்கும், கமிஷன் தர வேண்டும்; நாங்களும், 15 சதவீதம் லாபம் பார்த்தாக வேண்டும். இவை போக, மீதி தொகையில் தான், அரசு கொடுத்த வேலைகளை முடிக்கிறோம். இப்படி கூறிய ஒப்பந்ததாரர்கள், தற்போது கொதித்து போய், ஒரு முடிவுக்கு வந்து விட்டனர்.

மதுரையில் நடந்த, பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தில், 'இனி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு கமிஷன் தரப் போவதில்லை' என, முடிவு எடுத்துள்ளனர். இதை எப்படி கடைபிடிப்பர் என, தெரியவில்லை. இது வரை, கூட்டணி அமைத்து, மக்கள் வரிப் பணத்தை பங்கு போட்டுக் கொண்டோர், திடீரென எப்படி மாறுவர்!முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, லஞ்ச பேர் வழிகள் என, பொதுப்பணித் துறையின் உயர் அதிகாரிகள், 10 பேர் பெயர்களை பகிரங்கமாக அறிவித்தனர், ஒப்பந்ததாரர்கள். ஆனால், அவர்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கமிஷன் வழங்கி, அரசு பணிகளை செய்ததால் தான், கோவை அருகே, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை பெயர்ந்து விழுந்து, பலர் இறந்தனர். புதிதாக போடப்பட்ட சாலைகள், லேசான மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், உருக்குலைந்து விடுகின்றன. அரசியல் பின்னணி உடைய, ஒப்பந்ததாரர்களுக்கும், அரசியல்வாதிகளின் பினாமிகளுக்கும், அரசு சார்ந்த ஒப்பந்த பணிகள் வழங்கக் கூடாது.

இனி, பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை சார்ந்த பணிகளில், நேர்மையான முறையில் டெண்டர் விடப்பட்டால், தரமான சாலை, மேம்பாலங்கள், தெருவிளக்குகளை பார்க்க முடியும். இல்லாவிட்டால், மக்கள் புலம்பியே மடிய வேண்டியது தான். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் கூட்டணி அமைத்து கொள்ளையடிக்கும் செயலை, ஒப்பந்ததாரர்கள் நினைத்தாலும் தடுக்கலாம். ஆனால், அப்படி நினைப்போருக்கு, அரசு பணிகளில் டெண்டர் கிடைக்கவே கிடைக்காது. யார் தான் நாட்டை காப்பாற்றப் போகின்றனரோ?

---

வெறும், 'பாவ்லா'வா விசாரணை கமிஷன்கள்?ஆர்.சந்தானம், போஸ்ட் மாஸ்டர் (பணி நிறைவு), கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: அன்று, தி.மு.க.,வின் தலைவராக இருந்த, கருணாநிதி மீது, சர்க்காரியா கமிஷன் விசாரணை நடந்தது. இந்திரா தலைமையிலான, காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால், சர்க்காரியா கமிஷன் விசாரணை, 'புஸ்வாணம்' ஆனது. இன்று, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வருகிறது. அந்த விசாரணை முடிவில் என்ன ஆகுமோ... அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பல வழக்குகளை விசாரிக்க, மத்திய - மாநில அரசுகள் விசாரணை கமிஷன்களை அமைத்து உள்ளன. அதற்காக, பல கோடி ரூபாய் வீணானது மட்டுமே நிதர்சனமான உண்மை.ஊழல்களை கண்டறிய, அடுத்த ஆட்சி அமையும்போது, ஓய்வு பெற்ற நீதிபதிகளை தலைவராக்கி, விசாரணை கமிஷன் அமைப்பது கண்துடைப்பு வேலை. அதனால் எவ்வித பயனும் கிடையாது. 1991க்குப் பின், இன்று வரை, 45 முக்கிய விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், அரசு பணம், லட்சத்திலும், கோடியிலும் வீணடிக்கப்பட்டது தான், இதுவரை இந்திய மக்கள் கண்டறிந்த உண்மை.இன்று வரை அமைக்கப்பட்ட அனேக விசாரணை கமிஷன்களில், குற்றவாளிகள் கண்டறியப்பட்டதும் இல்லை; அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதும் இல்லை. இது, இந்திய வரலாற்று உண்மை!

'பாம்பின் கால் பாம்பறியும்' என்ற வழக்கு சொல்லின் அடையாளமாகத் தான், அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வால், காலத்தை கடத்துகின்றனர். பின் எப்படி விசாரணை கமிஷனை செயல்பட விடுவர்? அரசியல்வாதிகளில் ஒருவரையொருவர் காப்பாற்றி கொள்ளத் தான் விசாரணை கமிஷனே தவிர, குற்றவாளிகளை கண்டறிய இல்லை; இது, சாமானிய மக்களுக்கும் புரியும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Ramzan கிறிஸ்துமஸ் வாழ்த்துச்சொன்னால் வீரமணியிடம் வாழ்த்துபெறலாம் விநாயகசதுர்த்தி தீபாவளி வாழ்த்துச்சொன்னால் அவர்கொதித்துப்போய் வசைபாடுவாரே யாரிடம் போய்ச்சொல்வது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement