Advertisement

நல்வாழ்வுக்கு பத்துக் கட்டளைகள் : இன்று பாரதியார் நினைவு நாள்

இருபதாம் நுாற்றாண்டின் விடியலில் தமிழ்க் கவிதை வானில் 'நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் இமைப் பொழுதும் சோராது இருத்தல்' என்னும் எழுச்சிமிகு கொள்கை முழக்கத்துடன் வலம் வந்தவர் பாரதியார். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இடைவெளியின்றி வாழ்ந்த மாமானிதர் அவர். மனிதன் சுடர்மிகு அறிவு கொண்டு வையத்துள் வாழ்வாங்கு வாழும் தெய்வ வாழ்வு, வாழ்வதற்கு வேண்டிய நெறிமுறைகளாகப் பாரதியார் கவிதைகளில் வெளியிட்டுள்ள பத்துக் கட்டளைகளை காண்போம்.1. கவலையற்றிருத்தலே முக்தி'வஞ்சகக் கவலை' என்றும் 'கொன்றழிக்கும் கவலை' என்றும் 'சின்னக் கவலை' என்றும் 'கவலைப் பிணி' என்றும் கவலையின் கடுமையையும் கொடுமையையும் குறித்துச் சுட்டியுள்ளார் பாரதியார். எதையாவது எண்ணி கவலைப்படுவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறான் மனிதன். எப்பொழுதும் கவலையிலே மூழ்கிக் கிடப்பவனைப் 'பாவி' எனச் சாடுகின்றார் பாரதியார்.“ கவலைப் படுதலே கருநரகு அம்மாகவலையற்று இருத்தலே முக்தி” என்று தம் நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றார்.2. அச்சம் தவிர்'அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே' எனப் பாரத மக்களின் தற்கால நிலைமையைப் பற்றி நெஞ்சு பொறுக்காமல் வெதும்பிப் பாடியவர் பாரதியார். 'புலைஅச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்' என உணர்ச்சிமிக்க குரலில் முழங்கியவர் அவர். 'அறம் செய விரும்பு!' என ஆத்திசூடியைத் தொடங்கிய ஔவைக்கு மாறாக 'அச்சம் தவிர்!' எனத் தம் ஆத்திசூடியைத் தொடங்கிப் புதுமை படைத்தவர்.“ யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்;எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்”என்பதே பாரதியார் போற்றும் தாரக மந்திரம் ஆகும்.3. சஞ்சலமின்றி இருமகிழ்ச்சியான வாழ்வுக்கு மனம் சஞ்சலம் இல்லாமல் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.“ மனத்தில் சலனம் இல்லாமல்மதியில் இருளே தோன்றாமல்நினைக்கும் பொழுது நின்மவுனநிலை வந்திட நீ செயல்வேண்டும்”என 'விநாயகர் நான்மணி மாலை'யில் கணபதியிடம் வரம் வேண்டுகின்றார். 'தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே; ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு, பராசக்தி உளத்தின் படி உலகம் நிகழும்' என அறிவுறுத்துகின்றார்.4. இன்று புதிதாய்ப் பிறப்போம்நடந்து போனதை நினைத்து வருந்துவதும் நடக்கப் போவதை எண்ணி மயங்குவதுமே சாதாரண மனிதனின் இயல்புகள். இவ்விரு இயல்புகளிலிருந்து விடுபட்டு 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்று நடத்த வேண்டும் என்பதே பாரதியாரின் கருத்து.“ இன்று புதிதாய் பிறந்தோம் என்று நெஞ்சில்எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டுதின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்”என்பது அவர் மனித குலத்திற்கு அறிவுறுத்தும் வாழ்க்கைப் பாடம்.5. கோபத்தை வென்றிடு'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்பது வள்ளுவம். 'சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக் கோனே சித்தி வாய்ந்தது என்று எண்ணேடா தாண்டவக் கோனே' என்பது சித்தர் வாக்கு. முன்னோரது இம் மணிமொழிகளை அடியொற்றிப் பாரதியாரும் சினத்தின் கேட்டினைக் குறித்து நம் நெஞ்சில் பதியும் வண்ணம் பாடியுள்ளார்.“ சினங் கொள்வார் தமைத்தாமே தீயால்சுட்டுச்செத்திடுவார் ஒப்பாவார்; சினங்கொள்வார் தாம்மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்யவாள்கொண்டு கிழித்திடுவார் மானுவா ராம்…கோபத்தை வென்றிடலே பிறவற்றைத் தான்கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே” என்கிறார்.6. அன்பே தவம்'அன்பே சிவம்' என்பது திருமூலர் மொழி. 'அன்பின் வழியது உயிர்நிலை' என்பது வள்ளுவர் வாய்மொழி. 'ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்' என விரும்பியவர் வள்ளலார். 'அன்பினாலே உண்டாகும் இன்பநிலை' என்பது திரையிசைத் தமிழ். பாரதியாரும் தம் பங்கிற்கு அன்பு நெறியின் அருமை பெருமைகளைக் குறித்து பாடியுள்ளார். 'வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு' என்பது அவர் உணர்த்தும் வாழ்க்கை நெறி.7. தன்னை வென்று ஆளும் திறம்ஒருவன் வாழ்க்கையில் உயர்வதற்கு முக்கியமானது அவன் தன்னை அறிதல், தன்னை ஆளல், தன்னை வெல்லல். 'தனைத்தான் ஆளுந்தன்மை நான் பெற்றிடில் எல்லாப் பயன்களும் தாமே எய்தும்' என 'விநாயகர் நான்மணி மாலை'யில் பாடும் பாரதியார் 'ஆத்ம ஜயம்' என்ற வேதாந்தப் பாடலில் ஒருவன் தன்னை வென்றாளும் திறமை பெற்றால் அவன் பெறும் மேன்மை குறித்து விளக்குகிறார்.“என்ன வரங்கள் பெருமைகள் வெற்றிகள்எத்தனை மேன்மைகளோதன்னை வென்றால் அவை யாவும் பெறுவதுசத்திய மாகும்…”8. நல்ல மனம் வேண்டும்அறங்களுள் எல்லாம் தலையாய அறம் மனத்தைத் துாய்மையாக வைத்திருத்தல் ஆகும். 'மனமது செம்மையானால் மந்திரம் செபித்தல் வேண்டா' என்பது சித்தர் வாக்கு. இங்ஙனம் முன்னோர்கள் வலியுறுத்திய மனத் துாய்மையின் இன்றியமையாமையை நன்கு உணர்ந்தே பாரதியாரும் கவிதைகளில் ஆங்காங்கே மனத்திற்குப் பற்பல அறிவுரைகளை, கட்டளைகளை வழங்கியுள்ளார்.“ முன்றிலில் ஓடும் ஓர் வண்டியைப் போலன்றுமூன்றுலகும் சூழ்ந்தேநன்று திரியும் விமானத்தைப் போல் ஒருநல்ல மனம் படைத்தோம்” என மனத்தை வாழ்த்திப் பாடுகிறார்.மனிதன் 'பன்றியைப் போல் இங்கு மண்ணிடைச் சேற்றில் படுத்துப் புரளும்' கீழான மனத்தினை வேண்டாது 'விமானத்தைப் போல் விண்ணில் பறந்து வாழும்' உயர்ந்த மனத்தினைப் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பது அவர் கருத்து.9. தெய்வம் காக்கும் என நம்புநம் வாழ்வில் வரும் சோதனை, நெருக்கடி, துன்பம், தொல்லைகள் எல்லாவற்றையும் 'மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே' 'எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும்' என்ற நம்பிக்கையாலே வெற்றி கொள்ளலாம் என ஆழமாக நம்புகிறார் பாரதியார். இங்ஙனம் தெய்வ நம்பிக்கையோடு இருந்தும் சில சோதனைகளிலே நம்மால் வெற்றி பெற முடியவில்லை என்றால் அதற்கும் தெய்வத்தின் அருளே காரணம் என்று எண்ணித் தேறுதல் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.“சக்தி சில சோதனைகள் செய்தால் - அவள்தண்ணருள் என்றே மனது தேறு”“ நம்பினார் கெடுவதில்லை; நான்குமறைத் தீர்ப்புஅம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்” என்பது பாரதியாரின் ஆழ்ந்த நம்பிக்கை.10. மண்ணிலே விண்ணைக் காண்போம்'அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிகளின் மீது தனியரசாணை, பொழுதெலாம் இறைவனது பேரருளின் நெறியிலே நாட்டம், கரும யோகத்தில் நிலைத்திடல்' என்னும் பண்புகளையே அருளுமாறு பரம்பொருளிடம் வேண்டுகோள் விடுக்கிறார் பாரதியார். அவர் குறிப்பிடும் பண்புகள் எல்லாம் மனிதனின் வாழ்வில் அமையுமாயின் அவன் மண்ணிலேயே விண்ணைக் காண்பான்; அமரத் தன்மையை அடைவான்.பாரதியார் வலியுறுத்திப் பாடியுள்ள இப் பத்துக் கட்டளைகளைக் கசடறக் கற்று அவற்றின் வழி நிற்கும் மனிதனின் வாழ்வு மாண்புமிகு வாழ்வாக விளங்கும்; இம் மண்ணுலக வாழ்விலேயே வானுறையும் தெய்வநிலை அவனுக்கு வந்து சேரும்!-- பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரை.94434 58286

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement