Advertisement

முடிவு காண்பது எளிதா?

படித்து முடித்ததும், ஒவ்வொருவருக்கும் வேலை கிடைக்காத பட்சத்தில், அது, அத்துறைக்கு செலவழிக்கும் அரசு பணத்தை வீணடிக்கிறது என்பதாகும்.இப்போது பொறியியல் படித்து விட்டு, இந்தியா வில், 80 லட்சம் பேரும், தமிழகத்தில், 1.60 லட்சம் பேரும், வேலையின்றி இருப்பதாக கூறப்படுகிறது. இப்புள்ளி விபரத்தை அப்படியே ஏற்க முடியாது. சில பொறியியல் பட்டதாரிகள் ஏதாவது ஒரு பணியில் தற்காலிகமாக இருந்தாலும், அது அங்கீகரிக்கப்பட்ட பணி இல்லை என்பதால், அது இயல்பாக வெளிவராது.

பல விஷயங்கள் கல்வித்துறையில் தாமதமாக அணுகப்பட்டிருக்கிறது என்பது, தமிழகத்திற்கு மட்டும் அல்ல; மஹாராஷ்டிரம் போன்ற, முன்னணி மாநிலங்களுக்கும் பொருந்தும்.ஏனெனில், எவை எல்லாம் கல்விக்கு இடைஞ்சலோ அவை தாராளமாக அரங்கேறியிருக்கிறது. தமிழகத்தில் மீண்டும், 'ராகிங்' என்பது கல்வியின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாகும். அண்ணா பல்கலைக் கழகம், முனைவர் படிப்பில் தினமும் மூன்று பேரை உருவாக்குவதாக வந்த தகவல், அவர்கள் அனைவரும் உலகப் பல்கலை கழகத்தின் தரத்தில், 60 சதவீதத்திற்கு ஏற்றவர்களா என்பது தெரியாது.

எந்த தனியார் பல்கலை கழகம் மாணவர் இன்றி இளைத்திருக்கிறது? எங்கே கல்வித் தரம் இல்லை? எதில் முனைவர் பட்டம் முறையாகப் பெறாமல், அதை நோக்கிப் பயணிக்கும் பலர் ஆசிரியர்கள் என்ற முறையில், அங்கு மேற்படிப்பை கற்றுத் தருகின்றனர் என்பதை மதிப்பீடு செய்தாலும் தவறில்லை.முதலில், 10ம் வகுப்பு வரை உள்ள கல்வித் திட்டத்தை ஒழுங்குபடுத்துவது என்பது பிரமாண்ட பணி. தனியார் பள்ளிகள் முந்தி நிற்பது சில சமயங்களில் சரி என்றாலும், அரசு பள்ளி களின் எண்ணிக்கை தான் இந்திய மக்கள் தொகை அடிப்படையில் அதிகரித்த ஒன்றாகும். இப்போது, 'ஸ்மார்ட்' பள்ளி கல்வித்திட்டம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதும், புத்தகத்தில் இருந்து நெட்டுருப் போட்டு பயிலும் வழக்கமும், அடுத்த எட்டு ஆண்டுகள் கழித்து மாறலாம்.

அதற்கு முன், தாய்மொழி அறிவு இல்லாத அடிப்படைக் கல்வி, எந்த நாட்டையும் சீராக மாற்றாது. பத்தாண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் அரசு தங்களது அடிப்படைக் கல்வியை பரிசீலித்தது. அதில், 7 வயது வரை உள்ள சிறுவர்கள் தங்களது உணவு சாப்பிடும் அணுகுமுறையை மாற்றிக் கொண்டதை அறிந்தனர். அதை அவர்கள், 'டேபிள் மேனர்ஸ்' என்று குறிப்பிடுவர். முட்கத்தி, ஸ்பூன் போன்றவற்றை எப்படி கையாளுவது என்று சொல்லித் தர முற்பட்டனர். இது சரியா என்று பலர் சிந்திக்கலாம்.

மேற்கு வங்கத்தில், மம்தா நான்காண்டு முதல்வர் பயணத்தில், அடிப்படைக்கல்வி அழிந்து விட்டதாக கருதி, அதை சீராக்க புதிய கல்வியாளர் கமிட்டி அமைத்திருக்கிறார். நம் மாநிலத்திலும், 10ம் வகுப்பிற்குள் பயிலும் மாணவ - மாணவியரை எதிர்காலத்திற்கு உரிய முறையில் அழைத்துச் செல்ல, புதிய அணுகுமுறைகள் வலுப்பெற வேண்டும்.ஏனெனில், கர்நாடகாவில் ஆரம்ப கல்விக்கான ஆசிரியர்கள், 10 ஆயிரம் பேருக்கான தேர்வு நடந்தது. விண்ணப்பித்தவர்களில், நிறைய பேர் அதிக கல்வித் தகுதி கொண்டிருந்தனர். அம்மாதிரி விண்ணப்பித்த, 60 ஆயிரம் பேரில், 5 சதவீதம் பேர் மட்டுமே, அத்தேர்வில் வென்றனர். கடைசியாக, ஆசிரியர் தேர்வு என்பதில், சில எளிதான நடைமுறை தேவை என்ற கோரிக்கை எழுந்து விட்டது.

நாடு முழுவதும், 864 பல்கலை கழகங்கள் உள்ளன. நாட்டில், 40 ஆயிரத்திற்கும் அதிகமான கல்லுாரிகள் உள்ளன. இப்போது மத்திய மனித வளத்துறையும், அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலும், நிடிஆயோக் அமைப்பும், மாநில, மத்திய அளவில் கல்விக்கு செலவழிக்கும் பணத்தை, முறையாக்க வழி தேடுவதில் ஈடுபட்டு இருக்கின்றன.பட்டதாரிகள் ஆன மொத்த மாணவர் எண்ணிக்கையில், மன நிறைவான வேலை என்பது, 20 சதவீதம் பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. இது, நீண்ட நாட்களாக பட்டதாரிகளை மட்டும் உருவாக்கும் கல்வித்திட்ட அணுகுமுறையில் உள்ள கோளாறு. முதல் தலைமுறை பட்டதாரிகள், அல்லது பொறியியல் பட்டதாரிகள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

ஆனால், திறன் அற்ற, வளரும் தொழில்நுட்பத்தை சமாளிக்க இயலாதவர்கள், அனாவசியமாக மன இறுக்கத்தின் பிடியில் சிக்கிய இளைஞர்கள் கூட்டமாக மாறிவிடுவர்,சில்லரை விற்பனைத்துறை, சுற்றுலாவின் பன்முக பரிமாணம், மருத்துவ ஆய்வு மற்றும் சிகிச்சைகளில் தேவைப்படும் நர்ஸ் உட்பட மற்ற மருத்துவப் பணியாளர்கள், உணவு பதப்படுத்தும் தொழில், நுகர்வோர் நல பாதுகாப்பு, பல்வேறு வகை இன்சூரன்ஸ்கள் உட்பட பல தொழில்களை கற்றுத்தர கல்லுாரிகள் தயாரா? அதை உருவாக்க மாநில, மத்திய அரசு திட்டங்கள் ஒருங்கிணைந்து செயல்படப் போகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement