Advertisement

அழத்தான் வேண்டியுள்ளது!

தமிழகமே இது வரை சந்தித்திராத குற்றத்தை, குன்றத்துார் அபிராமி செய்து விட்டாள்! கள்ளக் காதல் செய்திகளை கேட்டுள்ளோம்... அதற்காக, பெற்றோர், உற்றார், உறவினர், கணவன், குழந்தைகளை பிரிந்து சென்றுள்ள பெண்களை அறிந்துள்ளோம்.ஆனால், பெற்றெடுத்த அருமை செல்வங்களை, முறை தவறிய காதலுக்காக ஒரு பெண் கொல்லத் துணிவாளா என்பது தான், அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே நடந்த இந்த பயங்கரம், கற்புக்கும், கண்ணியத்துக்கும் பெருமை சேர்க்கும் தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அபிராமி என்ற அழகான பெயர் கொண்ட இளம்பெண்ணின் செயல், அனைவரையும், அருவருக்க வைத்துள்ளது. அந்த பெண்ணின் கள்ளக் காதலுக்கு, வயது, ஒன்றிரண்டு மாதங்கள் தான். அதற்குள் இந்த கொடூரமா... அய்யய்யோ... நினைக்கவே உள்ளம் பதைக்கிறது. காதலன் ஒன்றும், பெரிய வேலையில் இருக்கும், டிப் - டாப் ஆசாமி இல்லை. பிரியாணி கடை ஒன்றில், மாதம், ஐந்தாயிரமோ, பத்தாயிரமோ சம்பளம் வாங்கும் சாதாரண, வேலைக்காரன் தான். அவன், எம்.ஜி.ஆர்., போல் சிவாஜி போல் அழகனாக இருப்பான் என எண்ணுகிறீர்களா... அப்படியும் இல்லை. சாலைகளில் சாதாரணமாக காணும் ஆள் தான் அவன்! அவனுடன் வாழ ஆசைப்பட்டு தான், அழகிய தன், 7 வயது ஆண் குழந்தையையும், ஆசையாக வளர்த்த, 4 வயது பெண் குழந்தையும் கொன்றுள்ளாள், அபிராமி. கள்ளம், கபடமற்ற அந்த பிஞ்சுகளுக்கு, அதிக துாக்க மாத்திரை கலந்த பால் கொடுத்துள்ளாள். 'அம்மா பால் தான் தருகிறாள்' என நினைத்து, அதை குடித்த குழந்தைகளில், பெண் குழந்தை, சிறிது நேரத்தில் இறந்து விட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த, ஆண் குழந்தையை, கழுத்தை நெரித்து கொன்று உள்ளாள், அந்த ராட்சஷி. குழந்தைகளுக்கு கொடுத்த, துாக்க மாத்திரை கலந்த பாலை, தன் காதல் கணவன் விஜய்க்கும் கொடுத்துள்ளாள். மாத்திரையின் வீரியம் போதாததால், உயிர் பிழைத்த அந்த கணவர், குழந்தைகளை இழந்து, மனைவியை சிறைக்கு அனுப்பி விட்டு, சோகத்தில் நிலை குலைந்து போயுள்ளார். வெள்ளத்தில் மூழ்கிய கேரள மக்களுக்கு, நம் தமிழ் மக்கள் காட்டிய அன்பும், பாசமும், செய்த உதவிகளும், உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிலையில், தமிழகத்திற்கே இப்படி ஒரு தலைகுனிவை உண்டாக்கியுள்ளாள், இந்த அபிராமி. மொபைல் போன் செயலி மூலம், அவள் செய்திருக்கும், 'டப்ஸ்மேஷ்' வீடியோக்களை பார்க்கும் போது, கணவன் வங்கி வேலைக்கு போய், மாடாக உழைத்த நிலையில், இந்தம்மா மட்டும், வித விதமா, 'டிரெஸ்' பண்ணி, 24 மணி நேரமும், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், மியூசிக்கலி' என, சமூக வலைதள செயலிகளில், 'லவ் மூடிலேயே' இருந்துள்ளாள் என்பது தெரிகிறது. அதனால் தான் இப்போது, சிறையில் களி, தின்னும் நிலைமைக்கு வந்துள்ளாள். அபிராமியின் கணவர், 'என் மனைவி, இதுவரை குழந்தைகளை அடித்ததே இல்லை; அப்படிப்பட்டவள் எப்படி, குழந்தைகளை கொன்றாள் என்று தெரியவில்லை...' என்கிறார்.அவரை நினைத்து, அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. இத்தனை, 'ரொமான்ஸ் பார்ட்டி'யான தன் மனைவி, வீட்டை விட்டு காதலனுடன் ஓடிப் போய் ஒரு வாரம் தங்கியிருந்து உள்ளாள். அப்போது கூட, அவள் பின்னால் சென்று, காலில் விழுந்து, 'பிள்ளைகளுக்காக திரும்பி வா' என, அழைத்து வந்துள்ளார். அன்றைக்கே அவளை துரத்தி விட்டு, வேறு ஒரு பெண்ணை மணந்து, குழந்தைகளை நல்ல படியாக வளர்த்திருக்கலாம்! அவள் செய்த கொலைகளை அறியும் ஆண்கள் மன நிலை, எப்படி இருக்கும் என, யோசித்துப் பாருங்கள்... பெண்கள் மீதுள்ள நம்பிக்கையையே இழந்து போவர் அல்லவா... நம்மால், இந்த குற்றத்தை ஜீரணிக்கவே முடியவில்லை; அவளின் கணவருக்கு எப்படி இருக்கும் என, யோசித்துப் பாருங்கள்! குழந்தைகள், இளம் பெண்கள் தப்பு செய்தால், வீட்டில் உள்ள தாய் அவர்களுக்கு புத்தி சொல்வாள். ஆனால், அந்த தாயே, கள்ள உறவில் ஈடுபடும் போது, அவளது குடும்பம் சீரழிந்து தானே போகும்! இவளின் கொடூரத்தால், கள்ளக்காதலன் சுந்தரத்தின் மனைவியும், பாதிக்கப்பட்டுள்ளார். சுந்தரமும் காதல் திருமணம் செய்தவன் தான்! அவனை நம்பி, தன் பெற்றோரை விட்டு வந்த மனைவியின் கதியை என்ன சொல்வது... கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த நம் மண்ணில், சர்வ சாதாரணமாக கள்ளக்காதல் விவகாரங்கள் வெளியே தெரிய வருகின்றன. முன்பெல்லாம், திருமணம் ஆன பெண் என்றால், ஆண்களுக்கு மரியாதை இருந்தது. ஆனால், இப்போது, அதுவே வசதியாகி விட்டது. 'பழி போடுவதற்கு ஒரு இளிச்சவாயன் கிடைச்சிட்டான்...' என்ற கூடுதல் தைரியம் வந்து விடுகிறது, சில ஆண்களுக்கு! அந்த காலத்தில், கூட்டுக் குடும்பம் தான்; கணவன், மனைவி சந்தோஷமாக இருப்பதே அபூர்வம். சந்தோஷ சந்தர்ப்பங்கள் அரிதாக இருந்தாலும், அவர்களிடத்தில் அன்பு பெரிதாக இருந்தது; உண்மையிருந்தது; சாகும் வரை இணை பிரியாத உறவு இருந்தது.ஆனால் இன்று... பெரியவர்களை வீட்டை விட்டு துரத்தி விட்டோம்; அவர்கள் எங்கோ ஒரு மூலையில் கிடக்கின்றனர். திருமணம் ஆனவுடனே, தனிக்குடித்தனம். மாமியார், மாமனார் வேண்டாம் என, துரத்தும் பெண்கள், புதிதாக குடியேறும் இடங்களில், புதிய உறவை வளர்த்து கொள்கின்றனர். அதில் சிலர் தவறாக போக, வாழ்க்கையே சீரழிகிறது. பணப் புழக்கமும் அதிகமாகி விட்டது. அப்புறம் என்ன... காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு கூட, ஆறு மாதத்திலேயே சலிப்பு தட்டி விடுகிறது. அலுவலகத்தில் பணி புரிபவர்களிடம், 'பர்சனல்' விஷயங்களை சொல்லுவது; அப்புறம் நட்பை வளர்த்துக் கொள்வது; பத்தாததற்கு, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக், மியூசிக்கலி...' என, மொபைல் போன் செயலிகளில், நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு நடிப்பது; உடலை கவர்ச்சியாக காட்டுவது; பார்க்கும் ஆண்களைத் துாண்டி விடுவது என, இன்றைய பெண்களில் சிலர், அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றனர். அப்புறம் என்ன... ஆண்கள் சும்மா இருப்பரா... இந்த மாதிரி பெண்களுக்கு, 'லைக்' போடுவது, 'செல்லம், டார்லிங், அழகே...' என, 'கமென்ட்' போடுவது... அந்த புகழ்ச்சியில் மயங்கி, சிக்கும் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வது என, இன்றைய உலகம் சீரழிந்து வருகிறது. அதற்கு தான், அந்த காலத்தில், வயதுக்கு வந்தவுடனே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததில் இருந்து தான், கள்ள உறவுகள் ஆரம்பித்தன என்கின்றனர், விபரம் தெரிந்தவர்கள்! என்றைக்கு இந்த ஸ்மார்ட் போன்கள் வந்ததோ, அன்றே சிறுவர்கள், இளைஞர்கள், குடும்பப் பெண்கள் என பலர், காம வலைகளில் சிக்கி, தங்கள் குடும்ப வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர். இங்கே... அபிராமியும், சுந்தரமும், இப்படி தான், ஆபாச வீடியோக்களை பார்த்து அதன் படி, 'என்ஜாய்' செய்கிறோம் என்ற பெயரில், அதீத காமத்துக்கு அடிமைகளாகியுள்ளனர். அதற்கு தடையாக இருந்த குழந்தைகளை கொன்று விடும் அளவிற்கு, அவள் சென்று விட்டாள். காமம் இவர்களது கண்களை எந்த அளவிற்கு மறைத்திருக்கிறது என்று யோசித்தால், அதிர்ச்சியாக இருக்கிறது. 'கொலை செய்தால், போலீசில் எப்படியும் சிக்குவோம்' என்ற உணர்வு கூட இல்லாமல், இருவரும் செயல்பட்டு உள்ளனர். கணவன் பிறந்த நாளன்று, அவருக்கு விஷம் வைத்து கொன்று விட்டு, இவர்கள் தப்பி போய், ஜாலியாக இருப்பார்களாம்... யாரும் இவர்களை சந்தேகப்பட மாட்டார்களாம்... இவர்கள் இன்ப வாழ்க்கை வாழ்வார்களாம். எப்படி இருக்கு பாருங்க, இவங்களோட திட்டம்...'இவன் கூட பேசுவது, கொஞ்சம் நல்லா இருக்கே... அவன் நம்மை புகழும் போது, சுகமாக இருக்கே...' என நினைத்து, அடுத்த ஆண்களுக்கு இடம் கொடுத்தால், உங்கள் மானம் மட்டுமல்ல, உங்கள் குடும்ப மானமும் போய், நடுத்தெருவில் நிற்பீர்கள் என்பதை, பெண்கள் மறக்கக் கூடாது. அவரவர், தங்களுக்கு கிடைத்த, 'பார்ட்னரை' நேசியுங்கள். வீட்டில் மனம் திறந்து பேசி, சிரித்து, அரட்டை அடித்து, பிள்ளைகளுடன் ஜாலியாக இருங்கள். உங்க குடும்பச் சூழல் எப்போதும், உயிரோட்டமாக இருக்கும் படி வைத்துக் கொள்ளுங்கள். யாராய் இருந்தாலும், அடுத்தவர் மனைவி, கணவனுக்கு ஆசைப்படாதீர்கள். மற்றவர் பொருளுக்கு ஆசைப்படும் போது, இரண்டு குடும்பங்களும் சிதைந்து போகும் என்பதை மறந்து விடாதீர்கள். அது போல, கணவன்மார்களே... குடும்பத்திற்காக கஷ்டப்படுகிறேன் என்ற பெயரில், இரவு, பகலாக வேலை செய்து, மனைவிகளின் ஆசைகளை ஒதுக்காதீர்கள். உங்கள் மனைவியின், 'வீக்னஸ்' என்ன என்பது, உங்களுக்கு தான் தெரியும். அதற்கு ஏற்றார் போல், அவர்களை நீங்கள் தான் நடத்த வேண்டும். நல்ல, கண்ணியமான மனைவி வாய்த்தால் பரவாயில்லை. மனைவியின் போக்கில் மாற்றம் தென்பட்டால், அவளை நல்வழிப்படுத்துங்கள். அதற்காக, உங்கள் மற்றும் அவளின் பெற்றோர், உறவினரின் உதவியை நாடுங்கள்.பிரச்னை என்று வந்து விட்டால், சிக்கல் இருவருக்கும் தானே! அதனால், மனைவியை கணவனும், கணவனை மனைவியும் நல்வழிப்படுத்த வேண்டும். அது தான் இல்லறம், நல்லறம். அதற்காக திருந்தவே செய்யாத, அபிராமி போன்ற ஜென்மங்களை கட்டி அழ வேண்டாம். குழந்தைகள் நலனை கருதி, அவளை, அவள் கணவர் விஜய், முன்கூட்டியே கை கழுவி இருக்கலாம். அப்படி செய்திருந்தால், அவரின் இரண்டு பிஞ்சுகள், உயிர் இழந்து இருக்காது; அவரும் மீளாத் துயரில் துடிக்க மாட்டார்; கள்ளக்காதலன் சுந்தரத்தின் மனைவியும் அனாதரவாக ஆகியிருக்க மாட்டார்.சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி, வீண் போக்கு செல்லும் பெண்கள், உங்கள் குடும்பத்தில் இருந்தால், அவர்களை, மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று, 'கவுன்சிலிங்' கொடுங்கள். அதீத செக்ஸ் உணர்வுகளை துாண்டி விடும் அம்சங்கள் என்னவென்று யோசித்து, அவற்றை கட்டுப்படுத்துங்கள்.அது, இணையதள வசதியுள்ள மொபைல் போனாக இருந்தாலும், உணவு வகைகளாக இருந்தாலும், மருந்தாக இருந்தாலும் அவற்றை துாக்கி எறியுங்கள். சில பெண்களுக்கு, 'அந்த' உணர்வுகள் அதிகம் இருக்கும் என்கின்றனர். அத்தகையவர்களை, தேர்ந்த மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளியுங்கள். கஷ்டம் தான்... வேறு என்ன செய்வது... வெட்கப்படாமல், மருத்துவரிடம் தயவு செய்து ஆலோசனை பெறுங்கள்.நம் குடும்பங்களை பாதுகாக்க வேண்டியது, நம் ஒவ்வொருவர் கடமை தானே!
பிரியாசமூக ஆர்வலர்இ - மெயில் priyajemi9003gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இன்றைக்கு வெற்று பெண்ணுரிமை பேசி திரியும் புறம்போக்குகள் இதற்க்கு என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இன்றைக்கு பெண்களை ஒன்றுமே சொல்ல முடிவதில்லை. சொன்னால், உடனே பெண்ணுரிமை பேச ஆரம்பித்து விடுகிறார்கள். தமிழ் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது. எப்படி கரை சேரப்போகிறோமோ தெரியவில்லை.

 • karutthu - nainital,இந்தியா

  ஒன்றுமில்லை காமம் கண்ணை மறைத்து விட்டது . இவளின் மனசாட்சியே இவளை அணு அணு வாக கொல்லும் இது தான் அவளுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை .

 • R S GOPHALA - Chennai,இந்தியா

  அருமையான பதிவு. வாழ்த்துக்கள். சமூகம் மிக கெட்டு போய்விட்டது. முதலில் இந்த டிவி சீரியல்களை பெண்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். சீரியல்களே குடும்பங்களை சீரழிக்கும் பேரழிவு சக்திகள். அடுத்தது வாட்'ஸ் ஆப், facebook போன்ற சமூக வலை தளங்கள்... இவைகளை ஒழித்தாலே போதும். சமூகத்தை நாச பாதையிலிருந்து மீட்பது நம் கையில்தான் உள்ளது.

 • Ramesh - Bangalore,இந்தியா

  It is to be noted that these types of incidents are much more in south india in comparison with north india. Now a days females who are getting married are expecting that boy's parents should not be staying with them. If they are staying with them as well either they will hell situation in the family or going for divorce. These incidents are not there in most of north india. We are saying that south indians are well educated. Still of no use...Poor quality and mentality people...Time for wake up...It is the time to realize that this country was /is standing for it's culture,ethics, values which are in the mode of diminishing due to Macaulayism and loosing its rootsWake up

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  அது சரி .பெண்களின் நலனுக்கென்றே உரக்க குறைக்க கொடுக்கும் வாரியங்களும் அதன் தலைகளும் எங்கே போனார்கள்?அவர்கள் இவ்வாறு சமூகத்தில் அத்து மீறிய ஒரு கொலைகாரியை கண்டிக்கக்கூட வேண்டாமா?

 • Sangeedamo - Karaikal,இந்தியா

  அருமையான பதிவு. சமூகத்தின் இன்றைய போக்கை நினைக்கும் போது மனம் பயத்தில் நடுங்குகிறது ஆணும் சரி பெண்ணும் சரி சம்பாதிப்பதில் காட்டும் அக்கறை குடும்பத்தின் மீது காட்டுவதில்லை என்பதே உண்மை. இதில் குழந்தைகள் செய்யும் பல தவறுகள் பெற்றவருக்கு தெரிவதேயில்லை என்பது கொடுமை. அந்த தவற்றிலிருந்து மீட்டு அவர்களை நல்வழி படுத்த பெற்றோர்களுக்கோ பொறுமையும் இல்லை, நேரமும் இல்லை. இப்படி நம் சமுதாயம் நம் கண்முன்னனே அழிவதை கண்டு சொல்லொண்ணா துயரத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கிறோம் சரி செய்ய வழிதான் தெரியவில்லை

 • Kailash - Chennai,இந்தியா

  சரியான உண்மையான ஆலோசனை. இன்னமும் சில பெண்ணியவாதிகள் இந்த பெண்ணுக்கு ஆதரவு தருகின்றனர் மனநிலை பிரச்னை என்று கூறி ஆதரிக்கின்றனர் கணவனின் அடக்குமுறையால் இப்படி என்று கூசாமல் கூறுகின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement