Advertisement

மாற்றுப் பாதை...

எல்லாருக்கும் புரிந்தது பணம் என்பதும், அதிக பணம் சேர்ந்தால், அது சேமிக்கப்பட்டால், வாழ்வாதாரம் சிறக்கும் என்பதாகும். ஆனால், பிரதமர் மோடி ஆட்சி பயணித்த நான்காவது ஆண்டில், அவர் பின்பற்றிய பொருளாதார கொள்கைள் பற்றிய விமர்சனங்கள், பல பயனுள்ள தகவல்களைத் தருகின்றன.இந்த அரசை மக்கள் விரும்பாவிட்டால், தேர்தலில் அகற்றி விடலாம். அவர் கொண்டு வந்த, 'கரன்சி மதிப்பு குறைவு' என்பதை, இன்னமும் விடாமல் பலரும் பேசுகின்றனர். திடீரென அவர், 1,000 மற்றும் 500 ரூபாயை செல்லாததாக்கியதில் என்ன பயன்... அதில், 99 சதவீதம் கரன்சிகள், இன்று ரிசர்வ் வங்கியால் ஏற்கப்பட்டிருக்கின்றன என்ற காலதாமதத் தகவல் குறித்து, பல தகவல்கள் வருகின்றன.இனி, இது குறித்து, பார்லிமென்டின் கூட்டுக் கமிட்டி குழு, விரைவில் ஒரு அறிக்கை தர முடிவு செய்திருக்கிறது. அதன் தலைவர், காங்கிரசின் வீரப்ப மொய்லி. அதை அவர், எப்படி தன் குழுவுடன் ஆய்வு செய்வார்... அதில் எந்த அளவு நடுநிலை இருக்கும் என்பது இனித் தெரியும்.ஏனெனில், இன்றைய நிலையில் இன்னமும், 'கரன்சி மதிப்பை செல்லாதது ஆக்கியது தவறானது' என்ற கருத்தை, காங்கிரஸ் ஒரு உத்தியாக கொண்டிருக்கிறது. அது மட்டும் இன்றி, வங்கிகள் வாராக்கடன் அதிகரிப்பில், காங்கிரஸ் கட்சியின் வங்கிகள் மீதான ஆதிக்கம் காரணம் என்ற கருத்தை, பிரதமர் மோடி கூறியிருப்பது, சற்று சிந்திக்கத்தக்கது.'பெரிய அளவு கடன் வசதிகளை தந்ததில், தன் அரசுக்கு பங்கு இல்லை' என்ற மோடியின் வாதத்தை, காங்கிரஸ், ஆதாரத்துடன் மறுக்க வேண்டும். சமீபத்தில், அதிகமாக பேசப்பட்ட பிரான்சின், 'ரபேல்' விமானம் வாங்கிய விவகாரத்தில், காங்கிரசின் பெரிய தலைவர்கள் யாரும், அதில் ஊழல் நடந்தது என்ற வார்த்தையை பிரயோகிக்க தயங்குவது, வியப்பாக உள்ளது'வேலைவாய்ப்பை குறைத்திருப்பதாகவும், மோடிக்கு வேண்டிய, சில பணக்காரர்கள் கையிருப்பு, வெள்ளைப் பணமாக உதவியது' என்ற வாதம், அனலாக இருக்கிறது.ஆனால், இந்த வாதம் இருக்கும் போதே, தற்போதைய நடப்புக் காலாண்டின் மொத்த வளர்ச்சி, 8.2 சதவீதம் என்ற அறிக்கை, இப்படி பேசுவோரை, அதிக குழப்பத்தில் ஆழ்த்திஇருக்கிறது.

அதற்கு அடுத்த குழப்பம் ஏற்படும் வகையில், வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கை, 5.42 கோடி பேர் என, அதிகரித்திருக்கிறது. இது, கடந்த ஆகஸ்டு மாத எண்ணிக்கையை விட, 70 சதவீதம் அதிகம்.மாத வருமானம் ஈட்டுவோர், வருமான வரி வரம்பிற்குள் வந்த எண்ணிக்கை, 54 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதனால் என்ன ஆதாயம்... வரி கட்டுவோர் கட்டியபடியே இருக்க வேண்டும். ஊழல் சுரண்டலில் ஈடுபட்டிருப்போர், முன்னேறிக் கொண்டிருக்க வேண்டும் என்பது சரியா?உலக பெரிய நாடுகளின் பொருளாதார அறிஞர்கள் பார்வையில், இந்தியா ஜனநாயக நாடு என்பதை ஏற்கின்றனர். அதிக மக்கள் தொகை, சத்துணவு கிடைக்காத பட்டினிக் கொடுமை இருப்பதாக கூறுகின்றனர். அதிக ஊழல் இருப்பதாகவும் கூறுகின்றனர். மூன்றாவது உலக நாடு என்று, நம்மை வர்ணிக்கும் பலர், இந்தியாவில் மாற்றம் வந்ததாக கூறுகின்றனர். அதற்கு அறிகுறியாக கனடா அரசு, இந்தியாவை, 'வளரும் பெரிய பொருளாதார அசுரன் இந்தியா' என்றிருக்கிறது.பசுமைப்புரட்சி, ராக்கெட் தொழில் நுட்பத்தில் குறைந்த செலவில் அதிக முன்னேற்றம், நாட்டில் வாழும், 20 கோடி மத்திய தர மக்கள், நுகர்வோர் வாங்கும் பொருள் அதிகரிப்பு, உணவு முறைகளில் மாற்றம் ஆகியவை, சில எடுத்துக்காட்டுகளாக அடுக்கப்படுகின்றன.

பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும், 5 லட்சம் இந்திய, எம்.பி.ஏ., பட்டதாரிகள், 25 லட்சம் பயோ டெக்னிக்கல் நிபுணர்கள், இவர்களுக்கு உலக வளர்ச்சியுடன் தொடர்பிருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது, இந்த மாற்றம் இங்கு எதிரொலிக்குமா என்பதை, படித்தவர்கள் சிந்திப்பர்.அப்படி இருக்கும் போது, 'ஒரே வரி என்ற கருத்தில் உருவான, ஜி.எஸ்.டி., பொருளாதார புத்தாக்கத்திற்கு உதவுகிறது. இதை ஒரே நாளில், அரசு செய்ய முடியாத விஷயம். பொருளாதாரம் மாற்றுப் பாதையில் பயணிக்கும் காலம் தொடரும் பட்சத்தில், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஜப்பானை நாம் முந்திவிடலாம்' என, அரவிந்த் பனகாரியா போன்ற பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.

உலகப் பொருளாதார சக்திகள் தேக்கத்தில், இந்தியாவின் முன்னேற்றம் இருக்கிறது என்பதை மறுத்து பேசுவது, படித்த இளைஞர்களை, வரிகட்ட முன்வருவோரை கருதாமல் பேசுவது போல இருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement