Advertisement

புத்தகங்கள் உங்களை அழைக்கின்றன!

சமூகத்தின் திறவுகோல் அறிவார்ந்த எழுத்தாளர்களிடமே உள்ளது என்பது உலகம் ஏற்றுக் கொள்ளும் உண்மை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் நம்மை புதிய உலகத்திற்கு
அழைத்துச் செல்லும் அனுபவம் நுால்களுக்கும் எழுத்தாளர்களுக்கும்உண்டு. உலகின் தலைசிறந்த நுால்கள் அத்தனையும் அந்தந்த இனத்தின், மொழியின், பண்பாட்டை அறிவிக்கும் ஒரு
பறையாகவே பார்க்கப்படுகிறது. நுால்கள் என்பதை நாம் பெறும் தாளில் கோர்க்கப்படும் எழுத்துக்கள் என்ற அளவிலே மட்டும் பார்த்து விடக்கூடாது. அது சமூகத்தை புரட்டிப்போடும் நெம்புகோல்கள்.ஒவ்வொரு நாளும் வாசிப்பதற்கு ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நாம் எப்பாடு பட்டாவது வாசிப்பை மேம்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் நமக்கு பிடித்த
மானவற்றை, எளிய வாசிப்பினை அறிமுகப்படுத்தும் நுால்களை வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.அப்படியே நமது வாசிப்பினைத்தொடரும்போது ஒரு காலகட்டத்தில் அடர்ந்த வாசிப்பு நமக்குபழக்கமாகிவிடும். வாசிப்பிலே லயித்து கரைந்து போகும் இன்பத்தை வேறு ஏதும் தந்திட இயலாது. மிகப்பெரிய மேதைகள் அத்தனைபேருமே தனது மிகப்பெரிய துணையாக கொண்டிருந்தது நுால்களையே என்பதை வரலாறு நமக்கு அறிமுகம் செய்கிறது.

அறிவை விரிவு செய் : 'அறிவை விரிவு செய்' என்பான் பாரதி. எட்டயபுர அரண்மனையில்
மிகப்பெரிய நுாலகம் பாரதியால் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு அரிய நுால்களை வாங்கி அதை அப்படியே அடுக்கி வைத்துபார்ப்பதில் அத்தனை பெரிய ஆனந்தம் பாரதிக்கு இருந்தது.
எட்டயபுர மன்னனோடு பாரதிக்கு பல இடங்களில் கருத்துவேறுபாடு இருந்தாலும் அவருடைய குணங்களில் பாரதிக்கு பிடித்த குணங்களில் ஒன்று புத்தகம் வாங்க பாரதி பணம் கேட்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு பணம் தந்து உதவியதே ஆகும்.வாங்கிய புத்தகங்களை பெருமித உணர்வோடு அரண்மனைக்கு வண்டியில் கொண்டு வந்து இறக்கி அதை குழந்தைகள் போல துாக்கி ஒவ்வொரு புத்தகங்களாக பிரித்து படிக்க ஆரம்பிக்கையில் அவனது முகத்தில் தெறித்த ஞானத்தை உணர்ந்தவர்களே அறிய முடியும்.'பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நுால்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்' என்கிறார் பாரதி.

துணைவன் : நம்முடைய பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் பலனேதுமில்லை. உலகின் பல்வேறு கலாசாரங்களையும் பண்பாட்டையும் நமக்கு அறிவிக்கும் நுால்களை நம்முடைய உயிரை விட மேலானதாக கருத வேண்டும் என்பார் பாரதி. பிற மொழிகளிலே இருக்கும் நல்ல இலக்கியங்களையும் செய்திகளையும் அறிந்து கொள்ளும் வகையில் நம்முடைய தமிழிலே அவற்றை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும். தமிழிலும் மிகச் சிறந்த இறவாத
புகழுடைய நுால்கள் புதிதாக இயற்றப்பட வேண்டும் என்று கூறியதோடு ஷெல்லிதாசன் எனும் பெயரில் ஷெல்லியின் கவிதைகளையும் திலகருடைய கட்டுரைகள்,ருஷ்யப் புரட்சி பற்றிய சிந்தனைகளை தமிழுக்கு அறிமுகம் செய்த பெருமை பாரதிக்கு உண்டு. ஒவ்வொரு நாளும் படித்ததோடுமட்டும் இல்லாமல் படித்த நுால்களை அருகில் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்வார். “என்னை ஆளில்லாத தீவில் வேண்டுமானாலும் கொண்டுபோய் விடுங்கள். புடிப்பதற்கு நான் விரும்பும் சில நல்ல புத்தகங்களை கொடுத்து விடுங்கள்” என்றார் அறிஞர் ஒருவர். நமது வாழ்வின் சிறந்த துணையாக எப்போதும் நம்முடன் இருக்க வேண்டியது நல்ல புத்தகங்களே ஆகும். ஒவ்வொரு முறையும் நம்முடைய மனம் சோர்வடையும்போதும் கலங்கி நிற்கும்போதெல்லாம் துணையாக இருப்பது நுால்களே. சில புத்தகங்கள் எழுத்தாளருடைய பல வருடத்தவம் என்பதை நம்மால் மறக்க இயலாது. அவர்களுடைய அனுவபங்களையும் நம்பிக்கையை
யும் நம்மிடையே விட்டுச் செல்வதை நாம் கனிவோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்களால் நமது மனம் வாசிப்பை விட்டு விலகி இருந்தாலும் வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை மறுத்திட
இயலாது. உண்மையிலேயே வாசிப்பை நேசிக்கும் பலரும் இன்று இருக்கிறார்கள் என்பதையே ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிலும் புத்தகங்களின் விற்பனை அதிகரிப்பதை வைத்து உணர முடிகிறது.

நேசித்தவர்கள் : நாலந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நுாலகம் தீயிட்டு ரிக்கப்பட்டதும் புத்தகங்கள் மேலிருந்த அச்சம் காரணமாகவே என்பதை உணர முடிகிறது. அரண்மனை நுாலகத்தில்ஏராளமான நுால்களைச் சேகரித்துவைத்ததாலே அக்பர் சிறந்த
சான்றோராக விளங்கினார் என்பதை வரலாறு நமக்கு பாடமாக வைத்து இருக்கிறது. வாசிப்பு நமக்கு நாள் தோறும் புதிய புதிய அனுபவங் களைத் தந்து கொண்டெ இருக்கும். நல்ல நுால்கள் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிய புதிய உணர்வுகளால் நம்மை ஆட்கொள்ள ஆரம்பிக்கும். வாசிப்பின் அனுபவம் அதை உணர்ந்தவர்களுக்கே புரியும்.கிரேக்க நாட்டு சிந்தனையாளர் சாக்ரடீஸ் மரணதண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்கு கொடுக்கப்படும் வரை படித்துக்கொண்டே இருந்தாராம். துாக்குமேடைக்குச் செல்லும் முந்தைய நாள் இரவு வரை படித்துக் கொண்டிருந்த பகத்சிங் வரலாறு நாம் அறிவோம். புரட்சியாளர் உமர் முக்தர் தனது முகத்தில் துாக்கு கயிறு மாட்டும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம்.லண்டன் நுாலகத்தில் இருபது ஆண்டுகாலம் படித்து ஆய்வுமேற்கொண்ட காரல்மார்க்ஸ் பின்னாளில் பொதுவுடமைச் சித்தாந்தத்தின் தந்தையாக கருதப்பட்டார்.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரத்திற்கும் மேலாக படிப்பதையும் படித்ததைப் பற்றி சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்த பண்பே அப்போதைய ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் நன்மதிப்பை பெற காரணமாக அமைந்தது எனலாம். இப்படி அனைத்து தலைவர்களும் புத்தக வாசிப்பில் மிகச்சிறந்தவர்களாக இருந்தனர் என்பதை வரலாறு சொல்கிறது. நுால் என்பதை நாம் ஆடைகளை தைப்பதற்கும் பயன்படுத்துவோம் அல்லவா? அந்த நுால் என்ன செய்யும்? நம்முடைய ஆடைகளை தைத்து அழகாக்கி நம்முடைய மானத்தைக் காப்பது போலவே இந்த நுாலானது நம்முடைய மனங்களின் ஓட்டைகளை தைத்து அழகாக்கி விடும். ஒவ்வொரு நுாலுமே ஒவ்வொரு ஆசிரியர்களின் மனம் என்பதாலே பல்வேறு எழுத்தாளர்களின் அகம் நிறைந்திருப்பதாலே அது நுாலகம் எனப்படுகிறது. அந்த நுாலகமே ஒவ்வொரு நாட்டின் வரலாற்றையும் கலாசாரத்தையும் தாங்கி நிற்கிறது.

தினம் ஒரு நுால் : நமது வாசிப்பே உலகத்தோடு இணைக்கும் என்பதில் ஐயமில்லை. நல்ல மனிதர்களாக அறிவான மனிதர்களாக நாம் உலகை வலம் வரவேண்டுமெனில் புத்தக வாசிப்பை வேள்வியாகவே செய்திடல் வேண்டும். ஒவ்வொரு நாளுமே குறைந்தது ஒரு நுாலாவது படிக்கவேண்டும். நம்முடைய பையிலே ஒரு புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். புத்தகம் போன்ற ஒரு சிறந்த நண்பனை அத்தனை எளிதாக நாம் பார்க்க இயலாது. நம்முடைய
வாழ்வினை மாற்றும் மகத்துவம் படைத்தவைகள். மிகப்பெரிய தலைவர்கள் அத்தனை பேருமே மிகச் சிறந்த புத்தக வாசிப்பாளராக இருந்திருக்கிறார்கள்.இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகளுக்கு பதியம்போட முடியும். அப்படிப்பட்ட சிறந்த பண்புகளில் ஒன்றுதான் புத்தக வாசிப்பு. இன்றைய இளம் தலைமுறைகள் நாம் சொல்வதைக் கேட்பதைவிட நாம் செய்வதையே செய்ய விரும்பகின்றனர். நாம் வாசிக்க ஆரம்பித்தால் நம்முடைய குழந்தைகளும் வாசிக்க ஆரம்பிக்கும். ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டில் இரண்டாயிரம் பக்கங்களாவது படிக்க வேண்டும் என்று சர்வதேச பண்பாட்டு மையம் பரிந்துரை செய்கிறது. வாசிப்பைத் தொடங்குபவர்கள் ஒரு நாளைக்கு 30 பக்கங்களாவது வாசிக்க ஆரம்பித்து பின்னர் அதை நீட்டிக்கலாம். சிறந்த புத்தகம் என்பது அதன் வடிவமைப்பிலோ அட்டைப்படத்திலோ அல்லது தலைப்பிலோ இல்லை. அது வாசிப்பவரின் மனதிலே கலக்க வேண்டும்.ஏதாவது ஒரு வகையில்
நெருக்கமாக வேண்டும்.அவருடைய மனதை ஆள வேண்டும். அப்படிப் பட்ட புத்தகங்களைத் தேடுங்கள். ஏதேனும் ஒரு புத்தகம் உங்களை மாற்றலாம். அது எந்த அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அது உங்களுக்காக காத்திருக்கும். அதைத் தேடிச் செல்லுங்கள். உங்கள் அறிவு, புத்தகங்கள் தந்தவை என்பதை மறந்துவிடக்கூடாது. நல்ல புத்தகங்களுக்கும் அதை எழுதிய எழுத்தாளருக்கும் நன்றி சொல்லுங்கள். முடிந்தால் அந்த நல்ல நுால்களை நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் படிப்பதற்காக பரிந்துரை செய்யுங்கள்உங்களைப் புரட்டப்போகும் புத்தகங்களை புரட்ட வாருங்கள்!புத்தகங்கள் அழைக்கின்றன.

(செப்.,10 வரை மதுரை தமுக்கத்தில் பபாசியின் புத்தக திருவிழா நடக்கிறது)

-முனைவர். நா.சங்கரராமன்
பேராசிரியர்
எஸ்.எஸ்.எம்.கலைஅறிவியல் கல்லுாரி
குமாரபாளையம்
99941 71074

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement