Advertisement

எந்நாளும் மறவோம் ஆசிரியர்களை! இன்று ஆசிரியர் தினம்

மிகுந்த ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் அப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்
பட்டுக் கொண்டிருந்தது. சிறப்புரை ஆற்றிய பேச்சாளர் ஆசிரியப் பணியின் மகத்துவத்தை விளக்கி கொண்டிருந்தார். பேச்சின் நடுவே 'ஆசிரியர்கள் என்றால் வேறு யாருமில்லை மனதைச் செம்மை யாக்கும் சிற்பிகள்' என்றார். இதைக் கேட்ட கூட்டத்தில் இருந்தவர் 'ஆசிரியர்கள் என்றால் சிற்பி தானா நன்றாகத் தெரியுமா?' என்றார். சிறப்புரையாளர் 'ஆம்! கண்டிப்பாக' என்றார். அதைக்கேட்ட பார்வையாளர் 'அப்படி என்றால் நானும் சிற்பிதான்; நான் கல்லைச் செதுக்குகிறேன். அவர்கள் மனிதர்களை செதுக்குகிறார்கள். மண்ணிலும், துாசியிலும்
உடலை வருத்தி மக்கள் அனைவரும் கையெடுத்து வணங்கும் இறைவனைச் செய்யும் எனக்கு ஆசிரியர்களுக்கு இணையான சன்மானமும், பெருமையும் தரப்படுவது இல்லையே! ஏன்?' என்றார்.'நீங்கள் கூறுவது உண்மைதான், உங்கள் உடல் உழைப்பு மிக அதிகம்.ஆனால் நீங்கள் செதுக்குவது உயிரற்று இருக்கும் பாறைகளை, அவற்றில் நீங்கள் உங்களுக்கு இயைந்து வருவதை வைத்துக் கொள்வீர்கள், உடன்படாததை துாக்கி எறிவீர்கள், அங்கு கேள்வி கேட்க யாருமில்லை, பரிந்து பேச யாரும் இல்லை, ஆனால் ஆசிரியர்கள் செதுக்குவது உயிருள்ள மனித மனங்களை, ஒரு ஆசிரியரின் கடமையானது ஒவ்வொரு மாணவனையும் மதிப்பீடு செய்து அவனுக்குள்இருக்கும் திறமையைக் கண்டறிவது.இன்றைய காலகட்டத்தில்
ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு குழந்தையின், பெற்றோரின் கேள்விக்கு பதில் சொல்ல
வேண்டியதாயிருக்கிறது. இங்கு பண்படுத்தப்படுபவை கரடுமுரடானபாறைகள் அல்ல, பண்படாத மனங்கள். உடலுக்கு உழைப்பு குறைவாக இருக்கலாம், ஆனால் இங்கு உள்ளத்திற்கு பங்கு அதிகம்' என்றார்.

எழுதுகோல் : ஆசிரியர் பணி என்பது உயிருள்ள ஜீவன்களுக்கான பட்டறை.அதனால்தான் அப்துல் கலாம்,நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் முதல், பலமுக்கிய பதவிகளில் இருந்தபோதும்,மக்கள் தன்னை ஒரு ஆசிரியராக நினைவுகூர்ந்தால், அதுதான் பெருமை தரக் கூடிய தருணம் என்றார். அனைவரின் கைகளிலும் எழுதுகோல் இருப்பது வார்த்தைகளை எழுதத்தான், ஆனால் ஒரு ஆசிரியரின் கையில் எழுதுகோல் இருந்தால் பலரின் வாழ்க்கையை மாற்றி எழுதிடும்.டாக்டர். ராதாகிருஷ்ணன்பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம் என்றால் அது ஆசிரியர் பணிக்கு அவர் சேர்த்த மணிமகுடம். அவர் கற்பித்தது புத்தகங்களில் இருக்கும் பாடங்களை மட்டும் அல்ல, தன்னுடைய வாழ்க்கையையே மாணவர்களுக்கு பாடமாக்கினார். மதிப்பெண்கள் மட்டும் கல்வியாகிபோன இக்காலத்தில் உண்மையான
கல்வி என்பது, அறிவையும், திறமையையும், வளர்த்துக் கொள்வது மட்டுமல்ல, அது மற்ற மனிதர்களுடன், சகஜமாக வாழக் கற்றுக் கொடுப்பது என்றுரைத்தவர். ஒரு சிறந்த ஆசிரியர் என்பவர் தான் கையாளுகின்ற பாடப்பிரிவின் அதிபதியாக, அன்றாடம் அதில் இருக்கும் புதிய முன்னேற்றங்களையும் அறிந்தவராக, தன்னுடைய பாடத்தில் மாணவர்களின்
விருப்பத்தை எப்படி அதிகரிப்பது என்பதை, அறிந்தவராகவும் இருக்க வேண்டும் என்று வரையறுக்கிறார். ஒரு சிறந்த ஆசிரியராக, அவர் முதலில் சிறந்த மாணவராக இருக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம்.

வாழ்நாள் மாணவர் : மாணவன் சில காலம் மட்டுமே மாணவன். ஆனால், சிறந்த ஆசிரியரோ வாழ்நாள் முழுவதும் மாணவராக இருக்க வேண்டும். பாடங்களை மட்டும் நடத்துவது என்றால், இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டரும், அலைபேசியும் தான் மிகச்சிறந்த ஆசிரியராக இருப்பார்கள். பாடங்களோடு நல்ல பழக்க வழக்கங்களும், தான் பாடமாக்கப்பட வேண்டும்.
ஒரு ஆசிரியரின் பங்கானது தனக்குத் தெரிந்தவைகளைத் தன்னிடம் பயில்வர்களிடம் திணிப்பதில் இல்லை, அவர்களுக்குள் இருக்கும் திறமையைத் தேடி வெளிக்கொணரும் ஆளுமையில் இருக்கிறது. தாய், தந்தையின் நடை, உடை பாவனைகளை பிரதிபலிக்காத குழந்தைகள் கூட
தனக்குச் சொல்லித்தரும் ஆசிரியர்களின் பாவனைகளை மனதில் ஏற்று, தானே ஆசிரியராக மாறும். ஒரு ஆசிரியர் வகுப்பறையில் இருக்கும் முக்கால் மணி நேரத்தில்,அவர் கற்பிப்பது பாடங்களை மட்டுமல்ல, பழக்கவழக்கங்களையும் தான். ஒரு தனிமனிதனின் உற்சாகமும், உத்வேகமும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது ஆசிரியரில் இருந்து மாணவர்களுக்குத் தரப்படும்போது தான். அப்துல்கலாம் தன்னுடைய ஆசிரியர் சுப்பிரமணிய சிவாவை பற்றி எழுதும்போது, அவர் வகுப்பறைக்குள் நுழையும் போது அவரது உற்சாக ஆற்றல், அவரிடம்
இருந்து அனைத்து மாணவர்களுக்கும் பரவிவிடும் என்று வர்ணிக்கிறார்.

அறிவுத்தேடல் : இந்த நுாற்றாண்டின் சாதனையாளர்களின் வரிசையில் முன் நிற்பவர் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், தன்னுடைய வாழ்க்கையில்
பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியராக தான் பயின்ற பள்ளியின் நுாலக அதிகாரி கேப்பிரியை நினைவு கூர்கிறார். பின்னாளில் ஒரு பெரிய நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ், தன்னுடைய பள்ளிப் பருவத்தில் படிப்பில் ஒரு சராசரி மாணவராக இருந்தார். தன்னுடைய மோசமான கையெழுத்தினால் மற்றவர்கள் எங்கே தன்னைகேலி செய்து விடுவார்களோ, என்று எண்ணி தன்னைக் கூட்டத்திற்குள் மறைத்துக் கொள்வார். அதனால் நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையையும் மறைத்துக் கொண்டார். மாணவர்களுக்கு
நடுவில் தயங்கி நின்ற ஒரு சிறுவனின் உணர்வினைப் புரிந்து கொண்டார் ஒரு ஆசிரியர். அதைக் கண்டறிந்த நுாலக ஆசிரியர், பில்கேட்ஸ் உடன் அமர்ந்து அவருக்குத் தேவையான புத்தகங்களையும் எடுத்து தந்து, அவர் அதைப் படித்த பின்பு அதில் அவர் கற்றுக் கொண்டது என்ன? அவரை ஈர்த்த விஷயம் எது? என தன்னுடைய கேள்விகளின் மூலம் அவரின் அறிவுத் தேடலுக்கு உற்ற துணையாய் இருந்தார். அவரினுள் இருக்கும் தயக்கத்தைத் தகர்த்த அந்த ஆசிரியர் தான் இன்று சாதாரண பில் கேட்ஸ் ஒரு சாதனை நாயகனாக உருவாகியதன் அடித்தளம்.

ஞானம் தருபவர் : ஒரு பெற்றோரிடமான செயல்பாடுகள் அவர்கள் குழந்தைகளிடம் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், ஒரு ஆசிரியரின் செயல்பாடுகளால் ஏற்படும் தாக்கம் ஒரு தலைமுறையைப் பாதிக்கும். ஆயிரம் பேரிடம் இருந்து வரும் வாழ்த்துகளை விட ஒரு ஆசானின் நாவில் இருந்து வரும் வாழ்த்துகள், ஒரு மாணவனை அதிகமாக உற்சாகப்படுத்தும். பல நேரங்களில் பெற்றோர்களால் கூட காணாமல் தவறவிடப் பெற்ற ஆற்றலைக் கண்டு தட்டி எழுப்பும் சக்தி ஆசிரியர்களிடம் அளவின்றி கிடக்கிறது.மண்ணைப் பண்படுத்தி பயிரிடுபவன் விவசாயிமனிதனைப் பண்படுத்தி பயிற்றுவிப்பவர் ஆசிரியர்.
கல்லுக்குள் இருக்கும் கசடு நீக்கி கடவுள் ஆக்குபவர் சிற்பி மாணவனுக்குள் கசடு நீங்கி ஞானியாக்குபவர் ஆசிரியர்.உடலுக்கு ஏற்பட்ட காயத்தை குணமாக்குபவர் மருத்துவர்
உள்ளத்திற்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட்டு உருத்தருபவர் ஆசிரியர்.

உருவத்திற்கு உயிர் தருபவர் : பெற்றோர் ஞானத்திற்கு உருத்தருபவர் ஆசிரியர். உலகில் அனைத்து உன்னத பணிகளும் ஆசிரியப் பணிக்குள் அடங்கும்.
உலகில் எத்தனை ஆயுதம் இருந்தாலும் கல்வி ஒன்றே
நம்மைச் செதுக்கி வழிநடத்தும் உயர்ந்த ஆயுதம். “அறிவு ஒன்றே அற்றங்காக்கும் கருவி” என்கிறார் திருவள்ளுவர். ஒவ்வொரு மாணவனுள்ளும் உள்ள அறியாமையை விளக்கி ஞானத்திற்கான வாசலைத் திறக்கும் திறவுகோல் ஆசிரியரே. ஒரு ஆசானின் எழுத்தும், வாய்மொழியுமே உலகின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்களாகும். மாணவரிடம் உள்ள வேண்டாதவை
களை விளக்கி, அவர்களை அனைவரும் வழிபடும் இறைவனாக மாற்றும் ஆசிரியர்கள்,
வருடத்தில் ஒரு நாள் மட்டுமன்று ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
ஆசிரியர்களைவாழ்த்துவோம்...போற்றுவோம்!

--லாவண்யா ஷோபனா திருநாவுக்கரசு
எழுத்தாளர், சென்னை
shobana.thirunagmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement