Advertisement

அன்பின் சுடர், அறிவின் விடியல் ஆசிரியர்கள்!

குடியரசு தலைவர் மாளிகை விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்பின் குரல் கேட்டு, மாளிகையிலிருந்து வீரமகனாய் வெளியில் வந்தவர் அங்கே மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்ததை கண்டு பிரமித்துப்போனார். அனைவரும் வருக! உங்கள் வரவை கண்டு மகிழ்கிறேன். நீங்களெல்லாம், நான் கல்விப்பணியிலிருந்து ஓய்வு பெறும் போது மலர்துாவி வழியனுப்பியதை மறவேன். தாங்கள் சொல்ல வந்த செய்தி என்னவன்று தெரிந்தால் மகிழ்வேன்' என்றார் அந்த மாமனிதர். சற்றும் தயங்காது மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக்குதித்த
மாணவர்கள் 'ஐயா, உங்களை போன்ற சிறப்புமிக்க மனிதரை காண்பது அரிது. நீங்கள் கற்றுக்
கொடுத்த கல்வி இன்றளவும் எங்களின் உள்ளத்தில் நிலைகொண்டுள்ளது. உங்களை என்றும்
நினைத்து பார்க்க விரும்புகிறோம்.ஆதலால், உங்களின் பிறந்தநாளை நாங்கள் கொண்டாட அனுமதிக்க வேண்டும்,' என்றனர். அதைக் கேட்டவுடன், அந்த மாமனிதர் எண்ணங்களை அசைபோட ஆரம்பித்தார். இன்று இத்தனை மாணவர்கள் தன்முன்னே நிற்க காரணம் நானா? அல்லது நான் கற்றுக்கொடுத்த கல்வியா? என்று தனக்குள்ளே கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டார். ஞானம் பெற்றவராய், மாணவர்களை உற்று நோக்கினார்.

'மாணவச் செல்வங்களே!உங்களின் சொல் கண்டு மகிழ்கிறேன். நீங்கள் அனைவரும் இங்கு வந்ததற்கு என் ஆசிரியப்பணியே காரணம் என்பதை அறிவேன். ஆசிரியப் பணி சாதாரண
பணி அல்ல; அனைவரின் உள்ளத்திலும் ஒளியினை ஏற்றிவைக்கின்ற பணி. நாம் ஒவ் வொருவரும் இவ்வுலகில் பிறந்து மற்ற உயிர்களுக்கு நன்மை செய்து இறையருள் எய்த வேண்டும். அதற்கு வழிகாட்டியாய் அமையும் பணி. ஆதலால் என் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் மகிழ்ச்சிகொள்வேன்' என்றார்

அந்த மாமனிதர்.ஆற்றல் பெற்ற அறிஞர்தத்துவஞானியாய், கல்வியாளராய், எழுத்தாளராய் வலம்வந்த நம்நாட்டின் முதல் துணை குடியரசு தலைவர், திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தவர். தத்துவப்பிரிவில் இளங்கலை, முதுகலையை பயின்று, பிற மதங்களின் தத்துவங்களை எடுத்துயம்பும் ஆற்றல் பெற்றவர்.
மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ் காந்த், பிரால்லி மற்றும் பெர்க்சன் தத்துவங்களை கசடற கற்றார். மேற்கத்திய சிந்தனையை நம் நாட்டு சித்தாந்தங்களோடு ஒப்பிட்டு, வாழ்வின் உன்னத நிலையை அனைவருக்கும் எடுத்தியம்பியவர். மெட்ராஸ் பிரசிடன்சி கல்லுாரி, மைசூர் பல்கலை, கோல்கட்டா பல்கலை இன்றும் இம்மனிதரின் புகழ் பாடும்.
இத்தனை உயர்வுக்கும், புகழுக்கும் சொந்தக்காரராய் நம் கண்முன்னே வீற்றிருப்பவர், நம் பாரத தேசத்தின் இரண்டாம் குடியரசு தலைவர், பாரத ரத்னா விருதுபெற்ற டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.வாழ்வை வளமாக்க பள்ளிக்கு செல்கிறோம். அங்கு கொடுக்கப்படும் கல்வி நம் வாழ்வை நிர்ணயம் செய்யும். தியாக மனப்பான்மையுடனும், தன்னலமின்றியும்,
ஒழுக்கம், கல்வி, ஆன்மிகம் போன்றவற்றை கற்றுக்கொடுப்பது ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரிந்த கலை. போற்றுதலுக்குரிய கல்வியாளர்களையும், கல்வியின் சிறப்பையும் எடுத்தியம்பும் தினம்தான் ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5).குருவின் பாதம்குருவின் பாதம் பணிந்து பெறப்படும் வாழ்த்து, இறைவனின் வாழ்த்தை பெற்று வானளாவிய சிகரத்தை தொடுவதைப் போன்றது.புத்தகத்தை புரட்ட புன்னகையின் தேசத்திற்கே புத்துணர்ச்சியுடன் கொண்டுசெல்லும் ஏவுகணைகள்தான் ஆசிரியர்கள். அன்பின் சுடராய், அறிவின் விடியலாய் திகழும் ஆசிரியர்களின்
புகழினை பறைசாற்றும் ஆசிரியர் தினம், சீனாவின் கன்பூசியஸ், புரூனியின் மூன்றாம் ஓமர் அலி சைபுதின், பூட்டானின் ஜிக்மி டோர்ஜி வாக்சுக் போன்றோரின் பிறந்தநாளை கொண்டாடுவது ஒவ்வொரு நாடும் அந்நாட்டின் கல்வியாளர்களை சிறப்பிப்பதை காட்டுகிறது.
மண்ணை வளமாக்கும் திறனும் விண்ணை தன்வசப்படுத்தும் விஞ்ஞானமும் மாணவ சமு
தாயத்தின் பேராற்றல். நாளைய சமுதாயத்தை உருவாக்கும் சத்தி மாணவரிடம் இருக்கிறது. அந்த மாணவர்களை செம்மையாக்கும் ஆற்றல் ஆசிரியர்களிடம் இருக்கிறது. மாணவனின் வலிமை அறிதல் வாழ்வின் முதற்படி. விடா முயற்சியடன் தடைகளை தாண்டுவதை ஆசிரியர் கற்றுக்கொடுப்பது மாணவர்களின் ஏற்றப்படி. 'முயற்சி திருவினை ஆக்கும்' என்ற
அழுத்தமான சிந்தனைகளை நெஞ்சில் விதைப்பதனாலேயே, ஆசிரியர்களே இன்றைய இளைய சமுதாயத்தின் வெற்றிப்படி.

பண்பாளர்கள் : சாதாரண களத்தை சாதனை களமாக மாற்றுபவர் சிலர். தன்னை அறியாது, அறியாமையின் வாசலில் வீழ்ந்து கிடப்பவர் பலர். வீழ்வது வீழ்ச்சி அல்ல 'வீழ்ந்தே கிடப்பது
தான்' வீழ்ச்சி என்பதை உணர சுயசிந்தனை மட்டுமே கைகொடுக்கும். வழிதோறும் சவால்கள் எதிர் கொண்டால் வெற்றியின் வாசல்கள் திறக்கும். பார்க்கும் பார்வையும், பேசும் சொற்களும் உண்மையின் உருவாய் கலக்கும் போது குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை துாள்துாளாகும். பண்பை இழந்து பாழாகும் வாழ்க்கை, உயிரற்ற உடம்பை போன்றது. எண்ணத்தில் வீரம் கொண்டு, பிறரின் சாதனைக்காக தன்னை மெழுகாய் உருக்கிக்கொள்ளும் பண்பாளரே ஆசிரியர்கள். 'எதிர்கால இந்தியா உருவாகி வளருவது நம் உழைப்பையே சார்ந்திருக்கிறது' என்றார்
விவேகானந்தர். குறிக்கோளை அடைய வேண்டுமானால் உழைப்பின் உன்னதத்தை உணரவேண்டும். அச்சம் நீங்கி தயக்கம் தணிந்து துணிச்சலாய் விளையும் விதையை நடவு செய்திடல் வேண்டும். நல்லெண்ணங்களை மலர்களாக உள்ளத்தில் துாவி, சிந்தனை விளையும் நிலமாக மாற்றி அதில் வெற்றியையும் நாட்டின் வளர்ச்சியையும் அறுவடைசெய்பவர்கள் ஆசிரியர்கள். 'குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களை விட மதிப்பு மிகுந்தவர்கள். அவர்களால் மட்டுமே வாழும்கலை கற்றுத்தரப்படுகிறது' என்ற அரிஸ்டாட்டிலின் சொற்கள் ஆசிரியரின் பெருமையை சொல்கிறது.

ஒளிவிடும் சுடர்கள்தன்னை கரைத்து ஒளிவிடும் சுடரே ஆசிரியர்கள். மீனை பிடித்துத்
தருவதை விட, மீன் பிடிப்பது எப்படி எனக் கற்று தரும் தீர்க்கதரிசிகள் ஆசிரியர்கள். 'சமுதாயத்தின் தலைவிதியை நிர்ணயம் செய்பவர்கள் ஆசிரியர்கள்' என்றார் ஹெலன் கால்டிகர்டின். வில்லியம் பட்லர் ஈஸ்ட் பார்வையில் 'மாணவர்கள் மத்தியில் தீப்பொறியை உருவாக்குபவர்கள்தான் ஆசிரியர்கள்'. ஒருவர் வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆசிரியர் இருக்கிறார்
என்று சொன்னால் அது மிகையாகாது. ஆசிரியர் என்பார், ஒருவரின் பாதையை தேர்ந்தெடுத்து
கொடுப்பவர் அல்ல. தேர்ந்தெடுக்கும் பாதைக்கு வழிகாட்டி.புத்தகத்தில் உள்ளவற்றை
மட்டும் சொல்லிக் கொடுத்தால் அவர் சாதாரண ஆசிரியர். புத்தக வரிகளை உலகின் நடப்போடு
ஒப்பிட்டு காட்டினால் அவரை ஒப்பில்லா ஆசிரியர் என்பர். மாணவர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்து, அவர்களின் வாழ்வில் ஒளிதீபமாக நிலைத்து நிற்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியர்.மாணவச் சமுதாயமே!உன் கல்வியை கவிதையாக்கிவாழ்கையை வசமாக்கும்
மாபெரும் சக்தியாளர்!ஊக்கத்தை உந்திநிலையில்லா வாழ்வைநிலைபெறச் செய்பவர்!
நல்லொழுக்கம் நடமாடநாவினில் வந்திடும் நற்பேரார்!இதயம் தொட்டு இன்மை இனிதாக்க இவ்வுலகம் வந்தருளிய ஆசிரியப் பேரினத்தை நாளை ஆசிரியர் தினத்தில் வாழ்த்திடுவோம்!

-இரா.பிறையா
உதவி பேராசிரியை
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை
90258 86165

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement