Advertisement

சினிமாவில் சினிமாவை தேடாதீர்

குழந்தையை பத்து மாதங்கள் கருவறையில் சுமந்து பெற்றெடுக்கிறாள் தாய். அதுபோல தன் கதையை பத்து ஆண்டுகள் சுமந்து 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தை சமீபத்தில் திரைக்கு கொண்டு வந்துள்ளார் தேனி கோம்பையை சேர்ந்த இயக்குனர் லெனின் பாரதி. எளிய மக்களின் வாழ்வியலை இது பிரதிபலிக்கிறது. இவர் மட்டுமல்ல இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவிற்கு தேனி ஈஸ்வர் என படத்தின் ஒட்டுமொத்த கலைஞர்களும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. தியேட்டருக்கு வரும் முன்னரே சர்வதேச அளவில் இப்படம் 11 விருதுகளை குவித்துவிட்டது. உலக தரத்தில் வெளிவந்துள்ள தமிழ்படம் என கொண்டாடப்பட்டு வரும் இத்தருணத்தில் இயக்குனர் லெனின் பாரதி, 'தினமலர்' சண்டே ஸ்பெஷலுக்காக அளித்த பேட்டி

* சினிமா துறையை தேர்வு செய்ய காரணம்...அப்பாவின் சினிமா கனவு நிறைவேறாமல் போனது. என்னுடைய சிந்தனை பார்வையை எதில் காட்டமுடியும் என யோசித்தேன். அதனால் சினிமாவை தேர்வு செய்தேன்.

* தந்தை ரங்கசாமியின் பெயரை கதாநாயகனுக்கு சூட்டியது ஏன்...நன்றி கடன். அவரால் தான் என்னுள் நல்ல சிந்தனை உருவானது. பொதுதளத்தில் உள்ளவற்றை தவிர்த்து மாறுபட்ட சிந்தனைகள் உருவாக காரணமாக இருந்தார்.

* சினிமா கருத்து கூறும் ஊடகமா, பொழுதுபோக்கு ஊடகமா...பல கலைகளை உள்ளடக்கிய பெரும் கலை தான் சினிமா. அது மனதை செம்மைபடுத்துவதாக இருக்க வேண்டும். அன்பு, நாகரீகம், வளர்ச்சியை நோக்கி நகர்த்த கூடியதாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கினுள் தரமான கருத்தும் இருக்க வேண்டும். எனது படங்களில் கருத்து சொல்லவில்லை. அதை வாழ்வியலுடன் புதைத்து அப்படியே பதிவு செய்துள்ளேன்.

* சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது இல்லையேஇதற்கான தீர்வை என்னால் மட்டுமே கூறமுடியாது. மக்கள் ரசனையை பெரிய வணிகப்படங்கள் மாற்றிவிட்டன. நல்ல படங்களை தவிர்த்து நடிகர்களுக்கு பால் அபிேஷகம் செய்கிற கூட்டத்தை உருவாக்கிவிட்டனர். மக்கள் மீது தவறு இல்லை. விற்கும் படத்தை தியேட்டரில் ஓட்டுகின்றனர். அதற்கு கூட்டம் வருகிறது. ஆனால் சினிமா துறை சிறிய படங்களை நம்பி தான் உள்ளது.

* பெரும் வணிகசந்தையான சினிமாவில், உங்களை போன்ற படைப்பாளர்களால் தொடர்ந்து படம் இயக்க முடியுமா..கண்டிப்பாக முடியும். இப்படத்திற்கு நீண்ட காத்திருப்புடன் மக்களின் ஆதரவு இருக்கும் என நம்பினேன். மக்களிடம் உண்மையாக நல்ல கதையம்சம் கொண்ட படத்தை கொடுத்தால் ரசிப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


* இப்படத்தை தியேட்டர் மூலமாக அனைவரிடமும் கொண்டு சேர்த்துவிட்டீர்களா..படத்திற்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. முதல் நாள் ஒரு காட்சி மட்டுமே திரையிடப்பட்டது. மக்கள் அதிகமாக வரத்துவங்கியதால் காட்சிகளும் அதிகரித்தன, தியேட்டர்களும் அதிகமாகின. உண்மையான படம் அனைவரிடமும் போய் சேர்ந்துவிடும்.

* படத்தில் சிலரை தவிர அனைவரும் புதுமுகங்களாக உள்ளனரே...படத்தின் கதைக்கு, கதை களத்தை சார்ந்தவர்களே தேவைப்பட்டனர். அதனால் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதி மக்களையே நடிக்க வைத்தோம்.

* நல்ல சினிமா எடுக்க காத்திருக்கும் நாளைய இயக்குனர்களுக்கு கூற விரும்புவது...சினிமாவில் சினிமாவை தேடக்கூடாது. தொழில்நுட்பங்களை மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும். கதை, திரைக்கதையை மக்களின் வாழ்க்கையில் இருந்து எடுத்து கொள்ள வேண்டும்.

இவரை பாராட்ட twitter:leninbharathi1

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement