Advertisement

காங்., கனவு பலிக்குமா?

வரும், 2019, மார்ச்- - ஏப்ரலில், பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், அதற்கு முன்பே, பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலை நடத்த முயற்சிப்பதாக, எதிர்க் கட்சிகள் சொல்லி வந்தன. சமீபத்தில், பா.ஜ., முதல்வர்களை டில்லிக்கு அழைத்திருந்தார் மோடி. தேர்தல் முன் கூட்டியே வருவது குறித்து பிரதமர் பேசுவார் என முதல்வர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், அதைப் பற்றியே மோடி பேசவில்லை. எனவே, முன்னதாகவே தேர்தல் கிடையாது என்பது தெளிவாகி விட்டது. ஆனால், ஒரு சுவாரஸ்யமான விஷயம். - ஆந்திரா முதல்வர், சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடிக்கு எதிரியாகிவிட்டாலும், மோடியுடன், அண்டை மாநிலமான தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ் சேர்ந்து விட்டார். இந்த மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல், பார்லி தேர்தலோடு நடத்த வேண்டும். ஆனால், டிசம்பர் மாதத்திலேயே, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களோடு தெலுங்கானாவிற்கும் தேர்தல் நடத்த ஆசைப்
பட்டார், ராவ். மோடியும் இதற்கு ஒப்புக் கொண்டாராம். இதனால் தெலுங்கானாவிற்கு முன்னதாகவே தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது. அடுத்த வருட தேர்தலுக்கான பிரசாரம் இப்போதே ஆரம்பித்து விட்டது. பா.ஜ.,வும், காங்கிரசும் களத்தில் இறங்கி வேலைகளைத் துவங்கிவிட்டன. பா.ஜ., முதல்வர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர், 'டிசம்பர் மாதத்திற்குள் மக்களுக்கு பயன் தரக் கூடிய அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்' என உத்தரவிட்டு
உள்ளாராம். ஏழைகளுக்கு வீடு, சமையல் வாயு, பயிர் காப்பீட்டு திட்டம் என பிரதமர் அறிவித்திருந்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பது மோடியின் விருப்பம். கட்சித் தலைவர் அமித் ஷா மாநில வாரியாக புள்ளி விவரங்களைச் சேர்த்துள்ளார். எங்கெங்கு கட்சிக்கு பிரச்னை வரும்; அதை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக திட்டங்களை தயாரித்துள்ளார். இதற்கு, இந்த புள்ளி விவரங்கள் மிகவும் உபயோகமாக இருக்கிறதாம். இதற்கென ஒரு தனி டீம் வேலை செய்து வருகிறதாம். இன்னொரு பக்கம், காங்கிரஸ் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. எப்படியாவது இந்த முறை மோடி பிரதமராவதைத் தடுக்க வேண்டும் என்பது ஒன்று மட்டுமே காங்கிரசின் குறிக்கோள்.தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை; வேறு யாராவது பிரதமர் பதவியில் அமரட்டும்; மோடி வரக்கூடாது என்கின்றனர், காங்., மூத்த தலைவர்கள். இதற்காக பல மாநிலங்களில் கூட்டணி அமைப்பது; பா.ஜ., அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்வது என திட்டமிட்டு, காங்கிரஸ் செயல்பட்டு
வருகிறது. 'தேர்தலை மனதில் வைத்து, ராகுல் தன் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார்; தினமும் அவர், பா.ஜ.,வை விமர்சித்துக் கொண்டே இருப்பார்; போர் விமான ஊழல் விவகாரத்தை நாங்கள் விடப் போவதில்லை; ராகுலுக்கு பதில் சொல்வதிலேயே, பா.ஜ., நேரம் செலவிட வேண்டும்' என்கின்றனர், காங்கிரசார். 'பா.ஜ., தலைவர்கள் தினமும் ராகுலின் விமர்சனத்திற்கு பதில் சொல்லி வருகின்றனர். இதனால் தினமும் ராகுல் செய்திகளில் வருகிறார்; இது மிகப் பெரிய இலவச விளம்பரம்; எங்களுடைய திட்டத்தில், பா.ஜ.,வை சிக்க வைத்துவிட்டோம்' என காங்கிரசார் பெருமைப்படுகின்றனர்.'பா.ஜ.,விற்கு இப்போதுள்ள பெரும்பான்மை வரும் தேர்தலில் கிடைக்காது' என பலவித தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன; மோடி பதவியை தக்க வைத்துக் கொள்வாரா, அல்லது காங்கிரசின் கனவு நிறைவேறுமா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

தமிழக கட்சிகள் மோதல்!

சந்தில் சிந்து பாடுவது என்பது தமிழக அரசியல் கட்சிகளுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். எந்த மேடையில் சான்ஸ் கிடைத்தாலும் ஒரு கட்சி, மற்ற கட்சியை விமர்சிக்க தவறுவதில்லை. சமீபத்தில் டில்லியில் தேர்தல் ஆணையத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு, பார்லிமென்ட் தேர்தல் நடத்துவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க. மற்றும், தே.மு.தி.க., இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன. அதிமுக சார்பாக தம்பி துரை பேசினார்.பின், தே.மு.தி.க., சார்பில் வழக்கறிஞர், ஜி.எஸ்.மணி
பேசினார்.அப்போது, 'தமிழகத்தில் தேர்தல் என்றாலே பணம்தான். ஆளும் கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியும் வாக்களர்களுக்கு பண பட்டுவாடா செய்கின்றனர். சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலிலும் இதைப் பார்க்க முடிந்தது; இப்படி இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டு பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர்' என அவர் பேசினார். உடனே, தம்பித்துரை எழுந்து கடுமையாக எதிர்த்தார். தனிப்பட்ட ஒரு கட்சியைப் பற்றி இங்கே பேசக் கூடாது; உங்கள் கட்சி கருத்தை சொல்லி விட்டுப் போங்கள்; அதை விட்டு ஒரு கட்சி மீது குற்றம் சாட்டுவது தவறு; இப்போது நடைபெறும் கூட்டத்திற்கும் நீங்கள் பேசுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என சொன்னார் தம்பித்துரை. உடனே தலைமை தேர்தல் ஆணையர் குறுக்கிட்டு 'உங்கள் கட்சியின் கருத்தை மட்டும் சொல்லுங்கள்; மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்' என தே.மு.தி.க.,விடம் சொன்னார். அ.தி.மு.க., இப்படி எதிர்க்க, கூட்டத்தில் கலந்து கொண்ட, தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் அமைதியாக இருந்தாராம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement