Advertisement

பல மைல் தூரம் வேண்டும் ராகுலுக்கு!


காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல், ஒரு சில விஷயங்களில், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை நோக்கி பயணிப்பதை நாம் உணரலாம்.
புதிய செயற்குழுவில், அவர் தேர்வு செய்த ஜெய்ராம் ரமேஷ், சிதம்பரம் உள்ளிட்ட சிலர், தேர்தல் உத்திகளில் தலைசிறந்தவர்கள் என்பதை விட, மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக அரசியல் கருத்துகளை, அதிகம் அறிக்கையாக தருபவர்கள். ம.பி.,யில் சிந்தியா போன்ற இளம் தலைவர்கள், அடுத்த கட்ட பதவி உயர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.
அது, அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம் என்றாலும், முக்கியமாக, ம.பி., பீஹார், உ.பி., போன்ற மாநிலங்களில், காங்கிரஸ் அதிக ஓட்டுகளை அள்ள, இன்னமும் வழி காணப்படவில்லை.
குஜராத்தில் அக்கட்சி வளர்ச்சி கணிசமாக இருப்பது, கர்நாடகாவில் வளர்ச்சி கண்டிருப்பது ஆகியவற்றைக் கொண்டு, மற்ற மாநிலங்களில் முன்னுக்குவர முயற்சிக்கவில்லை.
ராகுல், தன்னை கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்பதை, ஓரளவு அவரது மத்திய அரசின் செயல்களை விமர்சிக்கும் போக்கால் நிலை நிறுத்திக் கொண்டு வருகிறார். அதே சமயம், அடுத்த தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சி
பிரதமர் வேட்பாளர் முடிவாகும் என்று பேசி, குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.
ஆனால், உலக அரங்கில் அவர் பேசும் நடைமுறைகள், இன்னமும் அப்பெரிய கட்சியின் தலைவர் என்பதை, நிலை நிறுத்த முயன்றாக தெரியவில்லை.
பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது, அத்துடன், பா.ஜ., வெற்றியில், ஆர்.எஸ்.எஸ்.,சை இணைத்து, அந்த இயக்கத்தை வசைபாடுவது, இதனால், காங்கிரஸ் மத சார்பின்மைக் கருத்து வலுப்படாது.
அதுவும், அவர் தன் ஐரோப்பிய பயணத்தில், '1984ல் நடந்த சீக்கியர் கலவரத்தில் காங்கிரசுக்கு தொடர்பில்லை' என்று பேசி விட்டு, மறு நாளே, 'வன்முறையில் பாதிக்கப்பட்டவர் மீது, எனக்கு அதிக இரக்கம் உண்டு' என்று பேசியது, அவர் ஏற்ற கட்சித் தலைமைப் பதவிக்கு மாசு ஆகும். அவரது கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், சீக்கிய கலவரம் விஷயத்தில், ராகுலை ஆதரித்து கருத்து சொல்லவில்லை. மாறாக, அச்சம்பவம் நடந்த போது, அவருக்கு, 14 வயது என்று கூறி சமாளித்தது, மிகமோசமானது.
மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், இம்மாதிரி கறைபடிந்த சம்பவங்கள் நடப்பதையும், அதை தாண்டி, நாடு ஜனநாயகப் பாதையில் செல்வதையும், காங்கிரஸ் தலைமை மறந்திருக்கிறது.
தவிரவும், அவர் தன் ெவளிநாட்டுப் பயணங்களில், தான் அடுத்த பிரதமர் என்பதை முன்னிலைப்படுத்தும் உத்தி, சரியானதாக கருதப்படலாம். ஆனால், ம.பி., - மஹாராஷ்டிரா, போன்ற பெரிய மாநிலங்களில், கட்சியின் இளம் தலைவர்களை முன்னிலைப்படுத்த தயங்கும் ராகுல், கட்சியின் பொருளாளராக, குஜராத்தின் அகமது படேலை நியமித்திருக்கிறார்.
இது, சோனியாவின் காங்கிரஸ் அணுகு முறையும், ராகுல் அணுகுமுறையும், இத்துடன் இணைந்த செயலாகும்.தற்போது, காங்கிரஸ், தன் செலவிற்காக, 100 கோடி ரூபாய் வரை பல வழிகளில் வாங்கி இருப்பதாக, பேச்சு அடிபடுகிறது. குஜராத்தை சேர்ந்த அகமது படேல், கட்சிக்கு பணம் பிரிப்பதில் மிகவும் கெட்டிக்காரர் என்ற கருத்து, நீண்ட காலமாக உள்ளதாகும்.
தேர்தல் வரும் போது, மோடியை விமர்சிக்கும் அறிக்கைகள், ஓரளவுக்கு புதிய வாக்காளர்களை கட்சிக்குள் இழுக்கும் முயற்சி என்றாலும், அதன் மூலம் நாடு முழுவதும் லோக்சபாத் தேர்தலில், இன்றைய எண்ணிக்கையான, 44 எம்.பி.,க்கள், மும்மடங்கு உயர வாய்ப்பிருக்கிறதா... என்ற விவாதம் வரவில்லை.
மாறாக, அமித் ஷா - மோடி அணி, 'பூத்' அளவில் கட்சி பணிகளை வலுப்படுத்தி, அதற்கு அடுத்தகட்ட பிரசாரத்திற்கு தயாராகி விட்டனர்.அந்தக் கோணத்தில் வாஜ்பாய் மறைவையும், அக்கட்சி தன் செல்வாக்கை நிலைநிறுத்த, பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தியது வித்தியாசமானது.
காந்தி, நேருவை தங்கள் சொத்தாக கருதிய போதும், அவர்களது ஜனநாயக உணர்வுகளை ராகுல் சிறப்பாக கையாண்டு, கட்சியுடன் இணைத்துக் கொண்டதில்லை.
இன்று பொருளாதார அணுகுமுறையில், எந்தக்கட்சி மக்களுக்கான திட்டங்களை முன்னிறுத்துகிறது என்ற பார்வை அவசியம். அந்த விஷயத்தில், மோடி அரசு, வேலைவாய்ப்புகளை தரத் தவறியதால், சமூக பதற்றங்கள் எழுகிறது என்று கூறும் ராகுல், சீக்கியர் படுகொலையை கையாண்ட விதம், அவர் அரசியலில் இன்னமும் பல மைல் துாரம் பயணித்து, அனுபவத்தைக் கைக் கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement