Advertisement

என் பாட்டு..ரசிக்கும் தாளம் போட்டு : நம்பிக்கையில் பாடகி சத்யா

தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாடப்பட்ட 'காவிய தலைவன் கலைஞர் நீயே... தமிழை அமுதாய் கொடுத்தவர் நீயே...' என்ற பாடல் முதல் முறையாக கேட்டவருக்கு கூட பலமுறை கேட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.


இதனால் சோகத்திற்கு இடையிலும் ஓர் ஆர்வம் அனைவருக்கும் தொற்றியது. அது, அந்த பாடலை பாடிய பெண் யார் என்பது தான். அசத்தும் குரல் வளம், அழகான தமிழ் உச்சரிப்பு, பிசிறில்லாத வார்த்தைகள், வரிகளுக்கு ஏற்ப ஏறி இறங்கிய மென்மை வாய்ஸ்... யார் இந்த பாடகி என்ற தேடலுக்கு பின், அந்த பாடலை பாடியவர் பின்னணி பாடகி சத்யா என தெரிந்தது.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் நம்முடன்...


சொந்த ஊர் திண்டுக்கல். தற்போது சென்னையில் உள்ளேன். நடிகர் ராஜ்கிரணின் ராசாவின் மனசிலே... ராமராஜனின் தங்கமான ராசா உட்பட பல சினிமாக்களில் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர் நம்பிராஜன் என் அப்பா. 2000ம் ஆண்டில் சினிமா உலகில் நுழைந்தேன். 'காவியத் தலைவன்' பாடல் மூலம் பிரபலமாகிவிட்டேன். முரளி நடித்த மனுநீதி படத்தில் தேவா இசையில் 'மயிலாடும் பாறை...' என்ற பாடல் மூலம் அறிமுகம் ஆனேன். முதல் பாடல் நினைத்த அளவிற்கு 'ரீச்' ஆகவில்லை. அடுத்து பாரதிராஜாவின் கடல்பூக்கள் படத்தில் 'ஆடு மேயுதே...'
விஜய் ஆண்டனி இசையில் ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி படத்தில் 'நீ சொல்லு சொல்லு...' என இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளேன்.


சினிமா வாய்ப்பு கிடைக்காதபோது இசையமைப்பாளர் ஸ்டீபன், இசை ஆல்பம், ஆராதனை பாடல்கள் பாடுவதற்காக என்னை அழைப்பார். அதுபோல் இயக்குனர் வின்சென்ட் பல வாய்ப்புகள் கொடுத்தார். கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்காக 'எழுந்து வா' என்ற பெயரில் உற்சாகமாக ஒரு பாடல் பாடுவதற்காக ஸ்டீபன் அழைத்தார்.
இதற்காக கருணாநிதி திரைக்கதையில் 'மறக்க முடியுமா' படத்தில் ராமமூர்த்தி இசையில் சுசீலா பாடிய 'காகித ஓடம்...' பாடலை வேறு வரிகள் போட்டு பாடிய பாட்டு ரெடியானது. ஆனால் அவர் இறந்த பின் அதே மெட்டில் அஞ்சலி செலுத்தும் விதமாக சோகமாக அந்த பாடலை மாற்றி வெளியிட்டோம். சினிமாவில் பாடியபோது கிடைக்காத 'ரீச்' இந்த பாடல் மூலம் கிடைத்தது.


இருந்தாலும் சினிமா பாடல்கள் மூலம் சாதிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இளைஞர்களை 1980களில் இளையராஜா பாடல்கள் கட்டிப்போட்டன. அவரது தீவிர ரசிகை நான். அவரது இசையில் ஜென்சி, ஜானகி, சித்ரா, சுவர்ணலதா பாடிய 'மெலடி' பாடல்களை வரிவிடாமல் 'பீல்' பண்ணி பாடி ரசிப்பேன். அதன் மூலம் நான் தற்போது பாடும்போது பாடல் வரிகளுக்கு ஏற்ப என்னால் இயற்கையாகவே 'பீல்' பண்ணி பாட முடிகிறது. இத்துறையில் இதுவரை நான் முயற்சித்தும் எனக்கான ஒரு இடம் இன்னும் கிடைத்தபாடில்லை. 'காவியத் தலைவன்' பாடலுக்கு பின் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இளையராஜா, ரஹ்மான் இசையில் பாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நேரம், வாய்ப்புக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். இசை உலகம் எனக்கும் கை கொடுத்து துாக்கிவிடும் என்கிறார், இந்த காவிய நாயகி சத்யா.

இவரை 97910 20869 ல் தொடர்பு கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    தலீவரு கண்ணுல படலையா ??

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement