Advertisement

மகிழ்ச்சி இல்லாத கேரள ஓண விழா!

கேரள மாநிலம், அளவு கடந்த மழை பாதிப்பில் சிக்குண்டு, சிதிலமாகி விட்டது. மீட்புப் பணி அசுர வேகத்தில் நடந்த போதும், கேரள அரசு அதிக அக்கறை காட்டினாலும், பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில், ஒவ்வொரு தனிநபரும் அடைந்த பாதிப்பு பற்றிய முழுவிபரம் சேகரிக்க, பல நாட்கள் ஆகும்.

அதிக அளவு மலைப்பகுதி உள்ள இடங்களைக் கொண்டிருப்பதால், பசுமை எழிலுடன் உள்ள மாநிலம். தமிழகம் போல, நீண்ட சமவெளிப்பரப்பு இல்லை. ஆனாலும், ஒரேயடியாக பெய்த இம்மழை, தமிழகத்தை வறுத்தெடுத்த, 'வர்தா' புயலை விட, அதற்கு முன்னதாக வந்த, 'சுனாமி' பாதிப்பை விட மிகவும் மோசமானது.

முன்பு, 2005ல், மும்பை நகரம் வெள்ளத்தில் சிக்கிய போது, புனேயில் உள்ள இந்திய வானியல் ஆய்வு நிபுணர்கள், இனி, இந்தியாவின் பல மாநிலங்களில், 'கிளைமேட் சேஞ்ச்' என்ற மழை அல்லது அதிக வெள்ள பாதிப்பு நிச்சயம் தொடரும் என்று எச்சரித்தனர்.அதற்குப் பின், நமது அனுபவமாக, ஒரே நாளில், 10 செ.மீ.,க்கு மேல் மழை, பருவ காலம் தாண்டி தொடர் மழை என்பது, பல பகுதிகளில் நீடிக்கிறது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலை என்பது, கேரளா, கர்நாடகா மற்றும் ஓரளவு தமிழகம் என்று, தென் மாநிலங்களில் உள்ள பெரும் அரணாகும். இயற்கைச் சீற்றங்களை தாங்கும் இங்கே உள்ள காடுகளின் வளம், கல்பாறைகள் கட்டமைப்பு ஆகியவை, அதிக மக்களை அழிவில் இருந்து காத்தன.

கேரளாவில் பாயும் பல ஆறுகளின் முடிவு எல்லை, அரபிக் கடலாக உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், இந்த ஆறுகளில் ஏற்பட்ட நீர்ப்பெருக்கு சராசரியாக, 20 சதவீதம், கடலில் கலந்து வீணாகியிருக்கிறது.இத்தடவை, சராசரியாக வழக்கத்திற்கு அதிகமாக, 60 சதவீதம் மழை, ஒரு வாரகாலத்தில் தொடர்ந்து பெய்ததும், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவும் அதிகம். வீடுகளில், 3 அடி உயரத்திற்கு அதிகமாக, சகதி நிறைந்த தண்ணீர் உட்புகுந்திருப்பதால், மக்கள் உயிர்ப்பலி, 300 என்ற எண்ணிக்கையை எட்டியது பரிதாபமானது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வீடிழந்ததில் நடிகர், நடிகையரும் அடங்குவர்.

தேசிய பேரிடர் மேலாண்மை வீரர்கள், முப்படை ராணுவத்தினர் செய்த மீட்புப் பணிகளை மறக்க முடியாது. இந்தியாவில் பேரிடர் மேலாண்மை, உலகத்தரத்திற்கு உயர்ந்திருப்பதும், மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜு, இந்த நுணுக்கத்தில் நல்ல ஆளுமை பெற்றவர் என்பதையும், இப்பணிகள் உறுதி செய்கின்றன.

பிரதமர், உள்துறை அமைச்சர், அதையும் விட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர், நேரடி விஜயம் என்பதுடன், மத்திய அரசின் அனைத்துத் துறைகளும், மீட்புப் பணியில் செயல்பட்ட விதம் வித்தியாசமானது. மீனவர்கள் இப்பணியில் ஈடுபட்டு உதவியது, அவர்களின் மனிதநேயத்தை காட்டுவதாகும். அதிலும், தேசிய நெருக்கடி நிர்வாக கமிஷன் உறுப்பினர்கள் அதிக ஆலோசனை மேற்கொண்டு, மத்திய அரசின் துறைகளை நிவாரணத்தில் முடுக்கி விட்டது சிறப்பானது.அடுத்த கட்டமாக, மீட்கப்பட்டவர்கள் நோய் பாதிப்பில் சிக்காமல் இருக்க, மத்திய சுகாதார அமைச்சர் நட்டா, மருந்துகள், அதற்கான டாக்டர் குழு அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறார்.

தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களும், முதல்வர் நிவாரண நிதிக்கு அள்ளித் தந்திருக்கின்றன. அதனால் சில லட்சங்களை, தனித்தனியாக தந்த, நடிகர், நடிகையர் செயல், அதிக விளம்பரமாக வில்லை. மத்திய அரசு இதுவரை, 600 கோடி ரூபாய் தந்து இருப்பதுடன், கேரள மக்கள் அதிகம் பணியாற்றும் குவைத், சவுதி உட்பட பல நாடுகள் உதவ முன்வந்திருக்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மட்டும், 700 கோடி ரூபாய் தர முன்வந்திருக்கிறது.கேரள மக்கள் அதிக நிதி வசதி வந்ததும், அதிக குடியிருப்புகளை மலைச்சரிவுகளில் கட்டி, சுற்றுலா மையங்களாக்கியதும், மற்றவர்களை அரிசிக்காக சார்ந்திருக்க கூடாது என்ற கருத்தில், மலைச்சரிவு பகுதிகளில் நெற்பயிர் செய்ததும், மழைக்கு அரணாக இருந்த மேற்கு தொடர்ச்சி மலையை மாற்றி விட்டது.

மேலும், இப்பாதிப்பின் முதல் கட்டமாக, மீண்டும் சாலை வசதி, மின் துண்டிப்பை சீராக்கி, நலிந்த வீடுகளை புதுப்பித்தல் என்பது, பெரிய பணியாகும். தவிரவும், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செயலிழந்த நிலை மாற, அதற்குரிய உதிரி பாகங்கள் விலை ஒரேடியாக உயரும். நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கானோர், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, கேரளாவின், இடதுசாரி முன்னணி முதல்வர், பினராயி விஜயன் என்ன செய்வார் என்பதை, இந்திய மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனிப்பர். மகாபலி மன்னன், ஓணம் திருவிழாவை மகிழ்ச்சி பொங்க காண வருவான் என்ற ஐதீகம், இத்தடவை மாறியிருப்பதும் ஒரு புதுமை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement