Advertisement

வேலைவாய்ப்புகளும் சமூக பதற்றமும்...

பொருளாதார அடிப்படைகளில் வளர்ச்சி என்ன என்பதை கண்டறிவதற்கு, பல வழிகளும், நடைமுறைகளும் உள்ளன. நம் நாட்டில், மோடி தலைமையிலான ஆட்சி, எந்த அளவு பொருளாதார வளர்ச்சியை தந்திருக்கிறது என, இப்போது அதிகம் பேசப்படுகிறது.பார்லிமென்டின் இருசபைகளிலும் சட்டங்களை உருவாக்கும், எம்.பி.,க்கள், இதை விவாதிப்பது அரிதாகிவிட்டது. 20 - 60 வயது வரை உள்ள மக்கள் தொகை, 'டிஜிட்டல் பரிவர்த்தனை'யில் நுழைய முற்பட்டிருக்கிறது. ஆனாலும், தங்களுடைய கல்வி, வேலைவாய்ப்பைத் தருமா, புதிய தொழில்களுக்கான திறனறி மேம்பாடு இருக்கிறதா என, ஆராய முற்பட்டிருக்கின்றனர். அது, சமுதாயத்தில் ஒரு வித பதற்றத்திற்கு காரணமாகிறது.நாட்டின் நலன் என்ற, மக்களின் பொருளாதார மேம்பாடு அளவுகோலை வைத்து மட்டும் அளக்கப்படும் விஷயமா வளர்ச்சி என்பதை, ஆராய வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.அதற்கேற்ப சரியான புள்ளி விபரம் மற்றும் தரவுகள், பல ஆண்டுகளாக திரட்டப்படவில்லை.பொருளாதாரம் என்பது, பல அம்சங்களை கொண்டது. அது அதிகமாக பேசப்படும்போது, 'போர்' என்ற சொல்லுக்கு இலக்கணமாகி விடும்.அதிக வேலைவாய்ப்புகள் எங்கே... என்ற கேள்வியை, யார் வேண்டுமானாலும் கேட்கலாம். நேற்றைய நிலை, இன்றைய வளர்ச்சி, நாளைய சூழ்நிலை என்பதை சேர்த்து இதைப் பார்த்தால், பல்வேறு மாநிலங்கள் கொண்ட நம் நாட்டில், பல குழப்பங்களும், பதற்றமும் மிஞ்சும்.எப்பிரச்னையாயினும், உலகளாவிய பார்வை, மக்கள் தொகை மாற்றத்துடன், புலம் பெயரும் போக்கு, அத்துடன் தொழில்நுட்ப ஆதிக்க வளர்ச்சி ஆகியவை, இன்றுள்ள வேலைவாய்ப்பில் அதிகமாக நுழைந்திருக்கிறது. அதனால், உருக்கு மற்றும் அடிப்படைத் தொழில்களில், ஆள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஐ.டி., தொழில் நுட்பத்திலும், 'ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்' போன்றவை, முக்கிய கருது பொருளாகி விட்டது.நடப்பாண்டில், மொத்த வளர்ச்சி போகிற திசையைப் பார்க்கும் போது, அது வீழ்ச்சிக்கு வித்திடவில்லை. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்திருப்பது, தவிர்க்க முடியாதது. இது, உலகளாவிய பொருளாதாரத்துடன் தொடர்பு கொண்ட விஷயம் என்பதால் பிரச்னையாகிறது: ஆனால், மொத்த பணவீக்கம் என்பது அதிகரிக்காமல் இருப்பதால், விலைவாசி விண்ணை முட்டும்
என்பதற்கு பின்னணி இல்லை.எதிர்க்கட்சிகள் இன்னமும், ஜி.எஸ்.டி., வரியை குறை கூறினாலும், அதற்கான காரணங்களை கூறத் தவறுகின்றன.சிறு மற்றும் குறு தொழில்கள், இந்த வரிவிதிப்பில் பாதிக்கப்படாமல் இருக்க, அமைச்சர்கள் குழு ஆராய்ந்து பரிந்துரை செய்ய, முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்டு வர்த்தகம், ஐந்து கோடி ரூபாய் வரை இருக்கும் சிறுதொழில்துறையினரின் பல பிரச்னைகளுக்கு, இதனால் தீர்வு வரும். பிரச்னைகளை மாநிலங்களுடன் பேசி முடிவு எடுக்கும் வழக்கம் இருப்பதால், இது, 'எளிய வரி' என்று அழைக்கப்படும் காலம், தொலைவில் இல்லை. வருமான வரி கட்டும் தனிநபர் எண்ணிக்கை அதிகரிக்கும் காலமும் வந்திருக்கிறது.முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர், சி.ரங்கராஜன், 'ஜி.எஸ்.டி.,யில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து வருவதாயும், அதன் அடுத்த கட்ட ஆலோசனைகள் மூலம் முழுமையாகச் சீர்படும்' என்கிறார். ஒரு ஆண்டு நிறைவான நிலையில், அந்த வரிவிதிப்பால் மாநிலங்கள் பாதிக்கப் படவில்லை என்பதை சுட்டிக்காட்டும் தகவல் இது. மிகப்பெரும், 370 நிறுவனங்கள் வளர்ச்சியில் முன்னிற்கின்றன.ரயில்வேத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆயிரக்கணக்கில் ஆள் எடுக்க, 'ஆன்லைன்' நடைமுறை அமல், சரக்குப் போக்குவரத்தில் முன்னணி ஆகியவை, உருப்படியான பணிகள் என்பதும், பலரது கருத்தாகும். ஆனால், நோபல் பரிசு பெற்ற, அமர்தியாசென் போன்றவர்கள், அதிக குறை சொல்லும் முன், பல தகவல்களை திரட்டினரா... என்பதை, யார் கேட்க முடியும்?மேலும், பருவகால கணிப்புகள் துல்லியமாக மாறிவருவதும், விவசாயிகள் தங்கள் உத்திகளை மாற்றி அதிக உற்பத்தி செய்வதும், இன்றைய சூழ்நிலையில் காணப்படுகின்றன. பருப்பு வகைகள் விலை ஏற்றம் என்பது, மறந்து போன விஷயம். இப்பருப்பு விளைச்சலுக்கு தரப்படும் அதிகபட்ச விலைக்கு ஒப்பாக, வர்த்தகர்கள் வாங்க மறுத்தால், அதனால் ஏற்படும் வித்தியாச இழப்புத் தொகையை தந்து, ம.பி., அரசு வாங்குகிறது. கையிருப்பு பருப்புகளை, மத்திய அரசு, சலுகை விலையில் மாநிலங்களுக்கு விற்கிறது.இவை ஒரு புறம் இருக்க, வங்கியில் வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றிய சிலர், இந்தியாவின் நீதிமன்றங்களில் ஏறி தகவல் கூறும்போது, பொருளாதாரத் தடங்கல்கள் குறித்த பல தகவல்கள் வரும்.ஆகவே, பொருளாதார வளர்ச்சி இருக்கிறதா என்பதை எளிதாக கண்டறிய, மாநில அரசும், மத்திய அரசும் , மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement