Advertisement

புகைப்பட கண்ணால் நேசியுங்கள்!

பிற உயிரினங்களில் இருந்து மனிதனை தனித்துக் காட்டுவது கலை நுட்பம். உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங் கிணைத்து கற்பனை வளத்தை ஊக்குவிப்பது கலை. மிகப்பழமையான கலைகள் யாவும் காட்சிப் படங்களையோ, காட்சிப் பொருட்களையோ சார்ந்த காட்சிக்கலையாக உள்ளன. இவை மனதை ஈர்க்கும்; வியக்க வைக்கும்; வேதனைப்பட வைக்கும். இந்த அரிய பணியினை செய்து கொண்டிருக்கிறது புகைப்படக்கலை.உலகம் முழுவதும் புகைப்படக்கலைத் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு வருகிறது. நம் நாட்டில் அது கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் தான் புகைப்படக்கலை வளர்ந்துஇருக்க வேண்டும். காரணம், இந்த தேசத்தில் வனவிலங்கு வாழ்க்கை, இயற்கை, ஆன்மிகம், பாலைவனம் என இயற்கை வளமும், வறட்சியுமாக பரந்து கிடக்கிறது. இதன் காரணமாகவே வெளிநாடுகளில் இருந்து நிறைய புகைப்படக் கலைஞர்கள் கேமராவும் கையுமாக இந்தியாவுக்கு படையெடுக்கின்றனர்.
புகைப்படத்தின் சேவை : புகைப்பட கலைஞர்கள் எத்தகையவர்கள் என்று பார்ப்போம். ஆப்ரிக்க குழந்தையை கழுகு கொத்துவதற்கு வன்மத்துடன் நிற்கும் புகைப்படத்தை எடுத்தவர் புலிட்சர் விருது வாங்கியவர். பிற்காலத்தில் அப்புகைப்படம் எடுக்கும்நேரத்தில் குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே, என குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார். போபால் விஷவாயு படுகொலையில் ரகுராய் முதலாளித்துவ கொடூரங்களை கருப்பு வெள்ளையாக பதிவு செய்தவர். இதில் சிறுபிஞ்சின் சடலத்தை மண்ணைப்போட்டு மூடுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் உலகம் முழுவதையும் கவனிக்க வைத்தது.1972ல் நிக் வுட் அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் மீது போட்ட நாப்பம் குண்டுகளின் கொடூரத்தை கிம் புக்கின் (அப்போது ஒன்பது வயது சிறுமி) நிர்வாணப் புகைப்படத்தின் மூலமாக கொண்டு வந்தார் நிக் வுட். ஈராக் புகைப்படக் கலைஞர் ெஹன்னத் ஜெர்கே, அமெரிக்கா ராக்கை நிர்மூலமாக்கியதிற்கு சாட்சியாக ஈராக்கிய சிப்பாயின் கருகிப்போன மண்டையை புகைப்படமாக எடுத்திருந்தார்.
இந்தியருக்கு விருதுகள் : மிகச் சமீபத்தில் ஓரி நுார், கார்டியன் இதழில் மேற்குக் கடற்கரையில் இஸ்ரேலின் அத்துமீறலை தெரிந்து கொள்ள வேண்டுமானால் கேமராவை ரோல் செய்யுங்கள் என்று அறிவித்திருக்கிறார். ஏனெனில் பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அங்கு எண்ணற்றப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிரியாவில் இருந்து புகலிடம் தேடி கடல் வழியாகப் பயணப்பட்ட அயிலான் என்ற சிறுவன், கடலில் மூழ்கி உயிரிழந்தான். சிரியா அகதிகள் பிரச்னையில் மேற்குலகின் கரிசனத்தைக் கோரியது அயிலானின் மரணம். அய்லான் குர்தியை புகைப்படம் எடுத்தவர், 'தான் அழுதது' போன்று இந்த உலகத்தின் பிற மக்களும் இதன் கொடூரத்தை உணர வேண்டும் என பேட்டியளித்தார். முன்பெல்லாம் புலிட்சர் போன்ற புகைப்பட கலைக்கும் வழங்கப்படும் உயர்ந்த பரிசுகளை வெளிநாட்டவர்கள் பெற்று வந்தார்கள். இந்தாண்டு இந்தியாவில் உள்ள அட்னன் கபிடி மற்றும் டேனிஷ் சிந்திக் போன்றவர்களுக்கு கிடைத்துஉள்ளது. கடந்த ஆண்டுக்கான 2017 'புலிட்சர் பிரேக்கிங் நியூஸ் போட்டோகிராபி விருது' டெய்லி ப்ராக்ரஸ் பத்திரிகையின் ரேயான் கில்லிக்கு வழங்கப்பட்டுள்ளது.
முகத்தில் புதைந்த முகம் : அமெரிக்காவில் சார்லட்டேஸ்வில்லி நகரில் இனவெறிக்கு எதிரான போராட்டம் நடைபெற்றபோது,ஒருவர் காருடன் கூட்டத்திற்குள் பாய்ந்தார். மக்கள் துாக்கி எறியப்பட்டனர். இந்தக் காட்சியை ரேயான் கில்லி படம் எடுத்திருந்தார். தி டெய்லி ப்ராக்ரஸ் பத்திரிகைக்காக ரேயான் கில்லியின் கடைசி அசைன்மென்டும் இதுதான். தற்போது ப்ரீலான்ஸர் புகைப்படக் கலைஞராக அவர் பணியாற்றுகிறார். 2017ம் ஆண்டு செப்.,14ல் மியான்மரில் இருந்து வங்க தேசத்துக்குத் தப்பி வந்த ரோகிங்யா மக்களின் படகு டெக்னாப் நகர கடற்கரையை நெருங்குகையில் கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் ஒருவரின் கைக்குழந்தை தண்ணீருக்குள் மூழ்கி இறந்து விடும். கைக்குழந்தையை முகத்தின் மீது முகம் வைத்து, அந்தத்தாய் அழும் காட்சியை ராய்ட்டர்ஸ் நிறுவனப் புகைப்படக் கலைஞர் பதிவு செய்தார். இந்தப் புகைப்படமும் பியூச்சர் போட்டோகிராபி பிரிவில் புலிட்சர் விருது பெற்றுஉள்ளது. இவையெல்லாம் நம் புகைப்படத் திறனை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
புரட்டிப்போடும் தொழில்நுட்பம் : இன்றைக்கு எல்லோருடைய கைகளிலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.இது அலைபேசி மூலம் கிடைக்கிறது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பலவற்றில் கோடிக்கணக்கான புகைப்படங்கள் நாள்தோறும் பதிவேற்றப்படுகின்றன.இன்றைக்கு மானுடவியலாளர்கள்,சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படுகிற புகைப்படங்கள் ஒரு மனிதனின் ஆளுமையை அளவிடும் கருவியாக இருக்கின்றன என்று வாதிடுகின்றனர். படம் பார்த்து கதை சொல்வார்கள்.ஆனால் படம் பார்த்துபொருட்கள் வாங்குகிறோம். அந்தளவுக்கு புகைப்படம் பொருட்களை வாங்கத் துாண்டுகிறது. இப்போதெல்லாம் மணமகளையோ, மணமகனையோ போட்டோவை பார்த்து உறுதி செய்வதில்லை காரணம், அதன் தொழில்நுட்பம் கருப்பாக இருக்கும் நபரைக்கூட தகதகவென ஜொலிக்க வைத்து விடுவார்கள். புகைப்படம் எடுப்பது ஒரு கலை. அதை கற்றுக் கொள்வது எளிது. ஆனால் அதற்கு நாம் நிறைய மெனக்கெட வேண்டும். பொறுமை என்னும் மூலதனத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.
கேமராவிற்கு பிடித்த நேரம் : விலைஉயர்ந்த கேமராவில் மட்டுமே சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம் என்பது ஓரளவுக்குத்தான் உண்மை. சுவையான சமையலுக்கு சமைப்பவரின் திறமைதான் காரணமே தவிர, விலை உயர்ந்த அடுப்பு இல்லை. விலை உயர்ந்த கேமராக்கள் சில அம்சங்களில் மட்டுமே தேவைப்படும். அதனால் திறமை இருந்தால் சிறந்த படங்களை எந்தக் கேமராவிலும் எடுக்க முடியும். அதற்கு உங்களின் திறமையை வளர்க்க வேண்டும். கண்டிப்பாக தினமும் உங்கள் கேமராவுடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான நேரத்தை செலவிடுங்கள். முடியவில்லையா, வார இறுதியாலாவது சிறந்த புகைப்படங்களை எடுக்க கிளம்பி விடுங்கள். அதைவிட அதி முக்கியமானது புகைப்படம் எடுப்பதில் புதிய யுத்திகளை முயற்சி செய்வது. அதற்காக நீங்கள் பயணியுங்கள். தேடல் உங்களிடம் குடிகொண்டிருக்கட்டும். அதிகாலை, அந்தி மாலை வேளை போட்டோகிராபிக்கு பிடித்தமான நேரம். அழிந்து வரும் கலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.உங்கள் கேமரா அதனை சிறைப்பிடிக்கட்டும். அது எதிர்காலத்துக்கான சிறந்த பதிவு. கூடுதலாக புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.1983ல் டில்லியில் துவங்கப்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் போட்டோகிராபிக் கவுன்சில்,1952ல் தொடங்கப்பட்ட பெடரேஷன் ஆப் இந்தியன் போட்டோகிராபிக் ஆகிய அமைப்புகள் சிறந்த போட்டோக்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. சர்வதேச நிலையில் விருதும், பரிசும் பெறுவதற்கான பயிற்சியையும் அளித்து வருகிறது. இன்றைக்கு திருமண போட்டோகிராபி, இன்டஸ்டிரியல் போட்டோகிராபி, பேஷன் போட்டோகிராபி, அட்வர்டைசிங் போட்டோகிராபி ஆகியவை பிரபலமாகியிருக்கின்றன.
இயற்கையின் வழியில் : உலகை ஒருங்கிணைக்க போட்டோகிராபி உன்னத பயணம் மேற்கொள்கிறது என்றால் அது மிகையாகாது.
- முனைவர் பெ.சுகுமார்புகைப்பட நிபுணர்மதுரை94430 75995

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement