Advertisement

எப்போது யானை ஓடத் துவங்கும்?

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பிரதமராக மோடி, சுதந்திர தினத்தில் பேசிய நீண்ட உரை, மக்களிடம் எந்த அளவு பிரதிபலிக்கும் என்பதை வரும் காலம் உணர்த்தும்.அவர், கட்சித் தலைவராக பேசியிருக்கிறார் எனவும் நாட்டின் பிரதமராக பேசவில்லை என்பதை காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் தெரிவித்திருக்கின்றன. ஆனால் சுதந்திர தின உரை என்பது, எக்கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அவர்களது சாதனைகளை சொல்ல வேண்டிய கட்டாயத்தை கொண்டிருக்கிற வழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிறிய கட்சிகளின் தலைவராக இருந்த குஜ்ரால், தேவகவுடா ஆகியோர் கூட இதற்கு விதிவிலக்கல்ல.இந்தியாவை யானையுடன் ஒப்பிடுவது வழக்கம். யானை மிகப்பெரும் உருவம் கொண்டது என்றாலும், அது நடப்பதே அதிக வேகம் கொண்டது; அது, 40 அல்லது, 50 கி.மீ., வேகத்தில் ஓடத்துவங்கினால், காடு கொள்ளாது.முன்பு ஒருகாலத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் ஜலான் இந்திய பொருளாதாரம், 'யானை போல படுத்திருக்கிறது; அது எழுந்து நின்றாலே மாற்றம் வரும்' என கூறினார்.இன்று, மோடியும், இந்திய யானை எழுந்து நடப்பதாக கூறியிருக்கிறார். எந்த அடிப்படையில், இந்திய யானை நடக்கிறது என்பதை, பொருளாதார அணுகுமுறையில் சிந்திக்க வேண்டியதாகும். எல்லாரும் அமர நிலையை எய்தும் நிலை இந்தியா விற்கு வரும் என்ற பாரதியார் வாக்கு, உலகிற்கு இந்தியா, 'அகிம்சை' வழியைக் காட்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது.இதுவரை நாட்டை ஆண்டவர்கள், நாட்டை எதிர்பார்த்த அளவு வளர்த்தனரா, அதை மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடாக உலக அரங்கு, ஏற்கச் செய்தனரா என்ற கேள்வி எழுகிறது.முன்னாள் பிரதமரும், பாரத ரத்னாவுமான வாஜ்பாய் மறைந்ததும், அவர் நிறைய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார் என்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்து, பா.ஜ., தலைமையில் ஆட்சி என்பதை நிதர்சனம் ஆக்கினார் அவர். அடுத்தபடியாக, மோடி அக்கட்சியின் தனிப்பெரும் தலைவராக இன்று இருக்கிறார்.இதனால், நாட்டின் சீர்திருத்த பணிகள் சூடு பிடித்து செயலாக்கம் நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு அரசின் ஐந்தாண்டு கால அனுபவத்தில் எத்தனை சட்டங்கள், அல்லது அவற்றை அனுசரிக்கும் நடைமுறை அமலாகி பலன் ஏற்பட்டிருக்கிறது? அது கடைசி மகன் அல்லது மகள் வரை சென்றடைந்திருக்கிறதா என்பதை வைத்தே வளர்ச்சியின் பாதை புரியும்.இந்த, ஐந்து ஆண்டுகளில் அரசில் இருந்த, 'சிவப்புநாடா' முறை குறைந்திருக்கிறது என்பதின் அடையாளம், உலகின், ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இதற்கு மோடி அரசின் சில துணிச்சல் முடிவுகள் காரணமாகும். ஊழல் செய்பவர்கள், லெட்டர் பேடு கம்பெனிகள் மூலம் கருப்புப் பணம் குவிப்பவர்கள் பலர் பிடிபட்ட செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.நாட்டில், 10 கோடி குடும்பங்கள் பயன்படும், 'சுகாதார நலத்திட்டம்' அடுத்த மாதம், 25ம் தேதி உதயமாகிறது எனவும் அறிவித்திருக்கிறார். இத்திட்டத்திற்கு, 'பிரதமர் ஜன ஆரோக்கிய திட்டம்' என்று பெயர்.ஏற்கனவே, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இதே மாதிரியான திட்டம் இருந்தாலும், ஒரு குடும்பத்திற்கு மருத்துவச் செலவுக்கு, ஆண்டு ஒன்றுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் கிடைப்பது அரிது. தவிரவும் அரசு மருத்துவமனைகள், மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் எளிதாக மருத்துவ வசதி பெறும் நடைமுறையை ஏற்படுத்தும் பட்சத்தில், இந்த அரசின் முக்கியத் திட்டமாக இது அமையும்.இதுவரை சமூக பாதுகாப்பு திட்டங்கள் பெரிய அளவில் இல்லாத சூழ்நிலையில், 130 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில், மாநிலங்களுடன் சேர்ந்து, 'ஆயுஷ்மான் பாரத்' என்ற இத்திட்ட அமலாக்கத்தின் போது பல விஷயங்கள் தெளிவாகும்.இதய நோய்க்கான, 'ஸ்டென்ட்' மற்றும் சில முக்கிய மருந்து விலைகளை மத்திய அரசு குறைத்திருந்தும், அது இன்னமும் முழுவீச்சில் மக்களை சென்றடையவில்லை.இப்புதிய திட்டத்தின், முன்னோடி அமலாக்கத்தின் மூலம் இதன் குறைநிறைகள் அலசப்படும். மத்திய அரசின் மொத்த வளர்ச்சி சதவீதத்தில் அதிகபட்சமாக, இதற்கு செலவழிக்க வேண்டி வரும்.மாநில அரசுகளும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் போது, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது நிரந்தரமாக, 8 சதவீதத்தை தாண்டினால் ஒழிய அமலாக்கம் எளிதல்ல. வருமான வரி கட்டுவோரை பாராட்டிய பிரதமர் மோடி, அச்செயல் காரணமாக ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டங்கள் அமலாகிறது என தெரிவித்த கருத்து சிறப்பானது. ஆனாலும், அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அதிக பயன்களைத் தரும் சீர்திருத்தங்களை மோடி அறிவித்திருப்பது, அடுத்த தேர்தலிலும், பா.ஜ., ஆட்சி வரும் என்பதை குறிப்பால் உணர்த்துவதாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement