Advertisement

கருணாநிதியுடன் யோகாவின் 45 வருட அனுபவங்கள்திமுக தலைவர் கருணாநிதி இறந்த பிறகு அவரைப்பற்றிய நிறைய கட்டுரைகள் புகைப்படங்கள் ஊடகங்களில் உலா வருகிறது.

இதில் பெரும்பாலான புகைப்படங்கள் புகைப்படக்கலைஞர் யோகாவினுடையது.

புகைப்படக்கலைஞர்களில் கலைமாமணி விருது பெற்றவர் இவர் ஒருவரே.சென்னையில் பல பிரபலங்களுக்கு பிரியமான புகைப்படக்கலைஞராக இப்போதும் இருப்பவர்.

திமுக தலைவர் கருணாநிதியின் ஆஸ்தான புகைப்படக்கலைஞராக இருந்து கடந்த 45 ஆண்டுகளாக அவரை படம் எடுத்தவர் இவர் ஒருவர்தான்.

சென்னையில் டைடல் பார்க் வருவதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி அது கம்பீரமாக கட்டப்பட்டு வருவதை பார்வையிட வந்தவரை பலரும் படம் எடுக்க எதுவுமே அவருக்கு திருப்தி தரவி்ல்லை, படம் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவருக்கு சொல்லத்தெரியவில்லை. ‛யோகாவை வரச்சொல் எல்லாம் சரியாக இருக்கும்' என்று சொல்லிவிட்டு மீண்டும் அங்கே சென்றார். அங்கே அவருக்கு பாதுகாப்பிற்கான தலைக்கவசம் அணிவித்து கட்டிடத்தின் பின்னனி தெரியும்படி எடுத்த படத்தை பார்த்துவிட்டு இதைத்தான் எதிர்பார்த்தேன் பாணியில் பாராட்டிவிட்டு சென்றார்.

குடும்பம் குழந்தை என்பதைத்தாண்டி வீட்டில் வளரும் நாய்கள் மீதும் அதிகம் பாசம் கொண்டவர் அதிலும் கருப்பன் மீது மிகவும் பாசம் குழந்தையை போல அதனுடன் கொஞ்சி விளையாடுவார்.

சாமி படங்கள் வைப்பதற்கான இடத்தில் தனது தாய் தந்தையின் படத்தை வைத்திருப்பார் எப்போதும் அவரின் முதல் வணக்கம் இவர்களுக்குதான்.

கிராமத்தில் இப்போதும் அணியக்கூடிய காடா பனியன் என்று சொல்லக்கூடிய பனியனையும் லுங்கியும் அணிந்து கொண்டு படுக்கையில் உட்கார்ந்து கொண்டுதான் எப்போதும் எழுதுவார் வீட்டில் மிகப்பெரிய நுாலகம் உண்டு அந்த நுாலகத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகமும் அதன் பக்கங்களும் கூட அவருக்கு அத்துப்படி அந்தளவிற்கு அந்த புத்தகங்களை வாசித்தது மட்டுமி்ன்றி நேசிக்கவும் செய்தார்.

கோபாலபுரம் வீட்டில் இருந்து ஒரு முறை வெளியே வரும்போது இரு கைகளிலும் துண்டை பிடித்தபடி சிரித்தபடி வந்தாா் அப்போது எடுத்த படம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அதையே அரசாங்க படமாக அனைவருக்கும் அனுப்பிவைத்தார்.

பொதுவாக தான் சம்பந்தப்பட்ட படங்களை ஏனோ தானோ என்று பார்க்காமல் மிகவும் ஆர்வமாக பார்த்து ரசிப்பார் எடுத்த படங்களின் ஆல்பங்களைப் பார்த்துவிட்டு உடனே கூப்பிட்டு பாராட்டுவார்.

அவரை தாடியுடன் பார்ப்பது அரிதிலும் அரிது எப்போதும் தனது தோற்றத்தை சீர்பட வைத்துக்கொள்வார் அதே போல புகைப்படக்கலைஞர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்வார்.மிகவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதால் இவரது விழாவிற்கு சென்றால் மேடையில் பிரமுகர்கள் சிரிக்கும் படம் நிறையவே கிடைக்கும் அதே போல இவரும் வாய்விட்டு சிரித்து தனது மகிழ்ச்சியை நமது கேமிரா வரை பாய்ச்சுவார்.

மேற்கண்ட தகவலைச் சொன்ன யோகா,கருணாநிதியை பல ஆண்டுகளாக பல்வேறு கோணங்களில் எடுத்த படங்களை தொகுத்து ஒரு புத்தகமாக கலைஞர் 77 என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

சிரமப்பட்டு எடுத்த படங்கள் அனைத்தையும் மக்களுக்கே அர்ப்பணித்தார் அதாவது யார் வேண்டுமானாலும் புத்தகங்களில் உள்ள படங்களை முன் அனுமதியின்றி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் அது.இப்படிச் சொன்ன படைப்பாளிகள் அரிதிலும் அரிது.

அந்த புத்தகத்தில் உள்ள படங்கள்தான் இப்போதுபெரும்பாலான ஊடகங்களில் உலா வருகிறது,இந்த படங்களை பார்த்துவிட்டு புகைப்படக்கலைஞர் யோகாவிற்கு நன்றி சொல்ல விரும்பினாலோ அல்லது அவர் தொகுத்த கலைஞர் 77 என்ற புத்தகம் தேவை என்றாலோ அவரைத்தொடர்பு கொள்ளவும் எண்:9841116426.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement