Advertisement

ஆனந்த சுதந்திரம்

தந்திரம் எனது பிறப்புரிமை அதை நாம் அடைந்தே தீருவோம்' என்று முழங்கிய திலகர் அடி பணிந்து, அகிம்சை வழியில் போராடிய தேசப் பிதா, 'அடி ........பணியாதே ஆங்கிலேயருக்கு' என்று வீறு கொண்டெழுந்த நேதாஜி, வீரன்பகத் சிங் , சுக தேவ், உத்தம் சிங், ராஜ குரு, வாஞ்சிநாதன், காமராஜர், நேரு தீரன் சின்னமலை, செண்பக ராம பிள்ளை, கட்ட பொம்மன், தேசியக்கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரன், சுதந்திர போராட்டத்திற்காக அரசுப் பணியைத் துறந்த வாஞ்சி நாதன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, ஜீவானந்தம், பாடல்களால் புரட்சி செய்த பாரதி, பாரதிதாசன், கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர் என அழைத்த நாமக்கல் கவிஞர், 16வயதில் போராட்ட களம் வந்து போராடிய தில்லையாடி வள்ளியம்மை,தீரன் சின்ன மலை, மருது சகோதரர்கள் என இந்த தேசத்திற்காக போராடிய தியாகிகள் எண்ணிக்கை கணக்கிலடங்காது.உதிரத்தாலும் உயிர் தியாகத்தாலும் எழுதப்பட்டது நம் சுதந்திர வரலாறு.தியாக வாழ்வுசும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா மிளகா... தங்கள் வாழ்வையும் வசதிகளையும் குடும்பங்களையும் இழந்து மெய் வருத்தம் பாராமல் பசி நோக்காமல் கருமமே கண்ணாய் இருந்து பெற்று தந்த சுதந்திரம். அடிமை வாழ்வைத் தகர்த்தெறிய அயராது உழைத்த தியாகிகளாலேயே நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி., என்று மேலோட்டமாகவே அவரை பற்றி அறிந்து இருக்கிறோம். செல்வச்செழிப்புள்ள குடும்பத்தில்இருந்து வந்து சொந்தமாக கப்பல் வாங்கி ஆங்கிலேயருக்கு எதிராக களமிறங்கிய தமிழன் என்பதை அவரின் வாழ்க்கை வரலாறு கூறுகிறது. ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த சமயத்தில் அவரது மனைவி அவரைப் பார்க்க வருகிறார்.தன் மனைவியிடம் துாத்துக்குடியில் விடுதலைப் போராட்டம் என்ன நிலையில் உள்ளது? நான் சிறையில் இருப்பதால் எனக்குத் தெரியவில்லை என்று கேட்டாராம்.தேசத்தையே தன் சிந்தையில் நிறுத்திய அந்த தியாகியிடம் அவர் மனைவி ஒரே ஒரு முறை உங்கள் கைகளைத் தொட அனுமதியுங்கள் என்று அந்த சிறைக் கம்பிகளுக்கிடையே கைகளை நீட்டினார். சிறையில் செக்குகளை இழுத்து காய்த்துப் போன கைகளை தன் மனைவி கண்டு கலங்க கூடாதென்று மறுத்து விட்டாராம் வ.உ.சி.வீரன் பகத் சிங்கோடு கைதான ஜதீந்தாஸ் என்னும் இளைஞன் சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து இறந்து போனானாம். இப்படியான தியாக வரலாறுகளிலே தான் நம் சுதந்திரம் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த வரலாற்று சம்பவங்களை இன்றைய தினம் நினைவு கூறுவதே சிறந்தது.
உத்தம் சிங் : உத்தம் சிங் என்ற வீரனை அவ்வளவாக அறிந்து இருக்க மாட்டோம். ஜாலியன் வாலாபாக் படுகொலையில் இறந்த ஆயிரக்கணக்கான இந்திய மக்களின் இறப்பினைக் கண்ட அங்கிருந்த சிறுவன் உத்தம் சிங் பதறுகிறான்.அப்போது கவர்னராக இருந்த ஜெனரல் டயரின் தலைமையில் தான் இந்த கொடூரம் நடந்தது என்று அறிந்த சிறுவன் பல வருடங்களுக்குபிறகு ஜெனரல் டயரை சுட்டுக் கொன்றான். துாக்கு தண்டனை பெற்ற போது அவன் சொன்னது இங்கிலாந்திலேயே என் உடலைப் புதையுங்கள். ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக என் இந்தியாவை இங்கிலாந்து ஆண்டது போல இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஒரு இந்தியன் அபகரித்துக் கொண்டான் என்ற ஆறாத அவமானம் உங்களுக்கு அமைய வேண்டும் என்று கூறி சிரித்துக் கொண்டே சாவை எதிர் கொண்டானாம். இப்படி வரலாற்றைப் புரட்ட புரட்ட பல வீரர்களின் உணர்வுகள் நம்மை உலுக்கி எடுக்கின்றன.
உலக நாடுகள் மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட பெண்மணியான காமாவிடம் தேசியக் கொடியே இல்லாத நாட்டில் இருந்து வந்திருக்கிறாயே என்று கேட்டதற்கு, தன் சேலை முந்தானையைக் கிழித்து இது தான் என் நாட்டின் கொடி என்று காட்டினாளாம் அந்த போராளி. அது தான் நம் தேசியக் கொடியாக பின்னாளில் உருவாக அடிப்படையாக அமைந்தது என்கிறது வரலாறு.அதனால் தான் பாரதி 'தண்ணீர்விட்டா வளர்த்தோம் இப் பயிரைகண்ணீர் விட்டல்லவோ வளர்த்தோம். கருகத் திருவுளமோ' என்று பாடியுள்ளார்.சுதந்திர தினம் என்பதை ஒரு விடுமுறை தினமாகவும் 'டிவி' நிகழ்ச்சிகளில் பொழுது போக்கும் நாளாகவும் எண்ணிக் கடந்து போய் விடாதீர்கள். இதைத் தான் பாட்டுக்கொரு புலவன் பாரதி'மண்ணில் இன்பங்களை விரும்பிசுதந்திரத்தின் மாண்பினை இழப்பீரோ!'என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறான்.
தேசப்பற்று : ஐ.சி.எஸ். தேர்வில் நான்காமிடம் பெற்று அரசு வேலை கிடைத்த போது அதைத் துச்சமெனத் துறந்த நேதாஜியிடம் இதைக் கேட்டு உன் தாய் வருத்தப்பட மாட்டார்களா என்று கேட்டதற்கு என் தாய் நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது என்றார். அந்த புரட்சி வீரனின் தேசப்பற்றை இன்றைய இளைஞர்கள் உள் வாங்கிக் கொள்ள வேண்டும். 120கோடிக்கும் மேலான மக்களின் வயிறுகள் உள்ள நாடு என்பதை பலவீனமாகக்கொள்ளாமல் 120கோடி மூளைகள் கொண்ட பலமான என் நாடு. இது தான் எங்கள் முதலீடு என்பதைஉணர்வோம். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிப் பெருமை கொள்ளாமல் பாருக்குள்ளே நல்லநாடு எங்கள் பாரத நாடு என்று இந்த உலகைப் பேச வைப்போம். இதய வயலில் நம்பிக்கை நாற்றுகளை விதைத்தால் வெற்றியை அறுவடை செய்ய இயலும். சுதந்திரத்தின் மாண்பினை அலட்சியப் படுத்தாமல், லட்சியப் படுத்துவோம். உதிரங்களை உரமாக்கி உதித்த சரித்திரமே சுதந்திரம் என்பதை மனதில் இருத்துவோம். கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதியில் வெற்றி அடைகிறார்கள் என்ற உண்மையை சுதந்திர போராட்ட வெற்றி நமக்கு உணர்த்தி இருக்கிறது. அசைவிலா ஊக்கம் இருந்தால் நினைத்ததை எய்த முடியும் என்பதை வரலாற்று பாடங்கள் நமக்கு உணர்த்துகின்றன.வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் அதில் பல வேதனைகளும் அவமானங்களும் துரோகங்களும் ஏமாற்றங்களுமே நிறைந்தே இருக்கின்றன. இந்த உணர்வலைகளை கடப்பதென்பது இலகுவானது அல்ல. இந்த தேசத்தின் கடைசி இளைஞன் இருக்கும் வரை இந்த தேசமும் தேசியக் கொடியும் காப்பாற்றப் படும் என்ற நம்பிக்கையை விட்டுச் சென்றுள்ளனர் நம் தலைவர்கள்.அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கவில்லை. இந்த தேசத்திற்காக வார்த்துச் சென்றுள்ளார்கள்.
என்ன செய்யலாம் : இந்த சுதந்திர தின நன்னாளில் நாம் என்ன செய்யலாம்? பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்நற்றவ வானினும் நனி சிறந்ததுவே என்பதை நாம் உணர வேண்டும். இது என் தேசம் என்ற சிந்தனை நம் அனைவருக்குள்ளும் மலர வேண்டும். ஒளி படைத்த கண், உறுதி கொண்ட நெஞ்சுடைய இளைய பாரதத்தின் கரங்களே நம் தேசத்தை வலிமையாக்கும்.இந்திய மக்கள் சிந்திய ரத்தத்தை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். பல மொழிகள் பேசினாலும் பேதங்கள் இங்கே இல்லை. பாரத தாயின் புதல்வர்களே நாம் அனைவரும் என்ற எண்ணம் உண்டாகட்டும்.நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம். அதை எந்த நாளும் காப்போம். இந்த தேசத்தை வல்லரசாக மட்டுமல்ல: நல்லரசாகவும் மாற்றுவோம். பாரத தாயின் புதல்வர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே இந்த தேச ரதம் சுழலும். வளர்ச்சி பாதையில் வீதி உலா வரும்.இது என் தேசம், இது என் சொத்து என்ற பொது நல சிந்தனை வேண்டும். நாம் விதைக்கும் நல்ல எண்ணங்கள் நம் தேசமெல்லாம் பரவட்டும். துாய்மை மிகு பாரதமாக மாற்றுவோம்; அகத்திலும் புறத்திலும்! மாற்றங்களை வெளியே தேடாமல் நம்மிலிருந்தே தொடங்குவோம்.நா நயம் மிக்கவர்களாக மட்டுமல்ல; நாணயம் மிக்கவர்களாவும் இருப்போம். இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்
.- ம.ஜெயமேரி, ஆசிரியைஊ.ஒ.தொடக்கப்பள்ளிக.மடத்துப்பட்டிbharathisanthiya10gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement