Advertisement

ஓங்கட்டும் அர்த்தமுள்ள விவாதங்கள்...

ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் முடிவானது, 2019 லோக்சபா தேர்தல் முடிவு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக அமையும் என்ற விவாதங்களை குறைத்துவிடும்.ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், 125 ஆதரவு ஓட்டுகள் பெற்று அப்பதவியை அடைந்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ், திரிணமுல் உட்பட எதிர்க்கட்சிகள், அடிக்கடி பேசும், 'மகா பெரிய கூட்டணி' இத்தேர்தலில் சுருங்கிவிட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ஹரிபிரசாத், சேவாதள தொண்டராக இருந்து உயர்ந்தவர் என்றாலும், அவருக்கு என்று கட்சியில் தனிமுத்திரை கிடையாது.இத்தேர்தல், இனி ராஜ்யசபா என்ற மேலவை அதிக விஷயங்களை விவாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு, செல்ல வேண்டி வரும். சிறிய கட்சியை சார்ந்த, எம்.பி.,க்கள், உரிய நேரத்தில் பேச வாய்ப்பு கிடைக்கும்.வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயணன் சிங், முதுகலைப் படிப்பு படித்தவர் என்பதுடன், பீஹாரில், ஹிந்தி நாளிதழில் மிக முக்கியப் பொறுப்பு வகித்தவர். முதல்வர் நிதிஷால் மதிக்கப்பட்டவர் என்பதுடன், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தத்துவத்தைப் பின்பற்றும் ஊழலற்ற தலைவர். அவர் பிறந்த பாலியா, இவரது சொந்த ஊர்.'நாம் மேனாட்டு பார்லிமென்டரி நடைமுறைகளைப் பின்பற்றினாலும், அவர்களைப் போல விவாதம் செய்வதில்லை; சபையில் கூச்சல் ஆரவாரம் ஏன்?' என்று, இவர் கேட்கிறார். அதே போல, 'நம் நாட்டின் பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தில், கற்றவர்கள் அடங்கிய பேரவையில் நீடித்த விவாதம் என்பது சமூகத்தில் இருந்தது' என்கிறார்.இவரை, நிதிஷ் ஆதரவுடன், ஆளும், பா.ஜ., வேட்பாளராக தேர்வு செய்தது, காங்கிரஸ் தலைமையின் அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிக்காட்டியது. முதலில் அகாலிதளத்தைச் சேர்ந்த, நரேஷ் குஜ்ரால் பெயர் அடிபட்டது. ஆனால், கடந்த ஒரு வாரத்தில், பீஹார் முதல்வருடன், பா.ஜ., தலைவர் அமித் ஷா உட்பட பலரும் பேசியது பலன் தந்தது. ஹரிவன்ஷ் போட்டி என்பதை, பிஜு ஜனதாதள முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு தெரிவித்து, அவரது ஆதரவை பெற்றது, அடுத்த அரசியல் தந்திரமாகும்.காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான, குலாம்நபி ஆசாத் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விரும்பியது நடக்கவில்லை.அதனால், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா, அ.தி.மு.க., - பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு, இத்தேர்தலில் மோடி உத்திகள் வெற்றியைத் தரும் என்பதை உணர்த்தியிருக்கிறது. அ.தி.மு.க.,வில் இரு கருத்துகள் இருந்தன என்பது உண்மையாயின், அக்கருத்து உள்ளவர்கள் பங்கேற்காமல் இருந்திருக்கலாம். ராகுல் தன்னை அழைத்து ஆதரவு தராததை காரணமாக்கி, கெஜ்ரிவால் கட்சி, எம்.பி.,க்கள், ஓட்டளிக்காமல் புறக்கணித்தனர். இது எந்த வகை ஜனநாயகம்?தவிரவும், தி.மு.க.,வின் கனிமொழி, தந்தை மரணம் காரணமாக சபையில் இல்லை. காங்கிரஸ் ஆதரவு, எம்.பி.,க்கள் சிலர், சபையில், 'மிஸ்சிங்!'காங்கிரஸ் கட்சி, மத்திய அரசைக் குறைகூற உரிமை கொண்டது. ஆனால், ஆண்டு முழுவதும் இரு சபைகளும், 130 நாள் நடந்த நிலைமாறி, 100 நாட்களுக்கும் குறைவாகி இருக்கிறது. இந்தநிலை மாற வேண்டும் என, தனிநபர் மசோதாவை நரேஷ் குஜ்ரால், ஏற்கனவே கொண்டு வந்திருக்கிறார். அது இனி விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டால், மக்கள் பிரதிநிதிகள் ஆற்றும் கடமைகள் வெளிச்சமாகும்.இருபது ஆண்டுகளுக்கு பின், இப்பதவிக்கு தேர்தல் என்பது, நம் ஜனநாயகத்தின் பன்முகப் பரிமாணத்தின் ஒரு சிறப்பாகும். தவிரவும், காங்கிரஸ் அல்லாத ஒருவர் இப்பதவியிலும் இருப்பதா என்ற வேதனை, ராகுலுக்கும், அவர் அன்னை சோனியாவுக்கும் வரலாம். அதற்கு என்ன செய்வது? சோனியாவும், 'சில சமயங்களில் எங்களுக்கு தோல்வி வரும்' என்று அதைப் பிரதிபலிக்கிறார்.சபையின் தலைவராக உள்ள வெங்கையா, அதிக அளவு பேசுவதாக காங்கிரசார் புகார் கூறியிருக்கின்றனர். ஆனால், இனி சபை சட்டதிட்ட நுணுக்கங்களின் படி வெங்கையாவும், புதிய துணைத்தலைவர் ஹரிவன்ஷும், கேள்வி நேரத்தில் இருந்து ராஜ்யசபாவை இயங்கச் செய்யும் நடைமுறை, அடுத்த கூட்டத் தொடரில் உருவாகலாம். அதற்குள் ராகுலும், பா.ஜ., ஆட்சியை விமர்சிப்பதால், மட்டுமே, மக்கள் ஆதரவை திரட்டலாம் என்பதைக் கைவிட்டு, பொறுப்பு உள்ள எதிர்க்கட்சியாக காங்கிரசை வளர்க்க முன்வருவது நல்லது.அதற்கு முன்பாக, 2019ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் என்ற தொனியில் பேசுவதை மாற்றி, காத்திருந்து பிறகு, நிலைமைக்கு ஏற்ப சிந்திக்கலாம் என்பதை, இத்தேர்தல் முடிவு காட்டுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement