Advertisement

ஊழல் கூட்டணி வளர்ச்சி...

எங்கெல்லாம் சுற்றிய ஊழல் அம்சம், தேர்வுத் தாள் மறுகூட்டலிலும் வந்திருப்பது, நாம் எதில் முன்னேறி இருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது. அதுவும், பொறியியல் படிப்புகளில் சிறந்ததாக கருதும், அண்ணா பல்கலையில், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி, ஜி.வி.உமா வழிகாட்டியாக திகழ்ந்து, இப்போது பிடிபட்டிருக்கிறார். அதில், ஒரு வருமானக் கூட்டணி உதயமாகி இருப்பது தெரிகிறது. அண்ணா பல்கலையில், வசதி வாய்ந்தவர்கள் மட்டுமே படிப்பதில்லை. பொறியியல் படிப்பில், என்று, எளிதாக முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகம் உருவாயினரோ, அன்றே, அது கல்வியில் சமத்துவம் ஏற்பட்டதன் அடையாளமாகும்.அண்ணா பல்கலையின் கீழ், 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. ஒரு செமஸ்டரில் மாணவர் வாங்கிய மதிப்பெண் குறைவாக கருதி, அது அவரது எதிர்காலக் கனவை சிதைக்கும் என்ற கருத்தில், மறுகூட்டலுக்கு அனுமதிக்கப்படுகிறது. அப்படி விண்ணப்பிக்கும் மாணவ - மாணவியர் ஆயிரக்கணக்கில் இருப்பர். இப்போது வெளியான தகவலில், பெண் அதிகாரி உமா தலைமையில் இயங்கிய, 10 ஆசிரியர்கள் இந்த ஊழலில் சிக்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைகளில், எத்தனை, மாணவ - மாணவியர் பணம் தந்து, மதிப்பெண் பட்டியலை வளப்படுத்திக் கொண்டனர் என்பது தெரியலாம். அதைக் கிளறி நடவடிக்கை என்பது, அதிக நிர்வாக குழப்பத்தை தரலாம். பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் பெற, செக்ஸ் உதவிகள், மதிப்பெண் பட்டியல் மாற்ற லஞ்சம் என்கிற போது, இம்மாதிரி கல்வி கற்றவர்களால், என்ன பயன்?ஏனெனில், அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா, 'இது பல்கலை வளாகத்தில் நடந்த விஷயமல்ல; உறுப்புக் கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்டது' என்றிருக்கிறார். அது மட்டும் அல்ல, பொறியியல் கல்லுாரிப் படிப்பில் தொடர் தோல்வி அடைபவர்கள் அடுத்த, 5 - 6 ஆண்டுகள் மட்டுமே தேர்வு எழுதும் முறை தேவை என்றதும் நல்ல யோசனை. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை விட, ஊழலை வெறுக்கும் இவர் செயல், இவரைத் தேர்வு செய்த, கவர்னரின் பெருமையை உயர்த்தும். தமிழகத்தில் பொறியியல் கல்லுாரிகளின் அபார வளர்ச்சி, உயர்கல்வியில் ஒழுங்கீனத்தை வளர்த்திருக்கிறது என்றால், அது, பீஹார் மாநில கல்விக் கலாசாரம் இங்கு நுழைந்து நிற்பதன் அடையாளம். அத்துடன், தேவையில்லாமல், பல ஆண்டுகளுக்கான காலி, 'மார்க் ஷீட்' பிரின்ட் செய்யப்பட்ட தகவலும், இந்த ஊழலின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இது தமிழகம், 'விஞ்ஞானபூர்வ ஊழல்' செய்வதில் முன்னோடி என்பது, நமக்கு அதிக கறை தரும் செய்தியாகும். இப்போது, முக்கியமாக பிடிபட்ட பெண் அதிகாரி, ஏற்கனவே முறையாக கேள்வித்தாள் திருத்தாத புகார் கூறப்பட்ட பலர் மீது நடவடிக்கை எடுத்ததாகவும், அதனால் இன்று அவர் சிக்கியதாக, மற்றொரு குழப்பம் வந்திருக்கிறது.இது தேவையற்றது; முதலில் இப்போது நடைபெறும் விசாரணை வெளிப்படைத் தன்மையாக இருப்பதுடன், தமிழக உயர்கல்வித் துறை, இதற்கான முழு ஒத்துழைப்பையும் தரவேண்டும்.ஏற்கனவே பொறியியல் கல்லுாரிகளில், பல இடங்கள் காலியாகி வருகிறது. அக்கல்லுாரிகள் இனி என்ன பணியாற்றப் போகிறது... அதில் உள்ள கல்விக்கூட இட வசதிகள் என்னவாகும்?திறனறி கல்விக்கும், பொறியியல் படிப்புக்கும் தொடர்பு காணும் வகையில், இத்துறை மேம்படுத்தப்படாமல், கல்லுாரி வரிசைப் பட்டியல் மட்டும் மாணவர்களுக்கு பயன் தருமா?பல்வேறு கட்சிகள் இதில் கருத்து கூறும்போது, இதற்கு முன், அந்தந்தக் கட்சிகள் ஆட்சியில் இருந்த போது, இம்மாதிரி சம்பவங்கள் நடந்ததாக தகவல் தெரியுமா அல்லது நிறைய பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கி, அதில் ஒரு இலக்கை அடைவதற்காக எதையும் ஆராயவில்லையா என்பதையும், மக்கள் மன்றத்தில் கூறியாக வேண்டும். 'பள்ளிக் கல்வியில் தரம் அதிகரிப்பதை, தமிழக அரசு உறுதி செய்து வருகிறது' என்கிறார், கல்வி அமைச்சர் செங்கோட்டையன். அதில் அவர் மேற்கொண்ட மாற்றங்கள் வெளிப்படையாக காணப்படுகின்றன. தேர்வு, வேலைவாய்ப்பு என்ற கண்ணோட்டத்தில், கல்வியை, பிரிட்டிஷார் முன்பு கொண்டு வந்த பாணியை பின்பற்றி, அதன் பலனை அறுவடை செய்கிறோம்.ஒதுக்கீடு, முதல் தலைமுறையினர் படிப்பு, மாணவியர் அதிக சேர்க்கை அல்லது புதிய புதிய படிப்புகள் அதிகரிப்பு என்று வருகிற போது, அதற்கேற்ற, 'சிஸ்டம்' என்ற அமைப்பு சீராக வேண்டும். 'எதிலும் ஊழல்' என்ற கதை தொடருமானால், 'கற்பவை கற்க' என்ற குறளின் வாசகத்திற்கு, எதைச் செய்தாலும் ஊழல் மையமாக இருக்கட்டும் என்ற அர்த்தம், இனி வரும் அபாயம் எதிரொலிக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement